டிக் டாக் பிரபலம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை! - குற்றவாளிகளுக்கு வலைவீசும் டெல்லி போலீஸ் | TikTok celebrity Mohit Mor shot dead in delhi

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (22/05/2019)

கடைசி தொடர்பு:12:47 (22/05/2019)

டிக் டாக் பிரபலம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை! - குற்றவாளிகளுக்கு வலைவீசும் டெல்லி போலீஸ்

டிக் டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலமானவர் மோகித் மோர். ஹரியானாவைச் சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் உள்ள நஜாஃப்கார் பகுதியில் வசித்து வருகிறார். ஜிம் பயிற்சியாளரான மோகித்துக்கு டிக் டாக் செயலியில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர்.

டிக் டாக்

இந்நிலையில் நஜாஃப்கார் பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நேற்று மாலை ஆறு மணியளவில் மோகித் அமர்ந்திருந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் மோகித்தைச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோகித் மோர்

இதுபற்றி பேசியுள்ள டெல்லிக் காவல்துறையினர், ``மோகித்தை துப்பாக்கியால் சுட்ட பிறகு அந்த மூவரும் ஸ்டூடியோவை விட்டு வெளியில் வரும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. அதில் இரண்டு பேர் ஹெல்மட் அணிந்திருந்ததால் அவர்கள் யார் எனத் தெரியவில்லை. மூன்றாவது நபர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். 

சிசிடிவி காட்சி

மேலும், மோகித்தின் டிக் டாக் ஆப் கணக்கு, போன் கால்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை துவாரகா பகுதியில் இரு கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தற்போது மோகித் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மோகித் மீது இதுவரை எந்தக் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.