`சந்தேகப்பட்டார், ரவுடியுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டேன்!'- மனைவி அதிர்ச்சி வாக்குமூலம் | wife killed his husband

வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (11/05/2019)

கடைசி தொடர்பு:10:48 (11/05/2019)

`சந்தேகப்பட்டார், ரவுடியுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டேன்!'- மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகம் அருகில் சில தினங்களுக்கு முன்பு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில், 35 வயது மிக்க ஒருவர் சடலமாகக் கிடந்தார். அந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது காவல்துறை. கொலை செய்யப்பட்டிருப்பது யார் என்பது தெரியாத நிலையில் விசாரணையைத் தொடங்கப்பட்டது. செய்தித்தாள்களில் வெளியாகியிருந்த அந்த இளைஞரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “கொலை செய்யப்பட்டு கிடக்கிறது என் பொண்ணோட வீட்டுக்காரரு கமலக்கண்ணன்தான். லாரி டிரைவரா இருந்தாரு” என்று மயில் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

கொலை

உடலை அடையாளம் காட்டுவதற்காக கமலக்கண்ணனின் மனைவி ஸ்டெல்லா மேரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து பிணவறையில் கமலக்கண்ணனின் உடலைப் பார்த்ததும் உடைந்து அழுத ஸ்டெல்லா, அங்கேயே மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தவர், “யாருக்கும் கெடுதல் நினைக்காத அவரை எந்தப் படுபாவி இப்படி செஞ்சான்னு தெரியலையே... நானும் எம்புள்ளைங்களும் என்ன பண்ணுவோம்” என்று அழுது துடித்தார். இதற்கிடையில், ”கழுத்து எலும்புகள் முறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் கமலக்கண்ணனின் உடலில் விஷம் பரவியிருக்கிறது” என்ற பிரேத பரிசோதனை அறிக்கையால் உஷாரான காவல்துறை விசாரணையை வேகப்படுத்தியது.

மனைவி ஸ்டெல்லா

உறவினர்களிடம் கமலக்கண்ணனின் உடலை ஒப்படைத்துவிட்டு, கமலக்கண்ணன் – ஸ்டெல்லா தம்பதியினர் குடியிருந்த நெல்லித்தோப்பு பகுதியில் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரணையை மேற்கொண்டனர் காவல்துறையினர். கமலக்கண்ணன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் யாரோ ஒருவருடன் சேர்ந்து ஸ்டெல்லா தன் கணவரை கைதாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. ஸ்டெல்லா இதுகுறித்து எதையும் தெரிவிக்காததுடன், கணவரைக் காணவில்லை என்று புகாரும் கொடுக்காததால் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது காவல்துறை. கொலைக்கான காரணங்கள் வெளிவரத் தொடங்கியது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த கமலக்கண்ணனும், ஸ்டெல்லா மேரியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் இருக்கிறார்கள். தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார் கமலக்கண்ணன். கணவனின் துன்புறுத்தல்களை தாங்கிக் கொள்ள முடியாத ஸ்டெல்லா உறவினர்களுடன் சேர்ந்து கமலக்கண்ணனைக் கொலை செய்திருக்கிறார்.

“புதுச்சேரியில் நான் பழக்கடை வைத்து நடத்தி வருகிறேன். என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நட்புடன் பேசுவது எனது வழக்கம். ஆனால் அதனை சந்தேகத்துடன் பார்த்த என் கணவர் குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு செய்து அடிப்பார். அதனால் ஒரே வீட்டில் நாங்கள் வசித்தாலும் கடந்த 1 ஆண்டாகப் பிரிந்தே இருந்தோம். அவ்வப்போது குடித்துவிட்டு என்னைக் கொலை செய்வதாக மிரட்டுவார். என்னைக் கொலை செய்துவிட்டால் என் பிள்ளைகள் அநாதைகளாகிவிடுவார்கள் என்று பயந்தேன். அதனால் அவரையே கொலை செய்வது என்று முடிவெடுத்தேன். ரவுடி தமிழ்மணியுடன் தொடர்பில் இருக்கும் என் அக்கா ரெஜினாவிடம் இதுகுறித்துப் பேசினேன். அவரும் தமிழ்மணியுடன் சேர்ந்து என் கணவரைக் கொலை செய்வதற்கு ஒப்புக் கொண்டார்.

மனைவி

கொலை செய்வதற்கு முந்தைய நாள் எனது குழந்தைகளுடன் பிள்ளைச்சாவடியில் உள்ள அக்கா ரெஜினா வீட்டிற்குச் சென்றேன். அங்கு வந்தும் என் கணவன் தகராறு செய்தார். அவரைச் சமாதானம் செய்வதுபோலப் பேசி ஜூஸில் பூச்சி மருந்து கலக்கிக் கொடுத்தோம். அதில் அவர் மயக்கமடைந்து அங்கேயே படுத்துவிட்டார். அதன்பிறகு ரவுடி தமிழ்மணி உதவியுடன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நெல்லித்தோப்பில் இருந்த எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம். அவர் மயக்கத்தில் இருந்ததால் நானும், ரவுடி தமிழ்மணியும் கைதாங்கலாக பிடித்துச் சென்று படுக்கையில் போட்டுவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு அக்கா ரெஜினா வீட்டுக்கு வந்துவிட்டோம். ஒருவேளை என் கணவன் பிழைத்துவிட்டால் என்ன செய்வது என்று எங்களுக்குப் பயம் வந்தது. அதனால் மறுநாள் காலை நானும் தமிழ்மணியும் எங்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தோம். நாங்கள் நினைத்தது போலவே என் கணவர் மயங்கிய நிலையில் உயிருடன் இருந்தார். அதனால் நான் அவர் கால்கள் மீது அமர்ந்துகொண்டு கைகளைப் பிடித்துக் கொண்டேன். அப்போது தமிழ்மணி அவரின் முகத்தில் துணியை வைத்து அழுத்தியதால் மூச்சுத் திணறி துடிதுடித்து இறந்துவிட்டார். உடனே பழங்களுக்கு வரும் சாக்குப் பையில் சடலத்தைத் திணித்தோம். ஆனால் முழுவதுமாக சாக்குப் பையில் சடலம் செல்லவில்லை. அதனால் கழுத்தை உடைத்துத் திருகி உள்ளே வைத்துக் கட்டினோம்.

அன்று இரவே நண்பர்களின் உதவியுடன் சடலம் இருந்த சாக்குப் பையை 100 அடி சாலையில் தமிழ்மணி வீசிவிட்டு வந்துவிட்டார். மறுநாள் போலீஸ் அந்த சடலத்தைக் கண்டுபிடித்தபோது நானும் கூட்டத்தில் ஒருத்தியாக நின்று பார்த்தேன். எதாவது ஒரு பெரிய வாய்க்காலில்தான் சாக்குப் பையை நான் போடச் சொன்னேன். ஆனால் தமிழ்மணி அப்படிச் செய்யாததால் எனக்கு அவர் மீது கோபம் வந்தது. இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை வந்தது. அப்போது கொலை செய்ததற்காக தமிழ்மணி என்னிடம் பணம் கேட்டதால் நகைகளை வைத்து 7,500 ரூபாய் பணம் கொடுத்தேன்” என்று ஸ்டெல்லா மேரி வாக்குமூலம் கொடுக்க காவல்துறையினரே அதிர்ந்து போயிருக்கின்றனர். ஸ்டெல்லாவைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் காவல்துறை தலைமறைவாக இருக்கும் ரெஜினா, தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க