வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டுத் தள்ளிய காவலர் - வாக்கிங் சென்றவருக்கு நடந்த சோகம்! | Texas Police Department shot and killed a 44-year-old woman

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (16/05/2019)

கடைசி தொடர்பு:11:00 (16/05/2019)

வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டுத் தள்ளிய காவலர் - வாக்கிங் சென்றவருக்கு நடந்த சோகம்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பேடவுன் பகுதியில் பமேலா ஷாண்டேய் டர்னர் (Pamela Shantay Turner) என்ற 44 வயது பெண் கடந்த திங்கள் கிழமை இரவு 10:40 மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் காவல்துறை அதிகாரி பணியில் இருந்துள்ளார். அவர் பமேலாவைப் பார்த்ததும் அருகில் சென்று `இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க காவல்துறை

File Photo

அதற்கு பமேலே ‘நான் இங்கு தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். என் வீடு இங்கு அருகில்தான் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். இருந்தும் அந்தக் காவல்துறை அதிகாரி தொடர்ந்து பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளார். அனைத்துக்கும் அமைதியாகப் பதிலளித்த பமேலா ஒரு கட்டத்தில் தன் அமைதியை இழந்து `நீங்கள் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்' எனக் கூறி காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வார்த்தை சண்டை நிலவியுள்ளது. இதில் கடுப்பான காவல்துறை அதிகாரி, பமேலாவை கைது செய்ய முற்பட்டுள்ளார். 

துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி பெண் பலி

அந்தப் பெண் தொடர்ந்து வாக்குவாதம் செய்யவே இறுதியில் கோபத்தின் உச்சத்தை அடைந்த காவலர், பமேலாவை துப்பாக்கியால் ஒரு முறை சுட்டுள்ளார். அப்போது  `நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என அலறியுள்ளார் பமேலா. அதைக் கேட்ட பின்னரும் தொடர்ந்து ஐந்து முறை அந்தப் பெண்ணை நோக்கிச் சுட்டுள்ளார் காவலர். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த அனைத்துக் காட்சிகளும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண்ணை கொல்வதுதான் முக்கிய நோக்கம் என்றால் ஒருமுறை சுட்டிருந்தாலே போதுமே ஏன் தொடர்ந்து சுட வேண்டும் எனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மாதிரி படம்

இது பற்றி டெக்ஸாஸ் காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘ அந்தப் பெண்ணுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வந்துள்ளது. இதனால் பெண்ணைக் கைது செய்ய நினைத்துள்ளார் காவலர். அதற்குள் அந்தப் பெண் காவலரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து காவலரை குறிவைத்துள்ளார். இதன் பிறகு பெண் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அவரைச் சுட்டுள்ளார் காவலர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவலர்களுக்கு இருக்கும் அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம், விடுமுறை இல்லாதது ஆகிய அனைத்துமே இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.