Published:Updated:

`2016-ல் கேரளாவை உளவு பார்த்தோம்; தற்போது தாக்குதலுக்குத் திட்டமிட்டோம்!'- என்.ஐ.ஏ விசாரணையில் அதிர்ச்சி

மலையரசு
`2016-ல் கேரளாவை உளவு பார்த்தோம்; தற்போது தாக்குதலுக்குத் திட்டமிட்டோம்!'- என்.ஐ.ஏ விசாரணையில் அதிர்ச்சி
`2016-ல் கேரளாவை உளவு பார்த்தோம்; தற்போது தாக்குதலுக்குத் திட்டமிட்டோம்!'- என்.ஐ.ஏ விசாரணையில் அதிர்ச்சி

இலங்கையைப் போன்றே கேரளாவிலும் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகர் கொழும்பில் ஹோட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் இந்த மனித குண்டுவெடிப்பில் அந்த நாட்டில் செயல்பட்டுவரும் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளதால் இது தொடர்பாக இலங்கை விசாரணை செய்து வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் கேரளாவில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணை செய்தது. இது தொடர்பாக ஒருவரைக் கைதும் செய்துள்ளது என்.ஐ.ஏ. கைது செய்யப்பட்டவரின் பெயர் ரியாஸ் அபுபக்கர். அவரிடம் விசாரணை நடத்தியபோது சில அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. 

இவர் இலங்கைக் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் செயல்களால் ஈர்க்கப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார் எனவும் அவருடைய பேச்சுகளைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கும் மேலாகப் பார்த்து வந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள வேளையில் அவரும் இதை ஒத்துக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின்போது இலங்கையில் நடந்தது போன்ற மனித வெடிகுண்டு தாக்குதல் ஒன்றைக் கேரளாவில் நடத்தவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக ஜஹ்ரான் ஹாஷிம் 2016-ம் ஆண்டு இருமுறை கேரளாவை வந்து பார்த்துச் சென்றதும் உறுதியாகியுள்ளது. 

அவர் வந்துசென்றதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக புலனாய்வு அதிகாரிகள் போர்ட் கொச்சி, கோவளம் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். அதேநேரம் தற்போது ரியாஸ் உடன் சேர்ந்து ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததாக மூன்று பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் மூவரும் சேர்ந்துதான் காசர்கோடு பகுதி இளைஞர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர்ப்பதற்காக மூளைச் சலவையில் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது எனப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.