`வீடு முழுவதும் பப்பியின் ரத்தம்...!' - மூன்றரை வயது சிறுவனின் வாக்குமூலத்தால் சிக்கிய தாய் | mother arrested in thodupuzha child murder case

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/05/2019)

கடைசி தொடர்பு:15:22 (13/05/2019)

`வீடு முழுவதும் பப்பியின் ரத்தம்...!' - மூன்றரை வயது சிறுவனின் வாக்குமூலத்தால் சிக்கிய தாய்

படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காகச் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

அருண் ஆனந்த்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் இறந்த பிறகு அவரின் உறவினர் முறைகொண்ட அருண் ஆனந்த் என்பவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு 7 வயதில் ஒரு மகனும், மூன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் அருண் ஆனந்த்தும், அந்தப் பெண்ணும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தன் இரு மகன்களையும் வீட்டிலேயே பூட்டி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து இருவரும் உணவருந்திவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது சகோதரர் இருவரும் உறங்கிவிட்டனர். 

அருண் ஆனந்த்

இருவரையும் அந்தப் பெண் எழுப்ப முயன்றபோது மூன்றரை வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதைப் பார்த்த அருண் ஆனந்த் ஆத்திரமடைந்து அவனைக் கழிவறைக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி சிறுவனின் அண்ணனைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்துள்ளான் அந்த 7 வயது சிறுவன். இந்தக் கொடூர தாக்குதலில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவன் மூளைச் சாவு அடைந்தான். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவன் 10 நாள்களுக்குப் பின் மரணமடைந்தான். கேரளாவை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் இப்போது திடீர் திருப்பமாகச் சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாய்

இவரது கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அவரது இரண்டாவது மகனின் வாக்குமூலம். தனது அண்ணனை பப்பி என அழைக்கும் அந்தச் சிறுவன், ``பப்பியை அப்பா கன்னத்தில், தலையில் அடித்தார். காலைப் பிடித்து பப்பியை கீழே எறிந்தார். தலையை சுவற்றில் முட்டினார். கீழே விழுந்த பப்பி எந்திரிக்கவில்லை. வீடு முழுவதும் ரத்தம் சிந்தியிருந்தது. பிறகு பப்பியை அம்மாவும், அப்பாவும் காரில் எங்கோ கொண்டு சென்றனர்" என அந்த மூன்றரை வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக சிறுவன் தாக்கப்பட்ட பிறகு 50 நிமிடங்கள் வரை அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் இருந்துள்ளனர். அதன்பிறகு மருத்துவமனைக்குத் தன் மகனை அழைத்துச் சென்ற அந்தப் பெண் அங்கு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்துள்ளார். 

சிறுவனின் தாய்

தன் காதலனைக் காப்பற்ற வேண்டும் என அவர் அளித்த முரணான தகவல்களால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீஸில் தெரிவிக்க, போலீஸ் நடத்திய விசாரணையில் காதலன் உண்மையை ஒத்துக்கொண்ட பின்பும் என்ன நடந்தது என அந்தப் பெண் சொல்லவில்லை. நீதிமன்றத்திலும் அவர் வாய் திறக்கவில்லை. ஆனால், தனது மனதில் பதிந்த அந்தக் கொடூரத் தாக்குதலை மூன்றரை வயது சிறுவன் போலீஸிடம் புட்டுப் புட்டு வைக்க, தற்போது காதலனை தப்ப வைப்பதற்காக மகன் கொலை செய்யப்பட்ட குற்றத்தை மறைத்து வைத்த குற்றத்துக்காக அந்தப் பெண் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக ஒன்றரை மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் சிறுவன் அளித்த வாக்குமூலத்தின்படி வழக்கு முடியும் தறுவாயில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க