2 குழந்தைகளை கொலை செய்தது ஏன்?- தற்கொலைக்கு முயன்ற தாயின் வாக்குமூலம்  | Chennai woman tries to commit suicide after killing 2 children over family problem

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (24/05/2019)

கடைசி தொடர்பு:17:43 (24/05/2019)

2 குழந்தைகளை கொலை செய்தது ஏன்?- தற்கொலைக்கு முயன்ற தாயின் வாக்குமூலம் 

``அந்த நம்பிக்கை துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை. இதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்'' என்று இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த தாய் கண்ணீர்மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த தாய்

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், தாமஸ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பரபரப்பானது. ஆம்புலன்ஸ் வாகனமும் போலீஸ் வாகனமும் அந்தக் குடியிருப்பு பகுதியை நோக்கிச் சென்றது. வீட்டுக்குள் நுழைந்த போலீஸார், மயங்கிய நிலையில் கிடந்த இரண்டு குழந்தைகளையும், பெண் ஒருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. அந்தப் பெண் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்று கூறினர். 

இதையடுத்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், என்ன நடந்தது என்று விசாரித்தார். இறந்த குழந்தைகளின் பெயர் ஸ்ரீலட்சுமி (3), ஆதிதேஷ் (2) எனத் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சைஜா (29) என்று விசாரணையில் தெரியவந்தது. டாக்டர்களின் சிகிச்சைக்குப்பிறகு சைஜா, உயிர்பிழைத்துக் கொண்டார். அவர், போலீஸாரிடம் கண்ணீர் மல்க அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். 

``என்னுடைய கணவர் பெயர் சிபிராஜ். லோன் வாங்கி கொடுக்கும் வேலை செய்துவந்தார். அவருக்கு நான் இரண்டாவது மனைவி. எங்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். சந்தோஷமாக எங்களின் குடும்ப வாழ்க்கை சென்றது. சில மாதங்களுக்கு முன் சிபிராஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்குச் சென்றபோது கல்லீரலில் பாதிப்பு என்று டாக்டர்கள் கூறினர். அதற்கு அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச்சமயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிராஜ் திடீரென இறந்துவிட்டார். அவர் மறைவுக்குப்பிறகுதான் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிட்டது. 

இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு இனிமேல் எப்படி வாழ்வது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்போது, சிபிராஜின் ரகசியம் எனக்குத் தெரியவந்தது. அவர், முதல் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அதை மறைத்து என்னை ஏமாற்றி வந்துள்ளார். மேலும், சிபிராஜிக்கு இன்னும் சில பெண்களுடன் பழக்கம் இருந்தது அவரின் இறப்புக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. என்னை நம்ப வைத்து ஏமாற்றியதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். 

இருப்பினும் குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். சிபிராஜ், இறந்தபிறகு அவர் வாங்கிய கடனை என்னிடம் கேட்டனர். ஏற்கெனவே வாழ வழியில்லாமல் தவித்த நான் எப்படி கடன் தொகையைக் கொடுக்க முடியும். கடனுக்காக காரை அடகு வைத்தேன். வீட்டிலிருந்த நகைகளை விற்று சமாளித்தேன். ஆனால், சிபிராஜ் வாங்கிய கடனை என்னால் திரும்ப செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. கடன் தொல்லையால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்தேன். கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. 

 இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த தாய்

இதனால், கேரளாவில் இருக்கும் சிபிராஜின் முதல் மனைவிக்கு நானும் குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்ததோடு என்னிடம் போனில் பேசினார். `தவறான முடிவை எடுக்க வேண்டாம் சைஜா. உன்னையும் குழந்தைகளையும் நான் காப்பாற்றுகிறேன். நீ உடனடியாக கேரளாவுக்குப் புறப்பட்டு வா' என்று கூறினார். அவரின் அன்பும் ஆதரவான வார்த்தைகளும் என்னை ஆறுதல்படுத்தியது. கேரளாவுக்குச் சென்றால் கடன் கொடுத்தவர்கள் சும்மா விடுவார்களா என்ற கேள்வி எழுந்தது. மேலும், சிபிராஜின் முதல் மனைவிக்குத் தொல்லையாக குழந்தைகளும் நானும் இருக்க விரும்பவில்லை. இதனால்தான் சம்பவத்தன்று சிபிராஜின் கல்லீரல் சிகிச்சைக்குப் பயன்படுத்திய மருந்தை குழந்தைகளின் வாயில் ஊற்றினேன். அதைக் குடித்த சில மணி நேரத்திலேயே இருவரும் வாயில் நுரைதள்ளி மயங்கினார்கள். அதற்குள் நானும் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டேன். ஆனால், குழந்தைகளைக் கொன்ற பாவம் என்னை சும்மா விடாது. நானும் சாகவேண்டும். என்னை அவர் ஏமாற்றிவிட்டார். அந்தத் துரோகத்தை என்னால் மறந்து இனிமேலும் என்னால் உயிருடன் வாழ முடியாது" என்று கூறியுள்ளார். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `` சிபிராஜ், சைஜா தம்பதி ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சிபிராஜ், திருமணமானநிலையில்தான் சைஜாவைச் சந்தித்துள்ளார். இருவரும் காதலித்துள்ளனர். அதன்பிறகு திருமணம் செய்துள்ளனர். சென்னையிலும் கேரளாவிலும் அவர்கள் குடியிருந்துள்ளனர். சைஜாவிடம், முதல் மனைவியுடன் பேசுவதில்லை என்று கூறி வந்துள்ளார் சிபிராஜ். அதை முழுமையாக நம்பியுள்ளார் சைஜா. சிபிராஜ் மருத்துவமனையில் இருந்தசமயத்தில்தான் சில உண்மைகளை சைஜாவிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட சைஜா அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்.

`உங்களை நம்பினேன். நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்' என்று மருத்துவமனையிலேயே கதறித் துடித்துள்ளார். ஆனாலும் சிபிராஜை காப்பாற்ற சைஜா போராடியுள்ளார். மருத்துவச் செலவு, ஆடம்பர வாழ்க்கை காரணமாக சைஜாவுக்கு லட்சக்கணக்கில் கடன் உள்ளது. இதனால்தான் சைஜா, குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், சைஜா பிழைத்துக்கொண்டார். குழந்தைகள் இறந்துவிட்டனர். இதனால் ஆதரவற்ற நிலையில் சைஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்துக்காக சைஜா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் சிகிச்சையில் இருப்பதால் அவரைக் கைது செய்யவில்லை. சிகிச்சைக்குப்பிறகு சைஜா, சிறையில் அடைக்கப்படுவார்" என்றார்.