``வங்கிமீது குற்றம்சாட்டிய கணவர்; காட்டிக்கொடுத்த கடிதம்!” - கேரளத் தாய், மகள் தற்கொலையில் அதிரடி திருப்பம்! | letter found in neyyattinkara suicide case

வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:13 (15/05/2019)

``வங்கிமீது குற்றம்சாட்டிய கணவர்; காட்டிக்கொடுத்த கடிதம்!” - கேரளத் தாய், மகள் தற்கொலையில் அதிரடி திருப்பம்!

கேரளாவில் தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக அவர்களது தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட வைஷ்ணவி - லேகா

திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி லேகா (வயது 42) இந்தத் தம்பதிக்கு ஒரே ஒரு மகள்தான். 19 வயதான அவர் பெயர் வைஷ்ணவி. இவர், பி.பி.ஏ படித்து வந்தார். சந்திரன், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, வளைகுடாவில் வேலை பார்த்து வந்த போது சந்திரன் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இதனால் மீண்டும் நாட்டிற்கே திரும்பினார். இந்நிலையில் நேற்று லேகாவும் அவரது மகள் வைஷ்ணவியும் தங்கள் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் மரணத்துக்கு கனரா வங்கியில் வாங்கிய கடனே காரணம் எனக் கூறப்பட்டது. 

சந்திரன்

2015 -ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும், இதை 8 லட்சமாகத் திருப்பிச் செலுத்தியபோதும் இன்னும் 6 லட்சம் கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சந்திரன் மீடியாக்களில் தெரிவித்தார். வங்கியின் டார்ச்சரால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியதால் இந்த விஷயம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாகத் தற்கொலைக்கு முன்னதாக லேகாவும், வைஷ்ணவியும் தங்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர். அதில் உள்ளவை புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளது.

சந்திரனின் தாய்

அந்த மூன்று பக்கக் கடிதத்தின் மூலம் தற்கொலைக்கு வங்கிக் கடன் காரணமில்லை என்றும் குடும்பப் பிரச்னைகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது. லேகா தனது மகள் மூலம் எழுதியுள்ள கடிதத்தில், ``எங்கள் மரணத்துக்கு முழுக் காரணம் என் மாமியார், என் கணவர் மற்றும் அவரது சகோதரிதான். கல்யாணம் முடிந்தது முதல் என்னை நிம்மதியாக வாழவிடவில்லை. வரதட்சணை பெயரில் என்னைக் கொடுமைப்படுத்தினர். வாழ்வதற்கு இவர்கள் எந்த ஒரு வழியையும் விடவே இல்லை. மந்திரவாதியிடம் கொண்டுபோய் கொடுமைப்படுத்தினர். பல்வேறு கொடுமைகளை அனுபவித்தேன். இப்போது என் கணவர் எனக்குத் தெரியாமல் ஊர் முழுக்கக் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடன்களை நிலத்தை விற்றுத் தீர்த்துவிடலாம் என்றால் அதற்கும் மாமியார் குடும்பம் தடையாக இருக்கிறது.

தற்கொலை கடிதம்

என் கணவர் சந்திரனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு நிம்மதியாக வாழவிட இல்லை. ஒருகட்டத்தில் என் தாய் வீட்டால்தான் இவர்கள் கொடுமையிலிருந்து தப்பித்தேன். ஆனால் இப்போது எங்களைக் காப்பாற்ற தாய் வீட்டில் யாரும் உயிருடன் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் சாவுக்கு முழுக் காரணம் எனது கணவர் சந்திரனும், அவரது வீட்டாரும்தான்" என எழுதி வைஷ்ணவியும், லேகாவும் கையொப்பமிட்டுள்ளனர். இந்தக் கடிதம் சிக்கியதை அடுத்து லேகாவின் கணவர், மாமியார் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தங்களின் மீதான குற்றத்தை மறைக்கவே இவர்கள் வங்கிக் கடனுக்காக தற்கொலை செய்துகொண்டதாக கவனத்தை திசை திருப்பினர். ஆனால், இவர்கள் பேச்சில் சந்தேகம் இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் தற்கொலைக் கடிதம் சிக்கியுள்ளது. இவர்களிடத்தில் நடைபெறும் விசாரணையில் மேலும் சில உண்மைகள் தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க