தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை! | Life sentence for youth killed near thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (22/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (22/04/2019)

தஞ்சையில் சிறுவனை கொலை செய்து புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

தஞ்சாவூரில், சிகரெட் குடித்ததை வீட்டில் சொல்லி விடுவேன் என்று கூறிய சிறுவனைக் கொலை செய்து புதைத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சாவூர் பாப்பாநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மருந்து விற்பனையாளராக பணியாற்றும் இவருக்கு இரண்டு மகன்கள். இவரின் இரண்டாவது மகன் கிஷோர் தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர்  23-ம் தேதி வீட்டுக்கு அருகே விளையாடச் சென்ற கிஷோரைக் காணவில்லை. மறுநாள் 24-ம் தேதி இது தொடர்பாக கிஷோரின் தாயார் கவிதா கொடுத்த புகாரின்பேரில் தமிழ் பல்கலைக்கழக போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன கிஷோரை தேடி வந்தனர்

குடும்பம்

இந்த நிலையில், 26-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படித்துக்கொண்டிருந்த அரவிந்த் என்ற இளைஞர் கிஷோரை கொலை செய்துவிட்டதாக, அப்பகுதி வி.ஏ.ஓ-விடம் பயத்தில் சரணடைந்தான். இதையடுத்து வி.ஏ.ஓ. தமிழ் பல்கலைக்கழக போலீஸாருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அரவிந்த்தை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அரவிந்த் அப்பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் அருகே உள்ள புதரில் மறைந்துகொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த இடத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்த கிஷோர் இதைப் பார்த்துவிட்டதாகவும் தெரிகிறது. மேலும், அவன் இதை வீட்டில் சொல்லி விடுவேன் எனக் கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரின் கழுத்தை நெறித்திருக்கிறான். ஏற்கெனவே கிஷோருக்கு வலிப்பு நோய் இருந்ததால் அந்தச் சமயத்தில் வலிப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளான்.

பயந்துபோன அரவிந்த், இரவு நேரத்தில் தனது வீட்டுக்குப் பக்கத்தில் காலியாகக் கிடந்த மனையில் 3 அடி ஆழத்துக்கு குழிதோண்டி கிஷோர் உடலைப் புதைத்துவிட்டான். போலீஸார் நடத்திய விசாரணையில் இதை ஒப்புக்கொண்டான். இதைத் தொடர்ந்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸார் உடலை தோண்டி எடுத்தனர். இந்தச் சம்பவம் அந்தச் சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையில் இன்று கொலையாளி அரவிந்த்துக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302-ல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், 10,000 அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை. இந்திய தண்டனைச் சட்டம் 201-ல் கொலைக் குற்றத்தை மறைத்ததால் 7 ஆண்டு சிறையும், 10,000 அபராதமும், கட்டத் தவறினால் ஓர் ஆண்டும், தண்டனை இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை