`தவறான நட்பால் ஆணவக் கொலை?!' - ராமநாதபுரம் பெண் கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள் | Ramnad woman murdered by relatives for having affair

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:54 (27/05/2019)

`தவறான நட்பால் ஆணவக் கொலை?!' - ராமநாதபுரம் பெண் கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

வேற்று சமுதாயத்தைச் சேர்ந்தவருடன் தவறான தொடர்பு வைத்திருந்த பெண்ணை ஆணவக் கொலை செய்த உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.

கொலை

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிராமம் டி.வல்லக்குளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டியின் மகள் ராதிகா. திருமணமான இவர் தன் கணவர் அருண்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது சொந்த ஊரான டி.வல்லக்குளத்தில் உள்ள பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் ராதிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

இதையறிந்த அவ்வூரைச் சேர்ந்த ராதிகாவின் உறவினர்கள் சிலர் கண்டித்துள்ளனர். இதன் பின்பும் ராதிகாவும், கருப்பசாமியும் தனிமையில் இருந்துள்ளனர். இதை நேரில் கண்ட ராதிகாவின் உறவினர்கள் கருப்பசாமியை தாக்கியுள்ளனர். இதனை ராதிகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதி ராதிகாவின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள ஊரணி கரையோரம் கிடந்துள்ளது. கருப்பசாமியுடன் இருந்தபோது உறவினர்கள் செய்த தகராறால் மனமுடைந்த ராதிகா, தற்கொலை செய்திருக்கக் கூடும் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அபிராமம் போலீஸார் ராதிகாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். 

ஆணவக் கொலை செய்யப்பட்ட ராதிகா

ஆனால், ராதிகா கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பிரேதப் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்வதுடன், வன்கொடுமை பிரிவின்படி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி ராதிகாவின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்தனர். 8 நாள்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ராதிகாவின் குடும்பத்துக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. இதன்பின் ராதிகாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, ராதிகா கொலை தொடர்பாக அபிராமம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் ராதிகாவை அவரது உறவினர்களே ஆணவக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. ராதிகாவின் உறவினர்களான முருகன், மோகன், அழகர்சாமி, முனியசாமி, முருகனின் மனைவி பாப்பா  மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து ராதிகாவை தாக்கி கொலை செய்து உடலை மறைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலை ஊரணிக்கரையில் உடலை  எரித்துள்ளனர். இதை மறைக்க ராதிகா எழுதியது போன்ற கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். இதையடுத்து, ஆணவக் கொலையில் ஈடுபட்ட முருகன், மோகன், அழகர்சாமி, பாப்பா உள்ளிட்ட 6 பேரை அபிராமம் போலீஸார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.