Published:Updated:

`மலருக்கு இப்படியொரு நிலைமை வரும்னு எதிர்பார்க்கல!'- கண்கலங்கும் எழில்நகர் மக்கள்  

எஸ்.மகேஷ்
`மலருக்கு இப்படியொரு நிலைமை வரும்னு எதிர்பார்க்கல!'- கண்கலங்கும் எழில்நகர் மக்கள்  
`மலருக்கு இப்படியொரு நிலைமை வரும்னு எதிர்பார்க்கல!'- கண்கலங்கும் எழில்நகர் மக்கள்  

சென்னை துரைப்பாக்கம் எழில்நகர் பகுதியில் அழுகிய நிலையில் மலர் என்ற பெண்ணின் சடலத்தை போலீஸார் இன்று மீட்டுள்ளனர். அவரின் வீடு வெளிப்பக்கமாகப் பூட்டியிருப்பதால் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. 

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளி. இவரின் மனைவி மலர். இவர்களின் மகள் சசிகலா. கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பழனி சென்றுவிட்டார். இதனால் குடும்பச் சுமையை மலர் தாங்கினார். சித்தாள் வேலை செய்து சசிகலாவை வளர்த்தார். 

இந்தநிலையில் சசிகலாவுக்கு திருமணம் நடந்து, அவர் திருவண்ணாமலையில் குடியிருந்துவருகிறார். மலர் மட்டும் எழில்நகர் வீட்டில் குடியிருந்தார். சித்தாள் வேலைக்குச் செல்லும் மலருக்கும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த மேஸ்திரி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர், மலர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். இந்தநிலையில் கடந்த இரண்டு நாள்களாக மலரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வெளியூருக்கு மலர் சென்றிருக்கலாம் என்று கருதினர். 

இன்று காலை மலரின் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மலரின் வீட்டின் அருகில் குடியிருக்கும் பச்சையம்மாள் என்பவர் கண்ணகி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அழுகிய நிலையில் மலரின் சடலம் கிடந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலரின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பூட்டிய வீட்டுக்குள் மலர் இறந்து கிடப்பதால் அவரை யாராவது கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம். மேலும், கணவரைப் பிரிந்து வாழும் மலருக்கும் மேஸ்திரிக்கும் பழக்கம் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளோம். அதன்பிறகுதான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மலரின் வீட்டுக்கு மேஸ்திரி வந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு மலரின் வீடு வெளியில் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அவர் இறந்துகிடந்துள்ளார். அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் கொலை நடந்து சில தினங்களாகி இருக்க வேண்டும். மேலும், மலருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று தெரியவில்லை. எங்களின் சந்தேகப்பார்வை தேனாம்பேட்டை மேஸ்திரி மீது உள்ளது. சம்பவத்தன்று மலரின் வீட்டுக்கு யார், யார் வந்தார்கள் என்ற விவரங்களைச் சேகரித்துவருகிறோம். தேனாம்பேட்டையில் உள்ள மேஸ்திரியின் வீட்டுக்கு போலீஸார் சென்றுள்ளனர்" என்றார். 

மலரின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, சித்தாள் வேலை செய்து மலர், வாழ்க்கையை நடத்திவந்தார். அவரை வேலைக்கு அழைத்துச் செல்லதான் தேனாம்பேட்டை மேஸ்திரி வருவார். மற்றப்படி என்ன நடந்தது என்று தெரியவில்லை. மலரின் வீடு எப்போதும் பூட்டியேதான் இருக்கும். இதனால் எங்களுக்கு சந்தேகம் வரவில்லை. தூர்நாற்றம் வீசியதால்தான் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தோம். கஷ்டப்பட்டு மகளை திருமணம் செய்து வைத்த மலருக்கு இப்படியொரு நிலைமை வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என்கின்றனர். 

இதற்கிடையில் மலரின் மரணம் குறித்து தகவலறிந்து சென்னை வந்த அவரின் மகள் சசிகலா, கதறி அழுதார். அவர், தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பூட்டிய வீட்டுக்குள் மலர் இறந்து கிடந்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.