Published:Updated:

`ரீடிங் எடுக்கும் பெயரில் பாலியல் தொல்லை!’- பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த மின் ஊழியர்

`ரீடிங் எடுக்கும் பெயரில் பாலியல் தொல்லை!’- பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த மின் ஊழியர்
`ரீடிங் எடுக்கும் பெயரில் பாலியல் தொல்லை!’- பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த மின் ஊழியர்

வீட்டுக்கு ‘ரீடிங்’ கணக்கெடுக்க வரும் மின் ஊழியர், 5 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுப்பதாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கூறியிருக்கிறார்.

`ரீடிங் எடுக்கும் பெயரில் பாலியல் தொல்லை!’- பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த மின் ஊழியர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொசவன்புதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காஞ்சனா (40), வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அதிகாரிகளிடம் கொடுத்தார். அதில், ``என் கணவர், வெளியூரில் தங்கி வேலைசெய்கிறார். மின்சார மீட்டரில் ‘ரீடிங்’ எடுக்கவரும் மின்வாரிய ஊழியர் ஒருவர், நான் தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு தவறாக நடந்துகொள்கிறார். அத்துமீறி வீடுபுகுந்து கையைப் பிடித்து இழுக்கிறார். இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால், மின் இணைப்பைத் துண்டித்துவிடுவதாக மிரட்டுகிறார். கடந்த 5 மாதங்களாக அந்த மின் ஊழியர் தொல்லைகொடுக்கிறார்.

இந்த நிலையில், நான் திட்டியதால் என் வீட்டுக்கு அபராதம் விதித்துள்ளனர். பி.கே.புரம் மின்வாரியப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று கேட்டதற்கு, ‘டோர் லாக்’ கட்டணமாக 2,375 ரூபாய் செலுத்த வேண்டும் என்றுகூறி, அங்குள்ள ஊழியர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்து ஏளனமாகப் பேசுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட மின் ஊழியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

Vikatan