ரூ.10,000-க்கு பெண்ணை விற்ற தந்தை; கூட்டுப் பாலியல் கொடுமை... உ.பி.யில் மகளிர் கமிஷனால் வெளிவந்த உண்மை! | Widow Who Was Sold For Rs 10K in uttarpradesh

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/05/2019)

கடைசி தொடர்பு:18:01 (13/05/2019)

ரூ.10,000-க்கு பெண்ணை விற்ற தந்தை; கூட்டுப் பாலியல் கொடுமை... உ.பி.யில் மகளிர் கமிஷனால் வெளிவந்த உண்மை!

டெல்லி பெண்கள் கமிஷன் தலைவர் சுவாதி மலிவால், நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் இருந்தவை அத்தனையும் அதிர்ச்சி ரகம். அதில், ``உத்தரப்பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான  இவரின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். தன் தந்தையுடன் வசித்துவந்த அவருக்கு, தந்தையாலேயே கொடுமை நிகழ்ந்துள்ளது. கணவரின் இறப்பின் வருத்தத்தில் இருந்த அமீதாவை அவரது தந்தை, உறவினரான பெண் ஒருவருடன் சேர்ந்துகொண்டு ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கு வேறு ஒரு நபரிடம் விற்றுவிடுகிறார். அந்த நபர், மற்றவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டு வேலை செய்வதற்காக எந்தவித ஊதியமும் கொடுக்காமல், அமீதாவை அனுப்பியுள்ளார். 

பெண்

இப்படி வீட்டு வேலைக்குச் செல்லும்போது, அங்குள்ள ஆண்களால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதில் சிலர் அவரைக் கூட்டு பலாத்காரமும் செய்துள்ளனர். இதிலிருந்து தப்பித்த அவர், சில முறை தனக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் கொடுக்க முயன்றுள்ளார். கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், ஹப்பூர் போலீஸார் அவரின் புகாரைக் கண்டுகொள்ளவில்லை. பலமுறை அவரை உதாசீனப்படுத்தியுள்ளனர். இனிமேல் தனக்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை என வெறுத்த அவர், ஏப்ரல் 28-ம் தேதி, தானே தீ வைத்துக்கொண்டார். இதில், அவரது 80 சதவிகித உடல் பாகங்கள் எறிந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எப்ஐஆர் பதிவு

உயிர்பிழைக்கப் போராடிவரும் அவரின் இந்த நிலைமைக்கு, உத்தரப்பிரதேச காவல் துறையின் வெட்கக்கேடான நடத்தையும் ஒரு காரணம். போலீஸின் பொறுப்பற்றதனத்தால்தான், ஒரு பெண் உயிர்பிழைக்கப் போராடிக்கொண்டிருக்கிறார். இனிமேலாவது இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்" என யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்த, 15 நாள்களுக்குப் பிறகு வழக்குப் பதிந்து, 14 பேர்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ளனர். அமீதா தற்கொலை முயற்சி எடுத்து உயிருக்குப் போராடிய பின்பே, உள்ளூர் அமைப்புகள் மூலம் இந்த விவகாரம் டெல்லி பெண்கள் ஆணையத்தை எட்டியுள்ளது. பெண்கள் கமிஷன் நேரடியாகத் தலையிட்ட பிறகே, எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இனிமேலாவது இதில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பார்கள் என நினைக்கிறோம் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க