Published:Updated:

குண்டுவெடிப்பு எதிரொலி! - இந்திய கடலோரப் பகுதியைக் கண்காணிக்கும் ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள்

இரா.மோகன்
சிந்து ஆர்
குண்டுவெடிப்பு எதிரொலி! - இந்திய கடலோரப் பகுதியைக் கண்காணிக்கும் ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள்
குண்டுவெடிப்பு எதிரொலி! - இந்திய கடலோரப் பகுதியைக் கண்காணிக்கும் ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள்

இலங்கையில் நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்திய – இலங்கை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில், நேற்று காலை ஒரே சமயத்தில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதிலிருந்து மீளும் முன்னரே, மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இச்சம்பவங்களில், இதில், 290 பேர் வரை  உயிரிழந்திருப்பதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில் ஆயிரக்கணக்கானோர் வழிபாட்டிற்காகத் திரண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. மேலும், கொழும்பில் உள்ள பல்வேறு ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில், இந்தியர்கள் 6 பேர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 24 பேர், இலங்கைப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதனிடையே, நேற்று மாலை முதல் இந்திய – இலங்கைக் கடலோர எல்லைப்- பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, காரைக்கால், தூத்துக்குடி, மண்டபம் பகுதிகளில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையினர், இந்தியா – இலங்கை இடையேயான சர்வதேச  கடல்பரப்பை தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். காரைக்கால் கடலோரக் காவல் படையினர், நாகப்பட்டினம் வரையிலும், மண்டபம் கடலோரக் காவல்படையினர் பாக் நீரினைப் பகுதியிலும், தூத்துக்குடி கடலோர காவல்படையினர் மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும், ஹோவர் கிராஃப்ட் கப்பல், ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள்மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், சென்னைக் கடலோர காவல்படை மையத்திலிருந்து டோனியர் ரக விமானங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.

இதுதவிர, தமிழக கடலோரக் காவல் குழும போலீஸாரும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஓலைக்குடா, மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டுவருகின்றனர். ராமேஸ்வரம் தீவிற்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து தென்னிந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடல்வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை அதிநவீன படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளையும் சோதனையிட்டனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான முறையில் படகுகள் தென்பட்டால் உடனே தகவல் அளிக்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.