நடிகையை ஏமாற்றினாரா அமெரிக்க இன்ஜினீயர்? -17 வயதுச் சிறுமியால் வெளிவந்த உண்மைகள்  | police complaint filed against america engineer

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (18/05/2019)

கடைசி தொடர்பு:14:48 (18/05/2019)

நடிகையை ஏமாற்றினாரா அமெரிக்க இன்ஜினீயர்? -17 வயதுச் சிறுமியால் வெளிவந்த உண்மைகள் 

இன்ஜினீயர் ஜெயகரன், நடிகை ராதிகா

அம்மாவை 2-வது திருமணம் செய்தவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் படியெறி இருக்கிறார் 17 வயது சிறுமி. நடிகையை அமெரிக்க இன்ஜினீயர் ஜெயகரன் ஏமாற்றினாரா என்பது விசாரணையில்தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை அடுத்த சூரபேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த சிறுமியும் அவரின் அம்மா ராதிகாவும் பரபரப்பான தகவல் ஒன்றைத் தெரிவித்தனர். ராதிகாவின் இரண்டாவது கணவரும் அமெரிக்காவில் குடியிருப்பவருமான ஜெயகரன் வாசுதேவன் தங்களுக்கு பலவகையில் தொல்லை கொடுப்பதாகக் கூறினர். அதோடு இந்த வழக்கை விசாரித்த அப்போதைய புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நட்ராஜ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார். இந்த நிலையில், ராதிகாவின் முதல் கணவர் ஹேமந்த், நீதிமன்றத்தில் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 இன்ஜினீயர் ஜெயகரன் ஏமாற்றியதாக மகளுடன் நீதிமன்றம் வந்த ராதிகா

சிறுமி குற்றம் சுமத்திய ஜெயகரன் வாசுதேவன் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் கூறியதாவது, ``நான் அமெரிக்காவில் கடந்த 22 ஆண்டுகளாக குடியிருந்துவருகிறேன். எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்தாகிவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் மகனுக்கு 8 வயதாகிறது. அவனால் சரிவர பேச முடியாது. இதனால் அவன் பிறந்தது முதல் அவன் என்னைவிட்டு பிரியமாட்டான். இந்தச் சூழ்நிலையில்தான் என் மீது பொய் புகார் கொடுத்த சிறுமியின் அம்மா ராதிகா எனக்கு அறிமுகமாகினார். நான் நடத்தும் ஐ.டி நிறுவனத்தின் கிளை சென்னையில் உள்ளது. அங்கு வேலை கேட்டு ராதிகா வந்தார். அவரிடம் வேலை இல்லை என்று கூறினேன். அப்போதுதான் ராதிகா, தனக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். கணவர், தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வறுமையில் வாழ்வதாகக் கூறினார். அவர் மீது பரிதாபப்பட்டு உதவிகளைச் செய்தேன். அப்போதுதான் ராதிகா, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். உடனே நான், எனக்கும் உங்களுக்கும் 11 வயது வித்தியாசம். இதனால் ஒத்துப்போகாது என்று கூறினேன். 

இன்ஜினீயர் ஜெயகரன், நடிகை ராதிகா

அப்படிப்பட்ட நான், ராதிகாவின் பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுப்பேனா.. ராதிகா ஒரு ஆயுதம்தான். அவருக்குப்பின்னால் ஒருவர் இருக்கிறார். ராதிகாவை அவரின் முதல் கணவரிடமிருந்து பிரித்த அந்தநபர், சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய ராதிகாவின் வாழ்க்கை திசைமாறிவிட்டது. ராதிகாவின் குடும்பச் சூழ்நிலையைக் கருதிய நான், அவருக்குப் பண உதவிகளைச் செய்தேன். அதன்பிறகு என் மகனுக்கு ராதிகாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகளாக இருப்பார்கள் என நம்பினேன். அதன்பிறகு ராதிகாவை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருந்தேன். அம்பத்தூரில் உள்ள என்னுடைய வீட்டில் அவர்களைத் தங்க வைத்தேன். அதன்பிறகுதான் ராதிகாவின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது. நான் அமெரிக்காவின் சிட்டிசன் என்பதால் இந்தியாவில் ராதிகாவைத் திருமணம் செய்ய சட்டச்சிக்கல் உள்ளது. 

ராதிகாவுக்கு முகநூலில் மூன்று அக்கவுன்ட்கள் இருக்கும் தகவல் தெரியவந்தது. அதைப்பார்த்தபோது ராதிகா எப்படிப்பட்டவர் என்று எனக்குப் புரிந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறும்படி ராதிகாவைக் கூறினேன். அப்போது என்னை சென்னை வரவழைத்தார் ராதிகா. நானும் அவரும் ஒரே வீட்டில் குடியிருந்தது இல்லை. சென்னை வந்த சமயத்தில் என்னுடைய பாஸ்போர்ட்டை திருடிய ராதிகா தரப்பினர், என்னை மிரட்டி திருமணம் செய்துவைத்தனர். அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. 

இன்ஜினீயர் ஜெயகரன், நடிகை ராதிகா

ராதிகாவின் குடும்பத்தினருக்கு நான் உதவி செய்தது என்னுடைய முட்டாள்தனம். ராதிகாவின் தரப்பினர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினர். காவல் நிலையத்திலும் அவர்கள் அராஜகம் செய்தனர். அதனால் காவல் துறையினரால் தங்களின் பணிகளைச் செய்ய முடியவில்லை. ராதிகாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் குறித்து புகார் கொடுத்தேன். அதற்கு பழிவாங்கத்தான் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்னுடைய வீட்டை சட்டரீதியாக மீட்க உள்ளேன். என் மீது புகார் கொடுத்த ராதிகாவையும் சட்டரீதியாக சந்திப்பேன். என்னை மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது. ராதிகா தரப்பினருக்கு பணம்தான் குறிக்கோள். என்னை மிரட்டவே போக்ஸோ சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சட்டரீதியாக எல்லாவற்றையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்" என்றார். 

 இன்ஜினீயருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் நரேஷ்குமார்ராதிகாவின் வழக்கறிஞர் நரேஷ்குமாரிடம் பேசினோம். ``ராதிகாவின் சொந்த ஊர் குஜராத். நடிகர் பரத் நடித்த ஒரு படத்திலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்  அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் வீடு, கார் எல்லாம் வாங்கினார். ராதிகாவுக்கும் ஜெயகரன் வாசுதேவனுக்கும் வடபழநி கோயிலில் திருமணம் நடந்ததற்காக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அம்பத்தூர் வீட்டை ஜெயகரன் தரப்பினர் கேட்டதால்தான் பிரச்னையே வந்தது. ராதிகா மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். ஜெயகரனுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டுவருகின்றனர். 
இதனால்தான் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை ஆர்.டி.ஐ. மூலம் கேட்டு சில தகவல்களைப் பெற்றுள்ளோம். ராதிகாவின் 17 வயது மகள் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் மாற்றப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ-யில்தான் அந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்தது.

புழல் காவல் நிலையத்தில் காலையிலிருந்து மாலை வரை ராதிகாவையும் அவரின் 17 வயது மகளையும் சட்டத்துக்கு விரோதமாக காவலில் போலீஸார் வைத்துள்ளனர். அப்போது ராதிகாவின் செல்போனிலிருந்து முக்கியத் தகவல்களை எடுத்துள்ளனர். அவரின் போனை ஹேக் செய்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன். மேலும், ராதிகாவைத் தவறாக சித்திரித்த முதல் கணவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை. ராதிகா கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்புகாரில் புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த எப்.ஐ.ஆர் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருக்கிறது. 

காவல்துறையினர் மூன்றாவது கண் என்று சிசிடிவி கேமராவைச் சொல்கின்றனர். ஆனால், புழல் காவல் நிலையத்திலும் துணைக் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் குறித்து ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்டால், அதைத் தர காவல்துறையினர் மறுக்கின்றனர். துணைக் கமிஷனர் அலுவலகத்தில் வந்த பதிலில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன், தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்ல ராதிகாவின் மகள் தயாராக உள்ளார். சென்னை திருவான்மியூரில் ஜெயகரன் குடியிருந்தார். சென்னை ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ஐ.டி. நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன்கிளை சென்னையில் உள்ளது. ஜெயகரன் குறித்த எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.  

 இன்ஜினீயர் ஜெயகரன், நடிகை ராதிகா

ஜெயகரன் மீது நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார். ராதிகாவிடமிருந்த கார், நகைகளை காவல் துறையினர் மூலம் மிரட்டி வாங்கிவிட்டனர். 52 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ராதிகாவின் பெயரில் இருந்தது. அந்தக் காரை பெயர் மாற்றம் செய்ய காவல் நிலையத்திலேயே ராதிகா மிரட்டப்பட்டுள்ளார். காரின் ஷோரூமில் ஆர்.சி.புக்கை வாங்க, ஜெயகரன் பொய்யான இ.மெயிலை அனுப்பியுள்ளார். அந்த ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. ராதிகாவின் முதல் கணவர் மூலம் தொல்லை கொடுக்கின்றனர். திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது உண்மைகள் வெளிவரும்" என்றார். 

முதல் கணவர் ஹேமந்த்தின் விளக்கத்தைப் பெற தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் அம்மாவிடம் பேசினோம். அவரும் போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.