`இவரைத்தான் காதலிக்கிறேன்; திருமணம் செய்து வையுங்கள்!'- அம்மாவின் எதிர்ப்பால் உயிருக்குப்போராடும் சிறுமி | Ayanavaram girl badly injured after fall from second floor

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (09/05/2019)

கடைசி தொடர்பு:15:50 (09/05/2019)

`இவரைத்தான் காதலிக்கிறேன்; திருமணம் செய்து வையுங்கள்!'- அம்மாவின் எதிர்ப்பால் உயிருக்குப்போராடும் சிறுமி

சிறுமி

காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த 17 வயதுச் சிறுமி, இவரைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று அம்மாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். 

சென்னை அயனாவரம், வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் குடியிருந்துவருபவர் லட்சுமி (42) இவரின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். லட்சுமிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு 17 வயதாகுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவர், வீட்டில் இருந்துவருகிறார். இந்த நிலையில் மூன்றாவது மாடியிலிருந்து அவர் விழுந்து உயிருக்குப் போராடினார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்ததும் அயனாவரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``லட்சுமியின் மகள், வியாசர்பாடியைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். அவரை நேற்று இரவு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அம்மாவிடம், இவரைத்தான் காதலிக்கிறேன். திருமணம் செய்து வையுங்கள் என்று தைரியமாகக் கூறியுள்ளார். அப்போது அம்மாவுக்கு வேண்டப்பட்ட ரயில்வே ஊழியர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளார். அவர், காதலன் என்ன வேலை பார்க்கிறார், அவரின் குடும்பம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் லட்சுமி, தன்னுடைய மகளிடம் கல்யாணம் குறித்து யோசித்து முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். 

இந்தநிலையில்தான் லட்சுமியின் மகள், வீட்டின் பால்கனியிலிருந்து கீழே விழுந்துள்ளார். மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததில் சிறுமியின் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

சிறுமி மாடியிலிருந்து விழுந்த சம்பவம் குறித்து லட்சுமி, ரயில்வே ஊழியர் ஆகியோரிடம் விசாரித்துவருகிறோம். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறிவருகின்றனர். பால்கனியில் சிறுமி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துவிட்டதாக முதலில் தெரிவித்தனர். ஆனால், காதலுக்கு எழுந்த எதிர்ப்பால் சிறுமி, மாடியிலிருந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. சிகிச்சை பெறும் சிறுமி, பேசும் நிலையில் இல்லை. அவரிடம் விசாரித்தால் உண்மை என்னவென்று தெரியும்" என்றனர். 

மூன்றாவது மாடியிலிருந்து சிறுமி கீழே விழுந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.