`இன்னொரு முட்டை கொடுங்க அக்கா' - பசியால் வாடிய 4 வயது சிறுவனை பதறவைத்த சமையலர்! | A 4-year-old boy burnt with steaming khichdi by a woman for asking an extra egg

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/05/2019)

கடைசி தொடர்பு:09:05 (27/05/2019)

`இன்னொரு முட்டை கொடுங்க அக்கா' - பசியால் வாடிய 4 வயது சிறுவனை பதறவைத்த சமையலர்!

கூடுதலாக ஒரு முட்டை கேட்ட குழந்தையின் மீது பெண் பணியாளர் ஒருவர் கொதித்துக்கொண்டிருந்த கிச்சடியைத் தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்

இது நடந்தது மேற்குவங்க மாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில். ரகுநாத் கன்ஜ் என்னும் இடத்தில் நம்மூர் அங்கன்வாடிபோல் குழந்தைகளுக்கான மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வழக்கம்போல் குழந்தைகள் வந்திருந்தனர். அவர்களுக்குக் காலை நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. அப்போது 4 வயதான சிறுவன் ஒருவன் கூடுதலாக ஒரு முட்டை கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனைக் கேட்ட சீஹரி பவா எனும் பெண் சமையலர் அந்தச் சிறுவன்மீது கொதித்துக்கொண்டிருந்த கிச்சடியைத் தூக்கி வீசியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் வலியால் கதறியுள்ளார். பின்னர் அந்த சமையலர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். சிறுவன் வலியுடன் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்துள்ளது. 

வீட்டுக்குச் சென்ற சிறுவனை அவனது தாய் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கால் மற்றும் இடுப்புப் பகுதியில் மட்டும் கொதி நீர் பட்டதால் மற்ற பகுதிகளில் சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரம் காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சம்பவம் குறித்துப் பேசிய சிறுவனின் தாய், ``காலையில் 8 மணிக்குத்தான் பள்ளிக்கூடத்தில் விட்டுச் சென்றேன். 9 மணிக்கு அவன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். உடலில் காயங்கள் இருந்ததால் பதறிப் போய் மருத்துவமனையில் சேர்த்தேன். பள்ளிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு முட்டை கூடுதலாக கேட்டதுக்காக அவன் மீது இப்படிச் செய்துள்ளார் அந்தப் பெண். சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளேன்" என அவர் கூறியுள்ளார். 

குழந்தை

மேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, ``நான் எந்தக் குறும்பும் அந்த அக்காவிடம் செய்யவில்லை. ஆனால் என்னையும், மற்ற பசங்களையும் டீச்சர் அடித்தார். ஏன் என் மீது கிச்சடியை கொட்டினார்கள் எனத் தெரியவில்லை" என வெள்ளந்தியாக பேசியுள்ளார். இதற்கிடையே, அந்த பெண் சமையலர் மீது வழக்கு பதிந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க