‘தூக்கத்தில் தெரியாமல் செய்துவிட்டேன்!’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம் | Rajasthan Woman Drowns Son In Water Tank

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (22/05/2019)

கடைசி தொடர்பு:10:23 (22/05/2019)

‘தூக்கத்தில் தெரியாமல் செய்துவிட்டேன்!’ - 3 வயது மகனைக் கொலைசெய்த தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்தவர், தீபிகா குஜ்ஜர். இவரது கணவர் சீதாராம் குஜ்ஜர், ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சனிக்கிழமை, வழக்கம்போல இருவரும் தங்கள் குழந்தையுடன் தூங்கியுள்ளனர்.

க்ரைம்

அப்போது, தீபிகா மட்டும் நள்ளிரவில் எழுந்து தன் மகனை தூக்கிச்சென்று, மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் வீசி மூழ்கடித்துள்ளார். பிறகு, எதுவும் நடக்காததுபோல மீண்டும் வந்து தன் இடத்தில் படுத்து உறங்கியுள்ளார். பின்னர், நள்ளிரவு 1:30 மணிக்கு சீதாரம் எழுந்து தன் மகனைக் காணவில்லை எனத் தேடியுள்ளார். எங்கு தேடியும் மகன் கிடைத்ததால், மொத்த குடும்பம் பதற்றமானது. வீட்டில் இருந்த அனைவரும் காணாமல்போன சிறுவனைத் தேடியுள்ளனர். அவர்களுடன் இணைந்து தீபிகாவும் மகனைத் தேடியுள்ளார்.

கொலை

இறுதியில், சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் கிடப்பதை தீபிகாவின் மாமியார் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். இதை அறிந்ததும் அனைவரும் கதறி அழவே, அவர்களுடன் தீபிகாவும் அழுதுள்ளார். இதையடுத்து, சிறுவன் இறந்த தகவல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அப்பகுதி காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சிறுவன் இறந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, சிறுவனின் தாய் தீபிகாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஞாயிறு முதல் திங்கள்கிழமை மாலை வரை நடந்த விசாரணையில், தீபிகா ஒன்றுக்கொன்று முரணாகவே பேசியுள்ளார். இதனால், தீபிகா மீது காவலர்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சிறுவனை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்ததை தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். 

கைது

 தூக்கத்தில் தனக்கே தெரியாமல் இப்படிச் செய்துவிட்டதாக போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவனைக் கொலைசெய்த குற்றத்துக்காக அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய  சட்டப் பிரிவு 302-ன் கீழ் தீபிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபிகாவுக்கு மனநிலை சரியாக இருப்பதாகவும், இதற்கு முன் அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, இரண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டதாகக் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.