`7 செல்போன்கள், 18 ஆவணங்கள் பறிமுதல்!'- ஐஎஸ்ஸுடன் தொடர்புடையவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் | Cuddalore Lalpet N.I.A Officers Investigation

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/05/2019)

கடைசி தொடர்பு:13:20 (21/05/2019)

`7 செல்போன்கள், 18 ஆவணங்கள் பறிமுதல்!'- ஐஎஸ்ஸுடன் தொடர்புடையவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள்

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் வழங்கிய வாலிபர்
வீட்டில், தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

ஐ.எஸ்-ஸுடன் தொடர்புடையவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாகச் சிலர் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார்கள். இவர்கள்மீது காவல் துறை வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தது. இதில் தொடர்புடைய ரஷீது என்பவரின் வீட்டை சோதனையிட, சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டை ஒற்றைத் தெருவைச் சேர்ந்த சாதுல்லாவின் மகன் முகம்மது ரஷீது (20) என்பவரின் வீட்டை கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த தேசியப் புலனாய்வு முகமையின் துணை கண்காணிப்பாளர் ஷகில்அகமது தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ், 7 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், வங்கி பாஸ் புத்தகங்கள் உட்பட 19   ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். ரஷீத் எம்.எஸ்சி படித்துள்ளார். இவர், ராமேஸ்வரம் கீழக்கரையில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பில் இணைய வேண்டும் என  துண்டுப்பிரசுரம் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து ரஷீதை கண்காணித்துவந்தனர். இந்நிலையில், ரஷீத் திடீரென துபாய் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று அதிகாரிகள் ரஷீது வீட்டை சோதனைசெய்தனர். அவரை கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்றும், அவரது வீட்டாரிடம் கூறிச் சென்றுள்ளனர்.  மேலும், முகம்மது ரஷீது வாட்ஸ் அப் குரூப் வாயிலாக, ஐஎஸ்ஐஎஸ்  அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அதன் அடிப்டையில் அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டதாகவும் உள்ளூர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.