`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது!'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக் | Chennai police busts Vehicle theft gang

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (21/05/2019)

கடைசி தொடர்பு:16:05 (21/05/2019)

`இந்த ஸ்பேர் பார்ட்ஸ் உன் பைக்குக்கு செட்ஆகாது!'- திருட ஐடியா கொடுத்த மெக்கானிக்

பைக் திருட்டில் இன்ஜினீயரிங் மாணவன்

விபத்தில் ரேஸ் பைக் சிக்கியதும் அதைச் சரிசெய்ய பைக் திருடனாக மாறியுள்ளார் வாலிபர். அவருக்கு உதவிய இன்ஜினீயரிங் மாணவரும் சிக்கிக்கொண்டார். திருட்டு பைக் வாங்கிய தனியார் நிறுவன ஊழியரும் தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். 

சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரின் விலையுயர்ந்த பைக் கடந்த 10-ம் தேதி திருட்டுப்போனது. இதுகுறித்து நிர்மல்குமார், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவிக் கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் போலீஸார் ராஜேஷ், சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்களோடு சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகின. 

 பைக் திருட்டில் இன்ஜினீயரிங் மாணவன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நிர்மல்குமார் கொடுத்த புகாரின்பேரில் பைக் திருடப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது  இருவர் பைக்கைத் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யாரென்று விசாரித்தோம். விசாரணையில் பைக்கைத் திருடியது எம்.கே.பி.நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார், அவரின் நண்பர் அஜித்குமார் என்பது தெரியவந்தது. இதனால் அவர்களைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் சந்தோஷ்குமார் கூறிய தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 10-ம் வகுப்பு வரை படித்த சந்தோஷ்குமார், பைக் ரேஸ் மற்றும் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்தார். அந்தப்பணத்தில் சந்தோஷ்குமார், சந்தோஷமாக வாழ்ந்துவந்தார். 

இந்தச்சமயத்தில்தான் பைக்ரேஸில் சென்றபோது சந்தோஷ்குமாரின் பைக் விபத்தில் சிக்கி சேதமானது. விலை உயர்ந்த பைக்கை சர்வீஸ் செய்ய கொடுங்கையூரைச் சேர்ந்த பிரதிவிராஜ் என்ற மெக்கானிக்கிடம் கொடுத்துள்ளார். அப்போது இந்தப் பைக்கில் ஸ்பேர் பார்ட்ஸ்கள் எல்லாம் அதிகவிலை. எனவே, அட்வான்ஸாக குறிப்பிட்ட தொகையைக் கொடுங்கள் என்று சந்தோஷ்குமாரிடம் பிரதிவிராஜ் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று சந்தோஷ்குமார் கூறியுள்ளார். 

 பைக் திருட்டில் இன்ஜினீயரிங் மாணவன்

இதையடுத்துதான் மெக்கானிக் பிரதிவிதிராஜ் கொடுத்த ஐடியாவின் பேரில் சந்தோஷ்குமார் பைக் திருடனாக மாறியுள்ளார். தன்னுடைய பைக்கை சர்வீஸ் செய்ய, பைக் ஒன்றை சந்தோஷ்குமார் திருடியுள்ளார். அதை மெக்கானிக் பிரதிவிராஜிடம் கொண்டு வந்தபோது, இந்தப் பைக்கில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸ்கள் உன்னுடைய பைக்குக்கு செட்ஆகாது என்று சந்தோஷ்குமாரிடம் மெக்கானிக் கூறியுள்ளார். இதையடுத்து, திருடிய பைக்கை சந்தோஷ்குமார் குறைந்தவிலைக்கு விற்றுள்ளார். அந்தப்பணத்தைக் கொண்டு பைக்கை சர்வீஸ் செய்ய முடியாது என்று மீண்டும் மெக்கானிக் கூறியதால், சந்தோஷ்குமார் அடுத்த பைக்கைத் திருடியுள்ளார். இந்த வழக்கில் சந்தோஷ்குமார், அஜித்குமார், திருட்டு பைக்கை வாங்கிய ஜான்சாமுவேல், மெக்கானிக் பிரதிவிராஜ் மற்றும் திருட்டு பைக்கை விற்க ஏற்பாடு செய்த பாலாஜி ஆகிய 5 பேரை கைதுசெய்துள்ளோம். அவர்களிடமிருந்து விலைஉயர்ந்த பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

மெக்கானிக் ஐடியாவில்  பைக் திருட்டில் மாணவன்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சந்தோஷ்குமார் மீது மாதவரம், பட்டினம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளன. சந்தோஷ்குமார் திருடிய பைக்கின் விலை 2 லட்சம் ரூபாய். அந்த பைக் 8000 ரூபாய்க்கு கிடைத்ததால் ஆசைப்பட்டு வாங்கியுள்ளார் தனியார் நிறுவன ஊழியர் ஜான்சாமுவேல். சந்தோஷ்குமாரின் நண்பர் அஜித்குமார், ஒரகடத்தில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினீயரிங் முதலாமாண்டு படித்துவருகிறார். நிர்மல்குமாரின் விலை உயர்ந்த பைக்கிலிருந்து பல பாகங்கள் கழற்றப்பட்டு, அது எலும்புக்கூடான நிலையில் மெக்கானிக் கடையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தப் பைக்கை மீட்டுள்ளோம். இந்த பைக் திருட்டுக் கும்பல் வேறு எங்காவது பைக்குகளைத் திருடினார்களா என்று விசாரித்துவருகிறோம்" என்றார்.