`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்!'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம் | The real estate owner suicide note, which he shares with friends before attempting suicide

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (21/05/2019)

கடைசி தொடர்பு:13:44 (21/05/2019)

`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்!'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

தற்கொலை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சின்ராஜ்

தற்கொலை செய்வதற்கு முன், மரண வாக்குமூலத்தை வீடியோவாக எடுத்த ரியல் எஸ்டேட் அதிபர், அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில், `இந்த ஆட்சியில் அது நடக்காது, ஸ்டாலினும் திருமாவும்தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மண்ணை விட்டு மறைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்னைப் போரூர், சேக்மானியன், வெங்கடேஸ்வரா நகர், 2 வது தெருவைச் சேர்ந்தவர் சின்ராஜ் (48). இவரின் மனைவி ரிட்டா இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனால் கணவனும் மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். இந்தநிலையில், சின்ராஜின் அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரிட்டா, கதவைத் தட்டியுள்ளார். ஆனால் சின்ராஜ் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரிட்டா, ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது தூக்கில் சின்ராஜ் தொங்கிக்கொண்டிருந்தார். 

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரிட்டா, கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சின்ராஜ் அறை, உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதையடுத்து கதவை உடைத்த போலீஸார், சின்ராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சின்ராஜ் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சின்ராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்ராஜ் குடும்பம் பொருளாதார ரீதியில் சிக்கலைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் சின்ராஜின் உடல் நலத்திலும் பிரச்னை ஏற்பட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார்" என்றனர். 

சின்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன் மரணவாக்குமூலமாக ஒரு வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் அவர் கண்ணீர்மல்க கூறியிருப்பதாவது, ``வணக்கம், பஞ்சாயத்து அப்ரூவல் நின்றதோ அப்போதே ரியல் எஸ்டேட் செய்யக்கூடியவர்களின் அத்தனை பேருடைய லைஃப்பும் வீணாகிபோய்விட்டது. முட்டி மோதி ஏதாவது பண்ணுவோம் என்று வட்டியை வாங்கி வட்டிக்கு மேல் வட்டி வாங்கினாலும் பல பிரச்னை. தொடர்ந்து, அப்ரூவல் வாங்கச் சென்றால் ஆளுங்கட்சியினரின் பெயர்களைச் சொல்லி பணம் கேட்டு எங்களை உயிரோடு கொல்கிறார்கள். 

தற்கொலை

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது. இந்தப்பக்கம் கஸ்டமருக்கு பதில் சொல்ல முடியவில்லை. இடத்தின் ஓனருக்கும் இடத்தை வாங்குபவர்களுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் ரியல் எஸ்டேட்டை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். கடந்த 6 ஆண்டுகளாக இந்தநிலைதான் இந்த ஆட்சியில் இருக்கிறது. ஒரு லேவலுக்கு மேல் சென்றுவிட்டது. ஓடி, ஓடி... என்னடா வாழ்க்கை என்று தள்ளப்பட்டுவிட்டேன். இனிமேல் வாழ்வதே கேள்விக்குறியாக உள்ளது. யாருக்குத்தான் பதில் சொல்வது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. நிம்மதியில்லை என்ற மனஉளைச்சலோடு சாகலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இனிமேலாவது ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி மற்றும் சப்போர்ட் செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கவேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. 

இந்த ஆட்சியில் அது நடக்குமா என்பது தெரியல. ஸ்டாலினும் திருமா அவர்களும் நிச்சயமாக எடுத்துச் செய்ய வேண்டும். அதன்பிறகு ரியல் எஸ்டேட் தொழில் நல்லா வரும். கண்டிப்பாக அவர்கள்தான் அடுத்து ஆட்சிக்குவருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மண்ணை விட்டு மறைகிறேன். என் குடும்பத்தை விட்டு செல்கிறேன் என்ற கஷ்டம் எனக்குள் இருக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இதற்கு மேல் உயிர்வாழ்ந்தால் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறேன். இதனால் நான் வருகிறேன். நன்றி ஜெய்ஹிந்த்" என்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.  

சின்ராஜ், தற்கொலை செய்த தகவலையறிந்த அவரின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு கணவனின் சடலத்தைப்பார்த்து ரிட்டாவும் மற்றும் அவரின் உறவினர்களும் கதறி அழுதனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்ராஜ் தற்கொலை முடிவு எடுத்தாக போலீஸார் தெரிவித்தனர். அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விசுவாசி என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். 

சின்ராஜின் மரண வாக்குமூலத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பதவியில் உள்ள ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அப்ரூவலுக்கு சின்ராஜிடம் பணத்தைக் கேட்டவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சின்ராஜின் மரண வாக்குமூலம் அடிப்படையில் அப்ரூவலுக்கு பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்