தவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம் | Mother killed son with another men

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (22/05/2019)

கடைசி தொடர்பு:14:07 (22/05/2019)

தவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்

மகனை கொலை செய்த தாய்

முதல் கணவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அந்த வாழ்க்கை புவனேஸ்வரிக்கு நரகமானது. இதனால் கார்த்திக்கேயனை நம்பிய புவனேஸ்வரி, குழந்தையுடன் சென்னை வந்தார். சந்தோஷமாகச் சென்ற வாழ்க்கையில் குழந்தையால் சிக்கல் ஏற்பட, மகன் என்றுகூட பாராமல் கொலை செய்துள்ளார் தாய் புவனேஸ்வரி 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், வெல்டர்.  இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர்களின் மகன் கிஷோர் (3). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் புவனேஸ்வரி, மகனுடன் சில மாதங்களுக்கு முன் மாயமானார். இதனால் சோமசுந்தரம், மனைவியையும் மகனையும் தேடினார். விஷயம் அறிந்து அமைதியாகிவிட்டார். 

 இந்த நிலையில் புவனேஸ்வரி, ஈரோட்டில் உள்ள தன்னுடைய தாய் புஷ்பாவை சில நாள்களுக்கு முன் போனில் தொடர்புகொண்டார். அப்போது, ''மாடியிலிருந்து கிஷோர் தவறி விழுந்துவிட்டான். அவனை திருவாரூக்கு அழைத்துவருகிறேன்'' என்று கூறினார். இதனால், திருவாரூரில் மகள் மற்றும் பேரனை எதிர்பார்த்து புஷ்பா காத்திருந்தார். திருவாருக்குச் சென்ற புவனேஸ்வரி, புஷ்பாவைப் பார்த்து கதறி அழுதார். அவரிடம் என்ன என்று புஷ்பா விசாரித்தபோது, கிஷோர் இறந்துவிட்டதாகக் கூறினார். 

 கொலை செய்யப்பட்ட கிஷோர்

இதையடுத்து, கிஷோரின் மரணம்குறித்து புவனேஸ்வரி கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத புஷ்பா, திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது அங்கிருந்த போலீஸார், சம்பவம் நடந்த இடம் அம்பத்தூர் என்பதால், அங்கு செல்லுங்கள் என்று கூறினர்.  கிஷோரின் சடலத்தைத் தூக்கிக்கொண்டு புஷ்பா, திருவாரூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். அவருடன் புவனேஸ்வரி, கார்த்திகேயனும் போலீஸாரும் வந்தனர். 

 சுமார் 630 கி.மீட்டர் தூரம் அவர்கள் பயணித்து, அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடியிடம், பேரன் கிஷோரை மகள் கொலை செய்துவிட்டதாக புஷ்பா கூறினார். அதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் கார்த்திகேயனிடம் உதவி கமிஷனர் கண்ணன், உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருவரிடமும் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ''புவனேஸ்வரிக்கு, 16 வயதில் உறவினர் சோமசுந்தரத்துடன் திருமணம் நடந்துள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான சோமசுந்தரம், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.  புவனேஸ்வரியின் அம்மா புஷ்பா, சமூக சேவகி. அவர், சில ஆண்டுகளுக்கு முன் சென்னை போரூரில் நடந்த பெண்கள் மாநாட்டிற்கு புவனஸ்வரியை அழைத்து  வந்துள்ளார். அப்போது, திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் புவனேஸ்வரிக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே கணவரின் டார்ச்சர் காரணமாக மனவேதனையிலிருந்த புவனேஸ்வரிக்கு, கார்த்திகேயனின் அன்பாக பேச்சு பிடித்துப்போனது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன், ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மகன் கிஷோருடன் வந்தார் புவனேஸ்வரி. சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு, வ.உ.சி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து புவனேஸ்வரியும் கிஷோரும் தங்கினர். கார்த்திக்கேயனும் புவனேஸ்வரியும் கணவன் மனைவி போல வாழ்ந்தனர். 

மகனை கொலை செய்த புவனேஸ்வரி

 மகன் கிஷோர், இருவருக்கும் இடையூறாக இருப்பதாக கருதினார் புவனேஸ்வரி. சம்பவத்தன்று, கிஷோரை தோசைக் கரண்டியால் காலில் அடித்துள்ளார். புவனேஸ்வரியுடன் சேர்ந்து கார்த்திகேயனும் கிஷோரைத் தாக்கியுள்ளார். அப்போது, கிஷோர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரைத் தூக்கிக்கொண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். கிஷோரை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி கூறினர். 

 உடனடியாக கிஷோரை தூக்கிக்கொண்டு புவனேஸ்வரியும் கார்த்திகேயனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கிஷோர் இறந்துவிட்டார். மருத்துவமனைக்குள் சென்றால் சிக்கல் எனக்கருதிய புவனேஸ்வரியும் கார்த்திகேயனும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் சென்றனர்.  கிஷோரின் சடலத்தை திருவாரூரில் எரிக்கத் திட்டமிட்டனர். அப்போதுதான் கிஷோரின் பாட்டி புஷ்பா, கிஷோரின் சடலத்தோடு வந்து எங்களிடம் (அம்பத்தூர் காவல் நிலையத்தில்) புகார் கொடுத்தார். கிஷோரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். மகனை கொலை செய்த குற்றத்துக்காக, புவனேஸ்வரியையும் கொலைக்கு உடந்தையாக இருந்த கார்த்திகேயனையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்'' என்றனர். 

 அழுகிய குழந்தையின் சடலம் 

 கடந்த 19-ம் தேதி கிஷோர் இறந்தார். அவரின் சடலத்தோடு புவனேஸ்வரியும் கார்த்திகேயனும் திருவாரூர் சென்றனர். 20-ம் தேதி திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால், திருவாரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல், புஷ்பாவை அலைக்கழித்தனர். தொடர்ந்து, கிஷோரின் சடலத்தோடு 21-ம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு புஷ்பா வந்தார். இதனால், கிஷோரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. திருவாரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியையும் கார்த்திகேயனையும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் அதைவிட்டுவிட்டு, கிஷோரின் சடலத்தோடு புஷ்பா, புவனேஸ்வரி, கார்த்திகேயனை அம்பத்தூருக்கு அனுப்பிவைத்துவிட்டனர். திருவாரூர் போலீஸாரின் இத்தகைய செயல்கள், மனித உரிமை மீறல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 


கிஷோரை கொலை செய்த கார்த்திக்கேயன் 

காட்டிக்கொடுத்த பாட்டி

அம்பத்தூர் காவல் நிலையத்தில் கிஷோரின் சடலத்தோடு வந்து இறங்கிய புஷ்பா, கையோடு புவனேஸ்வரியையும் கார்த்திகேயனையும் அழைத்துவந்திருந்தார். போலீஸாரிடம், 'என் பேரனை கொலை செய்தவர்கள் இவர்கள்தான்' என அடையாளம் காட்டினார். இதனால், அம்பத்தூர் காவல் நிலையம் பரபரப்பானது. 

புவனேஸ்வரியிடமும் கார்த்திகேயனிடமும் போலீஸார் விசாரித்தபோது, மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறினர். அதன்பிறகு, இருவரிடமும் போலீஸார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது புவனேஸ்வரி, கிஷோரை கார்த்திகேயன் தாக்கியதைக் கூறினார். அதுபோல கார்த்திகேயனும், கிஷோரை புவனேஸ்வரி தோசைக் கரண்டியால் தாக்கியதாகத் தெரிவித்தார். அவர்கள் இருவரும் கூறிய தகவலால் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர். 

உடல் முழுவதும் காயங்கள் 

 கார்த்திகேயனுடன்  புவனேஸ்வரி தங்கியிருந்தது கிஷோருக்குப் பிடிக்கவில்லை. இதனால்தான் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தவுடன், அவன் அழுவதை வாடிக்கையாக வைத்திருந்தான். இது, இருவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், கிஷோரை இருவரும் சேர்ந்து அடித்துள்ளனர். அதில், கிஷோரின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

புவனேஸ்வரியின் முதல் கணவர் சோமசுந்தரம், மனைவியையும் குழந்தையையும் ஈரோட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், புவனேஸ்வரி முதல் கணவருடன் செல்ல விரும்பவில்லை. அதன்பிறகு, குழந்தையாவது தன்னிடம் கொடுத்துவிடும்படி சோமசுந்தரம் கேட்டுள்ளார். அதற்கும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, சோமசுந்தரம் குழந்தையை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுத்துவந்த சூழலில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.