கணவனுக்கு 2-வது திருமணம் செய்துவைத்த மனைவி - கொலை வழக்கில் சிக்கிய பின்னணி  | Second wife killed by first wife, police investigation on

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (17/05/2019)

கடைசி தொடர்பு:14:40 (17/05/2019)

கணவனுக்கு 2-வது திருமணம் செய்துவைத்த மனைவி - கொலை வழக்கில் சிக்கிய பின்னணி 

கொலை செய்யப்பட்ட ஜெரினாபேகம்

சென்னை செங்குன்றத்தில் கணவனுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மனைவி, கொலை வழக்கில் சிக்கியுள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் கணவனின் அன்பு கிடைக்காத விரக்தியில் கொலை செய்யும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்கின்றனர் போலீஸார். 

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுராகாத்தூணுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் குழந்தைகளையும் கணவரையும் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. 

இந்த நிலையில், சுராகாத்தூணின் உறவினர் (தங்கை முறை) வங்கதேசத்தைச் சேர்ந்த ஜெரினா பேகத்துக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்தது. வங்கதேசத்தில் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால், அவரை சென்னைக்கு அழைத்து வந்தார் சுராகாத்தூண். இங்கேயும் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் ஜெரினா பேகத்தை முகமது ரஷீத்துக்கு இரண்டாவதாக திருமணம் செய்ய சுராகாத்தூண் முடிவு செய்தார். குடும்பத்தினரின் விருப்பத்தின்பேரில் முகமது ரஷீத்துக்கும் ஜெரினா பேகத்துக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஜெரினா பேகம் கர்ப்பமாக உள்ளார். 

ஜெரினா பேகத்தை திருமணம் செய்தபிறகு முகமது ரஷீத் முழுமையாக மாறிவிட்டார். சுராகாத்தூணிடம் அன்பாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்தனர். அதன்பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக சுராகாத்தூணுக்கும் ஜெரினா பேகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. முகமது ரஷீத்திடமும் சுராகாத்தூண் சண்டைபோட்டார். இதனால் குடும்பத்தில் நிம்மதியில்லை. 

கொலை வழக்கில் கைதான சுராகாத்தூண்

இந்த நிலையில், சம்பவத்தன்று ஜெரினாபேகத்துடன் சுராகாத்தூண் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சுராகாத்தூண், கத்தியால் ஜெரினா பேகத்தைக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுராகாத்தூண் மீது புழல் போலீஸார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெரினா பேகம் இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கணவன் மனைவியான முகமது ரஷீத்தும் சுராகாத்தூணும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தனர். அப்போதுதான் சுராகாத்தூணுக்கு தங்கை முறையான ஜெரினாபேகத்துக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அன்றைய சூழலில் சுராகாத்தூணின் சம்மதத்துடன்தான் ஜெரினா பேகத்துக்கும் முகமது ரஷீத்துக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் சுராகாத்தூண் மனமாறியுள்ளார். தற்போது ஜெரினாபேகம் கர்ப்பமாக உள்ளார். இதனால் சுராகாத்தூணுக்கும் ஜெரினாபேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெரினா பேகம் உயிரோடு இருந்தால் முகமது ரஷீத், தன்னிடம் அன்பாக இருக்கமாட்டார் என சுராகாத்தூண் கருதியுள்ளார்.

இதனால்தான் அவரைக் கத்தியால் குத்திய சுராகாத்தூண், தப்பிச் செல்ல முயன்றார். அவரைப்பிடித்து சிறையில் அடைத்தோம். ஜெரினாபேகம் கர்ப்பமாக இருந்ததால் அதிகளவில் ரத்தம் வெளியேறி உயிருக்குப் போராடினார். மருத்துவமனையில் குழந்தையையும் ஜெரினாபேகத்தையும் காப்பாற்ற போராடினர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இந்தத் தகவல் சிறையில் இருக்கும் சுராகாத்தூணுக்கு தெரியப்படுத்தியபோது அவர் கண்கலங்கினார். ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேன் என்று கதறி அழுதார். கணவனின் இரண்டாவது மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக முதல் மனைவி சுராகாத்தூண் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர்.

சுராகாத்தூணின் குழந்தைகளும் ஜெரினா பேகத்தின் குழந்தையும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். இரண்டாவது மனைவியை முதல் மனைவியே கொலை செய்ததால் நிலைகுலைந்து போய் நிம்மதி இழந்து காணப்படுகிறார் முகமது ரஷீத்.