Published:Updated:

சிசிடிவி-யில் சிக்காத கொள்ளையர்கள்! - 12 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

JAYAVEL B
சிசிடிவி-யில் சிக்காத கொள்ளையர்கள்! - 12 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்
சிசிடிவி-யில் சிக்காத கொள்ளையர்கள்! - 12 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையில் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

செங்கல்பட்டு டோல்கேட் அருகே, காரில் கொண்டுசெல்லப்பட்ட 12 கோடி மதிப்பிலான நகைகளைக் காவல் துறையினர் என்று சொல்லி மர்ம கும்பல் ஒன்று காரைக் கடத்தி, கொள்ளையடித்துள்ளது. எந்த சிசிடிவி-யிலும் கொள்ளையர்கள் பதிவாகாததால் அவர்களைப்  பிடிப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. கொள்ளையர்களைப் பற்றி துப்பு கிடைக்காததால், காவல் துறையினர் திணறிவருவதோடு, தேடும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மதுரை கே.கே. நகரில், சொகுசு ஹோட்டலில் நடைபெற்ற தங்க நகைக் காட்சிக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றிலிருந்து, 12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொண்டுசெல்லப்பட்டன. தங்க நகைக்காட்சி முடிந்தபிறகு, அந்த நகைகளையும் நகையுடன் கொண்டுசெல்லப்பட்ட பணத்தையும் மீண்டும் சென்னைக்குக் கொண்டுவந்தனர். நகைக்கடை மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் மூன்று பேர் இனோவா காரில் சென்னைக்குப் பயணம்செய்தனர். மதியம் 2.30 மணியளவில், செங்கல்பட்டு டோல்கேட் பகுதியைத் தாண்டியதும், பரனூர் பாலத்தின்மீது மற்றொரு இனோவா கார், நகை கொண்டுசென்ற காரை மறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையைச் சேர்ந்தவர் எனச் சொல்லி அடையாள அட்டையைக் காட்டினார்.

உங்கள் நகைக்கடை உரிமையாளர்மீது சிலை கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது. பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டும் அவர் எங்களிடம் ஆஜராகவில்லை. உங்கள் காரை சோதனையிட வேண்டும் என காரில் உள்ள நகைகளைக் கைப்பற்றினர். இதுகுறித்து உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி, கார் ஓட்டுநர் அப்துல் காதர் என்பவரை மிரட்டி, காரில் இருந்த நகைக்கடை ஊழியர்கள் நான்கு பேருடன் அந்த காரை அந்த மர்ம நபர் ஓட்டிச் சென்றார். நகைக் கடையினர் வந்த காருடன் கொள்ளையர்களின் இனோவா வாகனமும் பின் தொடர்ந்து சென்றுள்ளது. திடீரென ஒரகடம் வனப்பகுதியில் காரை நிறுத்தி, அந்த காரில் பயணம்செய்ய நகைக்கடை ஊழியர்கள் அனைவரையும் இறக்கிவிட்டனர். அந்த காரில் நான்கு பெட்டிகளில் இருந்த நகைகளையும் 8 லட்சம் பணத்தையும் கொள்ளையர்கள் வந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

நகை கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்த ஊழியர்கள், நகைக்கடை உரிமையாளருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் நகைக்கடை மேலாளர் தயாநிதி, சில மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்ற தகவலால் அவரையும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மதுரையில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதனையிடுவதற்கு ஒரு டீம் மதுரைக்குச் சென்றுள்ளது. அதுபோல, நேற்று நள்ளிரவு வரை காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி ஆகியோர், நகைக்கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். கொண்டுசென்ற நகை எவ்வளவு, அதில் விற்பனையான நகைகள் மற்றும் அதற்கான ரசீது உள்ளிட்ட விவரங்களைக் காவல் துறையினர் நகைக்கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். மேலும், நகைக்கடை ஊழியர்களின் செல்போன்கள் விசாரணைக்காகப் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இன்றும் நகைக்கடை ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, காவல் துறையினரிடம் பேசினோம். “இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்” என்கிறார்கள்.