டிராஃபிக் நெரிசலில் நடந்த துப்பாக்கிச் சண்டை! - டெல்லியில் சினிமா பாணியில் என்கவுன்டர் | Two miscreants killed in exchange of fire with police in Dwarka

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (20/05/2019)

கடைசி தொடர்பு:12:21 (20/05/2019)

டிராஃபிக் நெரிசலில் நடந்த துப்பாக்கிச் சண்டை! - டெல்லியில் சினிமா பாணியில் என்கவுன்டர்

இந்தியாவின் தலைநகரான டெல்லி, எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நகரம். அங்குள்ள துவார்கா மோட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் சற்று கூடுதலாகவே இருந்துள்ளது.

டெல்லி துப்பாக்கி சூடு

மாலை நான்கு மணியளவில், மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) கார் ஒன்று துவார்கா மெட்ரோ வழியாக வந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில், டிஸைர் (Dzire) கார் ஒன்று வேகமாக வந்து மாருதி காருக்கு அருகில் நின்றது. கண் இமைக்கும் நேரத்தில், டிஸைர் காரில் இருந்தவர்கள், மாருதியில் இருந்தவர்கள்மீது  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மாருதி காரின் முன் இருக்கையில் இருந்த  ப்ரவீன் கெஹ்லோட் என்பவர் கொல்லப்பட்டார். பின் இருக்கையில் இருந்த மற்றொருவர் படுகாயமடைந்தார். 

டெல்லி துப்பாக்கி சூடு

துவார்கா பகுதி முழுவதும், இரண்டு நிமிடங்களுக்கு வெறும்  துப்பாக்கிச் சூடு சத்தம் மட்டுமே கேட்டுள்ளது. அதைக் கேட்டதும் பொதுமக்கள் பயத்தில் உறைந்துபோனார்கள். அதே துப்பாக்கிச் சத்தம் கேட்டு, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும் அந்த இரு கும்பல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இதில், டிஸைர் காரில் வந்த விகாஸ் டலால் என்ற மற்றொருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி துப்பாக்கி சூடு

இந்த இரு கும்பல்களுக்கும் இடையே நிலவிவந்த சொத்து பிரச்னையால் மோதல் நடந்துள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய மேலும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணியில் தீவிரம் காட்டிவருவதாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில், டெல்லியில் நடக்கும் ஐந்தாவது கேங் வார் இது எனக் கூறப்பட்டுள்ளது.