`நீ என் கணவரை திருமணம் செய்துகொள்' - மனம்மாறி கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி | Chennai women Try to killed her husband second wife

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (13/05/2019)

கடைசி தொடர்பு:17:05 (13/05/2019)

`நீ என் கணவரை திருமணம் செய்துகொள்' - மனம்மாறி கர்ப்பிணியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி

`எனது கணவரை நீ, இரண்டாவதாக திருமணம் செய்துகொள், நாம் இருவரும் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழலாம்' என்று தங்கையிடம் அக்காள் 6 ஆண்டுகளுக்கு முன் கூறினார். அதன்பிறகு தங்கையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் மனவேதனையடைந்த அக்காள், கர்ப்பிணியாக இருக்கும் தங்கையின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். 

கணவருக்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெண்

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சுராகாத்தூணுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் குழந்தைகளையும் கணவரையும் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. 

 இந்தநிலையில் சுராகாத்தூணின் உறவினர் (தங்கை முறை) ஜெரினா பேகத்துக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்தது. வங்கதேசத்தில் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் ஜெரினா பேகத்தை சுராகாத்தூண், தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார். இங்கேயும் அவருக்கு வரன் அமையவில்லை. இதனால் ஜெரினா பேகத்தை முகமது ரஷீத்துக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சுராகாத்தூண் விரும்பினார். அதுதொடர்பாக கணவனிடமும் ஜெரினா பேகத்திடமும் பேசினார். இருவரின் சம்மதத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜெரினாபேகம், 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

ஜெரினாபேகத்தை திருமணம் செய்தபிறகு முகமது ரஷீத், சுராகாத்தூண் மீது அன்பாக இருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. சம்பவத்தன்று ஜெரினாபேகம் வீட்டில் இருந்தார். அப்போது சுராகாத்தூணுக்கும் ஜெரினாபேகத்துக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுராகாத்தூண், ஜெரினாபேகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளார். அதன்பிறகு கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல் அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். ரத்தம் வெளியேறி அவர் உயிருக்குப் போராடினார். 

 கணவருக்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெண் கைது

ஜெரினாபேகத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலென்ஸிக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு ஜெரினா பேகத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் புழல் காவல் நிலையத்துக்கு தெரியவந்தது. புழல் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்துவிசாரித்தனர். பிறகு கர்ப்பிணியை கொலை செய்ய முயன்றதாக சுராகாத்தூணை போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுராகாத்தூணும் முகமது ரஷீத்தும் சந்தோஷமாக குடும்பம் நடத்தியுள்ளனர். சுராகாத்தூணின் தங்கை ஜெரினாபேகத்துக்கும் முகமது ரஷீத்துக்கும் திருமணம் நடந்தபிறகு அந்தக் குடும்பத்தில் நிம்மதியில்லை. ஜெரினா பேகத்துக்கு மாப்பிள்ளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நீ என் கணவரை திருமணம் செய்துகொள், நீயும் நானும் சந்தோஷமாக விட்டுக் கொடுத்து வாழலாம் என்று சுராகாத்தூண் கூறியுள்ளார். அதன்பிறகு சுராகாத்தூணை விட ஜெரினாபேகத்தின் மீது அளவுகடந்த அன்பைக் காட்டியுள்ளார் முகமது ரஷீத். இதனால் மனவேதனையடைந்த சுராகாத்தூண், ஜெரினாபேகத்தை கொலை செய்ய முயன்றுள்ளார். சுராகாத்தூணிடம் விசாரித்தபோது சில உண்மைகளை எங்களிடம் கூறினார். அதுதொடர்பாக முகமது ரஷீத்திடம் விசாரித்துள்ளோம். கர்ப்பிணியாக ஜெரினாபேகத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது"என்றனர். 

 புழல் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.