`வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி; கேட்காத கணவர்' - 8 பேர் மீது ஆசிட் வீசிய பின்னணி #chennai | Acid attack in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (20/05/2019)

கடைசி தொடர்பு:13:40 (20/05/2019)

`வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி; கேட்காத கணவர்' - 8 பேர் மீது ஆசிட் வீசிய பின்னணி #chennai

ஆசிட் வீசப்பட்ட சம்பவம்

தகராறு நடந்ததும் கணவரையும் அண்ணனையும் வீட்டுக்குள் பூட்டினார் அந்தப் பெண். அதன்பிறகும் தகராறில் ஈடுபட்டவர்கள் வீட்டின் முன் உருட்டுக்கட்டையோடு நின்றனர். இந்தச்சமயத்தில்தான் ஆசிட் எடுத்து 8 பேர் மீது வீசப்பட்ட சம்பவம் நடந்தது. 

சென்னை நெற்குன்றம், முனியப்பாநகர், 3-வது தெருவில் இரவு அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு விரைந்தனர். அப்போது, வலியால் சிலர் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

நெற்குன்றம் முனியப்பாநகரில் உள்ள வீட்டின் 2-வது மாடியில் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ். வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் குடியிருந்துவருகின்றனர். இவர்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்துவருகின்றனர். இவர்களின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம். இவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் மூன்றாவது மாடியில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறார். இவர், வெள்ளிப்பட்டறையில் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி ரஞ்சனி. ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர். இவர், பெயின்டராக வேலை பார்க்கிறார். 
 

ஆசிட் வீசப்பட்ட சம்பவம்

சம்பவத்தன்று கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் வீட்டின் மொட்டை மாடியில் மதுஅருந்தியுள்ளனர். அப்போது பாஸ்கரும், கன்னியப்பனும் அங்கு வந்துள்ளனர். குடிபோதையில் இருந்த பாஸ்கர், கன்னியப்பன், ஏன் மேலே இப்படிச் சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதைப்பார்த்த ரஞ்சனி, கன்னியப்பனையும் பாஸ்கரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். வீட்டின் வெளியில் உருட்டுக்கட்டையுடன் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ். வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் நின்றுகொண்டு தகராறு செய்தனர். 

 ஆசிட் வீசப்பட்ட சம்பவம்

இந்தச்சமயத்தில் வீட்டை திறந்துகொண்டு வெளியில் வந்த கன்னியப்பன், வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும்  ஆசிட்டை எடுத்து வீசினார். வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்த அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ்.வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் மீது ஆசிட் பட்டதும் அவர்கள் அலறிதுடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கன்னியப்பனைப் பிடித்து விசாரித்துவருகிறோம் என்றனர். 

 டாக்டர்கள் கூறுகையில், ``அழகுமுத்து என்பவரின் வலது கண்ணிலும், கருப்பசாமியின் இடது கண்ணிலும் மற்றவர்களின் உடல்களில் ஆங்காங்கே ஆசிட் விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது 8 பேரும் நலமாக இருக்கின்றனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" என்றனர். 

ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த 8 பேரிடமும் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், ``நாங்கள் அனைவரும் மாடியில் வைத்து மதுஅருந்தியபோது, கன்னியப்பனும் பாஸ்கரும் தேவையில்லாமல் எங்களிடம் தகராறு செய்தனர். அங்கு வந்த கன்னியப்பனின் மனைவி இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டினார். அதன்பிறகுதான் கன்னியப்பன் எங்கள் மீது தண்ணீர்போல ஒரு திரவத்தை ஊற்றினார். அது எங்களின் உடலில் பட்டதும் எரிய ஆரம்பித்தது. வலியால் நாங்கள் துடித்தோம். அப்போதுதான் கன்னியப்பன் வீசியது தண்ணீர் இல்லை ஆசிட் எனத் தெரியவந்தது. கன்னியப்பன் இப்படிச் செய்வார் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை" என்று கூறியுள்ளனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னியப்பனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 
 

 நெற்குன்றத்தில் குடிபோதையில் 8 பேர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.