கோட்டூர்புரம் சாலையில் கிடந்த ரூ.1.5 கோடி!- அதிகாலையில் நடந்த போலீஸ் சேஸிங் | Chennai police recovered one and half crore rupees cash from kotturpuram road

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (27/05/2019)

கடைசி தொடர்பு:17:57 (27/05/2019)

கோட்டூர்புரம் சாலையில் கிடந்த ரூ.1.5 கோடி!- அதிகாலையில் நடந்த போலீஸ் சேஸிங்

சென்னை கோட்டூர்புரத்தில் அதிகாலையில் மூன்று பைகளுடன் பைக்கில் சென்றவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸார் துரத்தினர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க பைக்கை வேகமாக அந்த நபர் ஓட்டியுள்ளார். இதில் பைக்கிலிருந்த பைகள் கீழே விழுந்தன. அதில்தான் கோடிக்கணக்கான ரூபாய் இருந்துள்ளது. 

பணத்தை கைப்பற்றி போலீஸ்

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சக்திவேல், ஊர்காவல் படையைச் சேர்ந்த அண்ணசாமி ஆகியோர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வரதாபுரம் அருகே உள்ள லாக் தெருவில் பைக் வேகமாகச் சென்றது. அதைப்பார்த்த போலீஸார், சந்தேகத்தின்பேரில் பைக்கை விரட்டினர். 

அப்போது, பைக்கிலிருந்து மூன்று பைகள் கீழே விழுந்தன. ஆனால், அதை பைக்கில் சென்றவர் எடுக்காமல் மின்னல் வேகத்தில் பறந்தார். பின்னால் விரட்டிச் சென்ற போலீஸார் அந்தப் பைகளை எடுத்து திறந்துப்பார்த்தனர். அப்போது போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்ததது. மூன்று பைகளிலும் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. 

 பணத்தை கைப்பற்றி போலீஸ்

இதுகுறித்து போலீஸார், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு பணப் பைகள் கொண்டு வரப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. அதில், 1,56,61,560 ரூபாயும் இரண்டு தங்க வளையல்களும் இருந்தன. இன்ஸ்பெக்டரின் பொறுப்பில் பாதுகாப்பாக அந்த ரூபாயும் தங்க வளையல்களும் உள்ளன. பைக்கில் சென்றவர்கள் யார், இந்தப் பணம் யாருடையது என்று கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று ஜிப்ஸி வாகனத்தில் நாங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டோம். அப்போதுதான் பைக்கில் சென்றவர் மீது எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து பைக்கில் சென்றவரை  ஜிப்ஸியில் விரட்டினோம். ஆனால், அவர் நிற்காமல் சென்றுவிட்டார். பைக்கின் நம்பரை வைத்து அவர் யாரென்று விசாரணை நடந்துவருகிறது. பைக்கில் இருந்து கீழே விழுந்த பைகளில் உள்ள பணம் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். 

நாடாளுமன்றம், இடைத்தேர்தல் ஆகியவை முடிந்துள்ள நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை அதிகாலையில் பைக்கில் கொண்டு சென்றவர் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது. தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளுக்குப் பயந்து தேர்தல் முடிந்ததும் பணத்தை இடமாற்றினார்களா அல்லது ஹவாலா பணமா என்று விசாரணை நடத்திவருகிறோம். பணத்தைக் கீழே போட்டுச் சென்றவர் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அது யாருடைய பணம் என்று விரைவில் தெரிந்துவிடும். மேலும், பணம் கிடைத்த தகவல் வருமானவரித்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்திவருகின்றனர்" என்றனர். 

பணத்தை கைப்பற்றி போலீஸ்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரோந்து போலீஸாரிடம் விசாரித்தபோது பைக்கில் மூன்று பைகளுடன் ஒருவர் சென்றுள்ளார். போலீஸாரைப் பார்த்ததும் அவர் தப்பி ஓடியுள்ளார். வேகமாகச் சென்றதால் பைக்கிலிருந்து பைகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்துள்ளது. அதை எடுத்தால் அந்த நபர் எங்களிடம் சிக்கிக்கொண்டிருப்பார். இதனால்தான் எங்களிடமிருந்து தப்பிக்க அவர் கீழே விழுந்த பைகளை எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளார். இதனால் அந்தப் பணம் கணக்கில் வராததாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாயை கீழே போட்டுவிட்டு தப்பிய நபரைத் தேடிவருகிறோம். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். அதில் பைக்கில் தப்பிச் செல்லும் நபரின் உருவம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். இதனால் அவர் எங்கு சென்றார் என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்றார்.

இதனிடையே, சாலையில் கிடந்த 1.50 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அதிகாலையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.