ரயிலில் கொள்ளை; மலேசியாவில் ஹோட்டல் - யார் இந்த சாகுல்அமீது? | Kerala man theft in trains who run a business in Malaysia

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:19:00 (17/05/2019)

ரயிலில் கொள்ளை; மலேசியாவில் ஹோட்டல் - யார் இந்த சாகுல்அமீது?

ரயிலில் கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மலேசியாவில் ஹோட்டல் நடத்திய கொள்ளையன் சாகுல்அமீதுவை போலீஸார் பிடித்தனர். அவரிடமிருந்து 110 சவரன் நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். 

\ரயிலில் கொள்ளையடித்த சாகுல்அமீது

சென்னையிலிருந்து சேலம் செல்லும் ரயில்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கொள்ளையர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ரயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, சேலம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்துவருவதால் அந்தப்பகுதியில் ரயில் மெதுவாகச் செல்லும். அதைத் தங்களுக்குச் சாதகமாக கொள்ளையர்கள் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. 

இந்தநிலையில் ரயில் கொள்ளையனைப்பிடிக்க போலீஸார் பலவகையில் முயற்சி செய்தனர். குறிப்பாக போலீஸ் சீருடையில் நோட்டமிட்டால் கொள்ளைக் கும்பல் உஷாராகி தப்பிவிட வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதினர். இதனால் போலீஸ் சீருடை இல்லாமல் சாதாரண உடையில் போலீஸார் ரயில்களில் பயணித்தனர். இந்தச்சமயத்தில் போலீஸ்காரர் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும் கணவன் மனைவி போல அடிக்கடி கொள்ளை நடக்கும் ரயிலில் பயணித்தனர். 

இந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து சென்ற ரயில் ஒன்றில் பயணி ஒருவரின் பையைத் தூக்கிக் கொண்டு நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். அவரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சாகுல்அமீது. கேரளாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 ரயில் கொள்ளை குறித்து விவரிக்கும் போலீஸ் டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சாகுல்அமீது மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் சொந்த ஊர் கேரளா திரிச்சூர். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ரயில்களில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஏ.சி. முதல் வகுப்பு, 2 ம் வகுப்பு ரயில் பெட்டிகளில்தான் சாகுல் அமீது கொள்ளையடித்துவந்துள்ளார். 
இவர், பெண்களின் உடமைகளைதான் குறி வைத்து கொள்ளையடிப்பார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் சாகுல்அமீது ரயில்களில் கைவரிசை காட்டிவந்துள்ளார். கொள்ளையடித்த நகைகளை திருச்சூர், மும்பை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்வார்.  அதன் மூலம் கிடைத்த ஒரு கோடி ரூபாயைக் கொண்டு மலேசியாவில் ஹோட்டல் நடத்திவருகிறார். அந்த ஹோட்டலின் இயக்குநராக சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி சஹானாவும் உள்ளனர். இந்த ஹோட்டலில் மூன்றாவதாக ஒருவர் பங்குதாராக உள்ளார். அவருக்கு வேண்டிய பணத்தைக் கொடுக்கத்தான் சாகுல் அமீது ரயிலில் கொள்ளையடிக்க வந்தபோது எங்களிடம் சிக்கிக் கொண்டார். 

சாகுல் அமீதுவுக்கு 6 மொழிகள் தெரியும். வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய உள்ளார். மேலும் ஹோட்டலில் பெண்களை செல்வந்தர்களிடம் பழக வைத்து அதன்மூலம் மிரட்டி பணத்தைப் பறித்துள்ளார். இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாக்பூர் போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். மூளைச்சலவை செய்வதில் சாகுல் அமீது கில்லாடி 

தமிழகத்தில் 30 பயணிகளிடம் சாகுல்அமீது கை வரிசை காட்டி உள்ளார். இவரிடமிருந்து 110 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். இது தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கும் கொள்ளையன் சாகுல்அமீது சுற்றுலா சென்றுள்ளான். தமிழகத்தைப் போல வேறு மாநிலங்களிலும் இவர் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது, அதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

ரயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறுகையில், ரயிலில் பயணிக்கும் போது சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். பயணிகளின் பாதுகாப்புக்காக செயலிகளையும் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

தொடர்ச்சியாக ரயில்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சாகுல் அமீது போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதனால் ரயில்களில் பயணிப்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். சாகுல் அமீதுவைப் பிடிக்க உதவியாக இருந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் தனிப்படை போலீஸாரை ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டியதோடு சன்மானமும் வழங்கினர்.