Published:Updated:

மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த ஆசிரியர் பகவான் பஞ்சாயத்து!

எஸ்.மகேஷ்
மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த ஆசிரியர் பகவான் பஞ்சாயத்து!
மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த ஆசிரியர் பகவான் பஞ்சாயத்து!
மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த ஆசிரியர் பகவான் பஞ்சாயத்து!

 ஆசிரியர் பகவானை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பகவான், ஆசிரியை சுகுணா ஆகியோரை  மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் இடமாற்றியது. இதில் ஆசிரியை சுகுணா, வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். ஆனால், ஆசிரியர் பகவானை வேறுபள்ளிக்கு மாற்றக்கூடாது என்று மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இடமாறுதல் உத்தரவைப் பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை கட்டியணைத்த மாணவ, மாணவிகள் கண்ணீர்மல்க பாசப்போராட்டத்தை நடத்தினர். இந்தச் சம்பவம் மீடியாக்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகின. இதனால் ஆசிரியர் பகவான் பிரபலமடைந்தார். மாணவர்களுக்காக அவரின் இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதே பள்ளியில் பணியைத் தொடர்ந்தார் பகவான். அதன் பிறகு ஆசிரியர் பகவானைப்போல கல்வி கற்பிக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டார். 

இன்று காலை பகவான், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது. உடனடியாக என்ன என்று விசாரித்தோம். பகவான் மீது புகார் கொடுத்தவர் ஆசிரியர் கவிதா என்று தெரியவந்தது. கவிதாவின் அம்மாவிடம் பேசினோம். ``சொந்தக்கார பையன் பகவான் எங்கள் வீட்டின் அருகில்தான் அவருடைய வீடு உள்ளது. இதனால் என் மகள் ஆசிரியர் கவிதாவுக்கும் பகவானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஏழு ஆண்டுகளாகப் பழகினார்கள். திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். அதை என் மகள் நம்பினாள். 

மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த ஆசிரியர் பகவான் பஞ்சாயத்து!

இந்தச் சமயத்தில் பகவானுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கேள்விப்பட்டோம். உடனடியாக பகவான் வீட்டில் கேட்டோம். அதற்கு அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை. பகவான் இல்லையென்றால் என் மகள் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார். இதனால்தான் பகவான் மீது என் மகள் புகார் கொடுத்துள்ளார" என்றார் கண்ணீர்மல்க 

கவிதாவின் அப்பா நாதமுனி மற்றும் உறவினர்கள் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காத்திருந்தனர். நேற்றிரவு, திருத்தணி போலீஸார் பகவானை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பகவான் தரப்பில் சிலர் கவிதாவிடமும் அவரின் குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு கவிதா, தான்கொடுத்த புகாரை திரும்பப் பெறுவதாகக் காவல் நிலையத்தில் கூறினார். இதையடுத்து ஆசிரியர் பகவான், காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்தார். 

இதுகுறித்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் கேட்டதற்கு, ``பகவான், தன்னைக் காதலித்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக ஒரு பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில்  பகவானிடம் விசாரணை நடத்தினோம். அதற்குள் இருதரப்பினரும் சமரசமாகிவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார். 

போலீஸ் விசாரணையில் பகவான் என்ன கூறினார் என்று கேட்டதற்கு, ``நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கவும் இல்லை. திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், பெண்ணின் தரப்பில் காதலித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையால் ஆசிரியர் பகவான் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பின்னணியில் பகவானுக்காகப் புகார் கொடுத்த பெண்ணிடம் சிலர் பேசியதே காரணம்" என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

 ஆசிரியர் பகவானிடம் பேச பலதடவை முயற்சி செய்தோம். ஆனால், அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். 

Vikatan