கட்டப்பஞ்சாயத்துக்கு அழைத்து வந்த ரவுடியின் மனமாற்றம் - பணத்துடன் சிக்கியப் பின்னணி | Rowdy suddenly changed his mind and reacted against the same side

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (17/05/2019)

கடைசி தொடர்பு:14:07 (17/05/2019)

கட்டப்பஞ்சாயத்துக்கு அழைத்து வந்த ரவுடியின் மனமாற்றம் - பணத்துடன் சிக்கியப் பின்னணி

துப்பாக்கி முனையில் ரவுடி கட்டப்பஞ்சாயத்து

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த கட்டப்பஞ்சாயத்துக்கு அழைத்துவரப்பட்ட நெல்லையைச் சேர்ந்த ரவுடி திடீரென மனம் மாறினார். எதிர்தரப்பினருடன் சேர்ந்துகொண்டு ஒரு கோடி ரூபாயுடன் எஸ்கேப் ஆனார். இந்தச் சம்பவத்தில் நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகு போலீஸார் ரவுடியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் நிலம் தொடர்பாக துரை, கிருஷ்ணன் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர், காரியத்தை முடித்துக்கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த துரையும் கிருஷ்ணனும் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டினர். இதனால் பயந்துபோன ரியல் எஸ்டேட் அதிபர் என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது, ஆளுங்கட்சியின் பின்புலம் கொண்ட நெல்லையைச் சேர்ந்த ரவுடி ஒருவரை ரியல் எஸ்டேட் அதிபர் தொடர்புகொண்டார். 

 அந்த ரவுடியிடம் முழு விவரத்தை ரியல் எஸ்டேட் அதிபர் கூறினார். அப்போது, ரவுடி தரப்பு. பார்த்துக்கொள்ளலாம், யாரென்று ஆளைக் காட்டுங்கள் என்று கூறியது. இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர், பணம் வாங்கிய துரை மற்றும் கிருஷ்ணன் குறித்த தகவல்களை ரவுடியிடம் தெரிவித்தார். அதன்பிறகு, சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்த ரவுடி, துப்பாக்கி முனையில்  கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டார். 

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏ.சி அறையில் சில நாள்களுக்கு முன் பஞ்சாயத்து நடந்தது. பஞ்சாயத்துக்கு ரியல் எஸ்டேட் அதிபரும் சென்றிருந்தார். அங்கு நடந்த சம்பவம் ரியல் எஸ்டேட் அதிபருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியை மிரட்டி ரவுடி ரூ.1 கோடி பணம் பறித்தார். பின்னர், ஒரு கோடி ரூபாயுடன் தலைமறைவானார். 

ரவுடி சிக்கினார்

இதையடுத்து, ரியல் எஸ்டேட் அதிபர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆளுங்கட்சி பின்புலம் இருப்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முதலில் தயக்கம் காட்டினர். அதன்பிறகு வந்த பிரஷரால் நெல்லையைச்  சேர்ந்த ரவுடியை நேற்று தனிப்படை போலீஸார் பிடித்தனர். ஆனால், அவரிடம் பணம் இல்லை. ஒரு கோடி ரூபாயில் சில லட்சங்களை மட்டும் போலீஸார் மீட்டனர்.  இந்தச் சம்பவத்தில் ரவுடிக்கு உறுதுணையாக இருந்தவர்களைப் பிடிக்க  போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ரவுடியிடமிருந்த பணம் எங்கே என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``கடந்த 11-ம் தேதி துரைப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் ரியல் எஸ்டேட் அதிபர், அவருக்கு ஆதரவாக பேச அழைத்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி, ரியல் எஸ்டேட் அதிபருக்கு பணம் கொடுத்த இரண்டு பேர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ரியல் எஸ்டேட் அதிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவுடி தரப்பினர் ஒரு கோடி ரூபாயை பறித்துவிட்டு தப்பியது. தனக்கு ஆதரவாகப் பேச அழைத்து வந்த ரவுடி ஏன் மனம் மாறினார் என்று தெரியாமல் ரியல் எஸ்டேட் அதிபர் குழப்பம் அடைந்தார். 

கட்டப் பஞ்சாயத்துக்காக வந்த ரவுடியைச் சந்தித்த துரையும் கிருஷ்ணனும் நாங்கள் உனக்குப் பணம் தருகிறோம். நீ, ரியல் எஸ்டேட் அதிபரிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடு என்று பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகே ரவுடி, ரியல் எஸ்டேட் அதிபருக்கு எதிராக செயல்பட்டுள்ளார். விசாரணை முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள். இதனால்தான் முழுவிவரங்களை வெளியில் சொல்ல முடியவில்லை" என்றார். 

மூடிமறைக்கும் போலீஸ் 

கட்டப் பஞ்சாயத்தின்போது ஒரு கோடி ரூபாயுடன் எஸ்கேப் ஆன தகவல் கிடைத்ததும் துரைப்பாக்கம் காவல் சரக காவல் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று முதலில் கூறினர். அதன்பிறகு பஞ்சாயத்து நடந்த ஹோட்டல், புகார் கொடுத்தவரின் விவரங்களைக் கூறியபிறகு, `சார் அது மேலிட விவகாரம். பணத்துடன் எஸ்கேப் ஆனவரைப்பிடிக்க மட்டும்தான் எங்களுக்கு உத்தரவு' என்று தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.