`பகலில் மாஸ்டர்... அதிகாலையில் கொள்ளை!' - அண்ணாநகரில் சிக்கிய கடப்பாரைக் கொள்ளையனின் பின்னணி | Chennai police catches thief

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:21:29 (15/05/2019)

`பகலில் மாஸ்டர்... அதிகாலையில் கொள்ளை!' - அண்ணாநகரில் சிக்கிய கடப்பாரைக் கொள்ளையனின் பின்னணி

அண்ணாநகரில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்த சமையல் மாஸ்டர், அதிகாலையில் கொள்ளையடிப்பதை பார்ட் டைம் வேலையாக வைத்துள்ளார். சிசிடிவி கேமராவால் வாய் பேசமுடியாத கொள்ளையன் போலீஸாரிடம் இன்று சிக்கிக்கொண்டார்.

கொள்ளையன்

சென்னை அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் ஷட்டரை உடைத்து  தொடர்ந்து கொள்ளைகள் நடப்பதாகப் புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்தன. இதையடுத்து அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில். அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அண்ணா நகரில் உள்ள ஒரு கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை நடந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், இரும்பு கம்பியைக் கொண்டு ஒருவர் ஷட்டர் கதவை உடைக்கும் காட்சிகளும், உள்ளே நுழைந்தபின், லாக்கரை (கல்லா பெட்டி) உடைத்து பணத்தைத் திருடும் காட்சிகளும் கொள்ளையனின் முகத்துடன் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

சிசிடிவி கேமரா பதிவு

இதையடுத்து கொள்ளையனை போலீஸார் தேடிவந்தனர். இன்று அதிகாலை கையில் கடப்பாரையோடு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரின் முகமும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தவரின் முகமும் ஒன்று என்பதை தனிப்படை போலீஸார் அடையாளம் கண்டனர். இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எங்களிடம் சிக்கியவர் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல கொள்ளையன்  மார்க் (எ) சிவா (29). இவர் அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அதிகாலை நேரத்தில் கடைகளின் ஷட்டர்களைக் கடப்பாரையின் மூலம் உடைத்துக் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் மீது வடபழனி, அண்ணாநகர், கொடுங்கையூர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரால் வாய் பேச முடியாது. கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்" என்றனர்.