`உங்க செல்போன் நம்பரைக் கொடுங்க!' - மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த 3 காவலர்கள் சஸ்பெண்டு | nellai police are suspended for sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:15:00 (09/05/2019)

`உங்க செல்போன் நம்பரைக் கொடுங்க!' - மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த 3 காவலர்கள் சஸ்பெண்டு

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப் போலவே நெல்லையிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில், போலீஸாரே ஈடுபட்டிருப்பதுதான் வேதனையின் உச்சம். பாலியல் புகார் தொடர்பாக மூன்று போலீஸார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 

பாலியல் புகார்

நெல்லை மாவட்டம் சுரண்டையில், காமராஜர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படித்துவருகிறார்கள். கல்லூரி முடிந்த பின்னர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவ, மாணவியர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். சில வாரங்களுக்கு முன் அங்கு வந்த போலீஸார், பேசிக்கொண்டிருந்த மாணவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். 

பின்னர், மாணவிகள் சிலரை மட்டும் அழைத்த போலீஸார், அவர்களின் செல்போனை வாங்கி சோதனையிட்டுள்ளனர். அந்த நேரத்தில் மாணவிகளின் நம்பரை குறித்துக்கொண்ட போலீஸார், இரவு நேரங்களில் மாணவிகளை செல்போனில் அழைத்து பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசியுள்ளனர். இது தொடர்பாக வெளியிலோ பெற்றோரிடமோ தகவல் தெரிவித்தால் மாணவர்களுடன் பேசியது பற்றி வெளியில் சொல்வதாக மிரட்டியிருக்கிறார்கள். 

அதனால், போலீஸாரின் தொல்லைகளை மாணவிகள் சகித்து வந்துள்ளனர். இரு காவலர்களின் இந்தப் பாலியல் தொல்லைக்கு பெண் காவலர் ஒருவரும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறார். அவரும் மாணவிகளை அழைத்து மிரட்டியுள்ளார். அவர், தனது செல்போனில் மாணவிகளிடம் பேசிவிட்டு, போனை சக காவலர்களிடம் கொடுத்து ஆபாசமாகப் பேசவைத்திருக்கிறார். 

இந்தத் தொல்லை எல்லை மீறிப் போனதால் அச்சம் அடைந்த இரு மாணவிகள், பெற்றோரிடம் இது பற்றித் தெரிவித்துள்ளனர். உடனடியாக பெற்றோர் சென்று கேட்டதற்கு, அவர்களை மிரட்டிய காவலர்கள், பொய்ப் புகாரில் உள்ளே தள்ளிவிடுவதாக எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர், நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்  அருண் சக்திகுமாரிடம் புகார் அளித்தனர். 

பாலியல் புகார்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாதுகாப்பு அளிக்கவேண்டிய போலீஸாரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அறிந்த மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார், உடனடியாக இரு காவலர்களையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தார். அத்துடன், இந்தப் பாலியல் புகார்குறித்து ஆலங்குளம் டி.எஸ்பி சுபாஷினி விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

அதன்படி விசாரணை நடத்தியதில், காவலர்கள் அத்துமீறி செயல்பட்டது உறுதியானது. மேலும் சிலருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்த விசாரணையில், பொள்ளாச்சி சம்பவம் போன்று தோண்டத்தோண்ட பல்வேறு சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால் முதல்கட்டமாக சுரண்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் முருகேசன், கண்ணன் மற்றும் பெண் காவலர் சரஸ்வதி ஆகியோரை சஸ்பெண்டு செய்து எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.