``எங்களுக்காகப் போராடினாள்; அவள் பிரச்னை தெரியாமல் போச்சே..” - கேரள மாணவியை நினைத்துக் கலங்கும் தோழிகள் | friends crying Kerala student vaishnavi death at neyyattinkara

வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (17/05/2019)

கடைசி தொடர்பு:14:24 (17/05/2019)

``எங்களுக்காகப் போராடினாள்; அவள் பிரச்னை தெரியாமல் போச்சே..” - கேரள மாணவியை நினைத்துக் கலங்கும் தோழிகள்

திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி லேகா (வயது 42) இந்தத் தம்பதிக்கு ஒரே ஒரு மகள்தான். 19 வயதான அவர் பெயர் வைஷ்ணவி. இவர், பி.காம். படித்து வந்தார். சந்திரன், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, வளைகுடாவில் வேலை பார்த்து வந்தபோது சந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனால் மீண்டும் கேரளாவுக்குத் திரும்பினார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி லேகாவும் அவரின் மகள் வைஷ்ணவியும் தங்கள் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் மரணத்துக்கு கனரா வங்கியில் வாங்கிய கடனே காரணம் எனக் கூறப்பட்டது. 

லேகா - வைஷ்ணவி

2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும், இதை 8 லட்சமாகத் திருப்பிச் செலுத்தியபோதும் இன்னும் 6 லட்சம் கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சந்திரன் மீடியாக்களில் தெரிவித்தார். வங்கியின் டார்ச்சரால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியதால் இந்த விஷயம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மறுநாளே லேகாவும், வைஷ்ணவியும் தங்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். அந்த மூன்று பக்கக் கடிதத்தில் தற்கொலைக்கு யார் காரணம் என்பதைத் தெளிவாக எழுதியிருந்தனர். 

சந்திரன் மற்றும் அவரது தாய்

``எங்கள் மரணத்துக்கு முழுக் காரணம் என் மாமியார், என் கணவர் மற்றும் அவரின் சகோதரிதான். கல்யாணம் முடிந்தது முதல் என்னை நிம்மதியாக வாழவிடவில்லை. வரதட்சணை என்ற பெயரில் என்னைக் கொடுமைப்படுத்தினர். வாழ்வதற்கு இவர்கள் எந்த ஒரு வழியையும் விடவே இல்லை. மந்திரவாதியிடம் கொண்டுபோய் கொடுமைப்படுத்தினர். பல்வேறு கொடுமைகளை அனுபவித்தேன்" என அதில் தெரிவித்திருந்தனர். இந்தக் கடிதம் புதிய திருப்பத்தைக் கொடுக்க தற்கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்கள் ஒருபுறம் இருக்க இறப்பதற்கு முன்னதாக வைஷ்ணவி தன் தோழிகளுடன் பேசிய விவரங்கள் வெளிவந்துள்ளன. 

தற்கொலை

photo credit : @mathrubhumi

நேற்று நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட வைஷ்ணவியின் தோழிகள், ``நான் இனி கல்லூரிக்கு வரமாட்டேன் என எங்களைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே வைஷ்ணவி சொன்னாள். அவளுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக கோச்சிங் சென்று கொண்டிருந்தாள். ஒருவேளை டாக்டர் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என நினைத்தோம். அதற்காகத்தான் வரமாட்டேன் எனக் கூறுகிறாள் என நினைத்தோம். ஆனால், இப்படிச் செய்வாள் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. காலேஜ் லீடர் என்பதால் எங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் போதும் உடனே முன்னாடி நின்று போராடுவாள். நாங்கள் கராத்தே வைஷ்ணவி என்றுதான் கூப்பிடுவோம். அவள் இங்குள்ள எல்லோருக்கும் நெருக்கம். எல்லோரிடமும் நன்றாகப் பழகுவாள். 

தோழிகள்

photo credit : @mathrubhumi

இப்படிப் பழகியவள் தற்கொலை செய்துகொண்டாள் என்று என்னும்போது நம்ப முடியவில்லை. அவளுக்கு அம்மா என்றால் உயிர். தன் அம்மா குறித்து இங்குள்ள எல்லோரிடமும் அவ்வளவு சொல்லியிருக்கிறாள். ஆனால், ஒருவேளைகூட அவரின் தந்தை பற்றி வாய் திறந்ததில்லை. கடன் இருப்பதால் பிரச்னை; வீட்டை விற்கப்போகிறோம்  என முன்பே சொல்லியிருக்கிறாள். ஆனால் இவ்வளவு கொடுமைகளை அவளும், அவரின் அம்மாவும் அனுபவித்து இருக்கிறார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. எங்களின் பிரச்னைகளின் முன்னின்ற அவளுக்கு ஒரு பிரச்னை என்றபோது எங்களால் உதவ முடியவில்லை" எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். தோழிகள் எல்லோரும் வரிசையாக நின்று கண்ணீர் மல்க அவரது இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்திய காட்சிகள் அங்கிருந்தவர்களைக் கண்ணீர் கடலில் மூழ்கடித்தது. 

தோழிகள்

photo credit : @mathrubhumi

வைஷ்ணவி கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்ததால் அவரைக் கராத்தே வைஷ்ணவி என அழைத்து வந்துள்ளனர். படிப்பில் வைஷ்ணவி எப்போதும் கெட்டிக்காரியாகவே இருந்து வந்துள்ளார். நன்றாகப் படித்து வந்தாலும் டாக்டருக்கு படிக்க போதுமான பணம் இல்லை. மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் படிக்கத் தேவையான பணத்தை ரெடி பண்ணிக்கொண்டிருந்தார் லேகா. ஆனால் வீட்டு பிரச்னை, கடன் பிரச்னை எல்லாம் ஒன்று சேர்ந்து வர அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என போலீஸார் கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க