`என் நம்பரை ஏன் பிளாக் லிஸ்ட்டில் போட்டாய்!'- வீடு புகுந்து மாணவியைக் கொன்ற கல்லூரி மாணவன் | Cuddalore Girl killed by his lover

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (09/05/2019)

கடைசி தொடர்பு:16:27 (10/05/2019)

`என் நம்பரை ஏன் பிளாக் லிஸ்ட்டில் போட்டாய்!'- வீடு புகுந்து மாணவியைக் கொன்ற கல்லூரி மாணவன்

காதலன் பேசாததால் அவரது செல்போன் நம்பரை காதலி பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன், வீடு புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் விருத்தாசலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட கல்லூரி மாணவி திலகவதி

விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம் எருமனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று திலகவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது வீட்டுக்கு வந்த நபர் திலகவதியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திலகவதி தன் தாய்மாமா மகேந்திரனுக்குப் போன் செய்து கூறியுள்ளார். உடன் அங்கு சென்ற மகேந்திரன் ரத்த வெள்ளத்தில் இருந்த திலவகதியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``இருவரும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். தற்பொழுது திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், ஆகாஷ் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கிரிக்கெட் விளையாடச் சென்ற ஆகாஷ், திலகவதியிடம் செல்போனில் பேசுவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலகவதி, ஆகாஷ் செல்போன் நம்பரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார். நேற்று திலகவதி வீட்டுக்கு ஆகாஷ் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த திலகவதியிடம், என் நம்பரை ஏன் பிளாக் லிஸ்ட்டில் போட்டாய் என்று ஆகாஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ் கத்தியால் திலகவதியின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமைடந்த திலகவதி இறந்தார். இன்று ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினர்.