Published:Updated:

கருத்துக் கேட்பு... நாடகமா? நல்ல விஷயமா?

அடிக்கப்போகுது ஷாக்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஷாக் அடிக்கப்போகிறது. ஆனால், எப்போது என்பதுதான் தெரியவில்லை. அதற்கான முஸ்தீபுகளில் மும்முரமாக இருக்கிறது  மின் வாரியம்! 

மக்களை மிரட்டிக்கொண்டு இருக்கும் மின்கட்டண உயர்வு தொடர்பாக, சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் கடந்த 30-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திலேயே ஷாக் ரியாக்ஷன்கள் அதிகமாகத் தெரிந்தன. தங்களது கஷ்டங்களைக் கொட்டித் தீர்ப்பதற்காக பொதுமக்கள் ஏராளமாக வந்திருந்தார்கள்.

மென்மையாகப் பேசத் தொடங்கினார் திருவொற்றியூரைச் சேர்ந்த சுகாசினி. ''காய்கறியை கிலோவுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் என்று வாங்குவதைப் போல, இன்றைக்கு இத்தனை ரூபாய்க்கு மின்சாரம் பயன்படுத்தினேன் என்று சொல்லக்கூடிய நிலை வந்துடுச்சு. மாதச் சம்பளத்தில் ஒரு பாதியை மின் கட்டணத்துக்காக எடுத்து வைக்க வேண்டியிருக்கு. ஒரே வளாகத்துக்குள் பல குடும்பங்களுக்கு வீடு வாடகைக்கு விடுபவர்கள், வாடகைதாரர்களிடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இப்படியே கட்டணத்தை உயர்த்திக்கிட்டுப் போனா, இலவச மின்சாரம் தாங்​கன்னு தட்டு ஏந்தும் நிலைதான் ஏற்படும்'' என்று சுகாசினி பேசி முடித்தபோது அமோக வரவேற்பு.  

கருத்துக் கேட்பு... நாடகமா? நல்ல விஷயமா?

திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், ''இலவச மின்சாரம்னு யாரும் தயவு செஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க. ஐ.டி. நிறுவனங்களுக்குச் சலுகைகளை அள்ளிக் கொடுக்கிறீங்க. ஆனா, விவசாயிகளுக்குத் தந்தா... அது இலவசமா? உணவு உற்பத்திக்கு இலவச மின்சாரம் தரவேண்டியது அரசாங்கத்தின் கடமைனு நினைக்கணும்'' என்று கையெடுத்துக் கேட்டுக்கொண்டார்.  

கருத்துக் கேட்பு... நாடகமா? நல்ல விஷயமா?

வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் தூயமூர்த்தி ஆகியோர் பேசுகையில், ''2008-ம் ஆண்டிலேயே குண்டு பல்புகளுக்கு பதிலாக சி.எஃப்.எல். பல்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. வீட்டுக்கு இரண்டு சி.எஃப்.எல். பல்புகள் தந்தால், மூன்றே மாதங்களில் எல்லா வீடுகளிலும் பிரகாசம் வரும். இதற்கு அனுமதி பெற்ற கம்பெனி என்ன ஆனது என்றே தெரியவில்லை. கேரள மாநிலத்தில் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு விட்டது. இதனால், 800 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு, புதிதாக ஒரு மின்நிலையத்தை அமைப்பதும் தவிர்க்கப்பட்டு உள்ளது. மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கும் அரசு

கருத்துக் கேட்பு... நாடகமா? நல்ல விஷயமா?

அலுவலகங்களின் மின்இணைப்பையும் துண்டிக்க வேண்டும். இப்படிச் செய்தால், 600 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வசூல் ஆகும். மின்சார சட்டத்தைச் செயல்படுத்தாத பட்சத்தில், வாரியத்தின் உரிமத்தையே ரத்துசெய்ய வேண்டும்'' என்று அதிர வைத்தனர்.  

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''கொள்ளைக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்​களுக்கும் செல்வச் செழிப்​பான வழிபாட்டுத் தலங்​களுக்கும் கட்டணச் சலுகை​யை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 13 லட்சம் வீடுகளில் இலவசமாக ஒரு விளக்குத் திட்டம் இருக்​கிறது. ஆனால், அந்த வீடுகளில் டி.வி. உள்ளிட்ட பல மின்சாதனங்களைப் பயன் படுத்துகிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்சம் மாதத்துக்கு 50 ரூபாய் வசூலித்தால்கூட, ஆண்டுக்கு 78 கோடி ரூபாய் கிடைக்கும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 300 நாட்கள் வெயில்தான். வீட்டுக் கூரை களில் இருந்து இரண்டு மெகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்காக ஏழு திட்டங்களுக்கு அரசு அனுமதி தந்தும் இரண்டு திட்டங்கள்தான் நிறைவேறி உள்ளன'' என்றார்.

அம்பத்தூரைச் சேர்ந்த கணபதி, ''விவசாயத்துக்கான இலவச மின்சாரம் தருவதை நிறுத்தி விட்டு, அவர்களுக்கும் குறைந்தபட்சக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்'' என்று சொன்னதும், அரங்கத்​தில் பலத்த எதிர்ப்பு. முன்னாள் எம்.எல்.ஏ. வேட்டவலம் மணிகண்டன் தலைமை​யிலான விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆணைய உறுப்பினர் நாகல்​சாமி இருக்கையில் இருந்து எழுந்துவந்து, அமைதிப்​படுத்தினார்.  

கருத்துக் கேட்பு... நாடகமா? நல்ல விஷயமா?

அடுத்துப் பேசிய தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி, ''ஐந்து தனியார் உற்பத்தியாளர்களிடம் மின்சாரம் வாங்கியதன் மூலம் மின்வாரியத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி, மின்வாரியமே 10,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியும். கடந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டபோது, ஐ.டி. நிறுவனங்களே கட்டணத்தைக் குறைக்குமாறு கேட்கவில்லை. ஆனால் மின்வாரியம் தானாகவே முன்வந்து, அவர்களுக்குக் கட்டணத்தைக் குறைத்தது. யூனிட்டுக்கு 2.80 ரூபாய் வரை சலுகை தரப்படுகிறது. அந்த நிறுவனங்கள் பிச்சையா எடுக்கின்றன?'' என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

சி.ஐ.டி.யு. மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், ''இந்தக் கருத்துக் கேட்பே ஒரு நாடகம். பொதுமக்களின் கருத்தைக் கேட்டு, அதன்படி கட்டணத்தை நிர்ண யிப்பதுதான் சரியான நடைமுறை. ஆனால், நடப்பது என்ன? அரசு கண்ஜாடை காட்டிவிட்டது. மின் வாரியம் ஒப்புக்கொண்டு விட்டது. ஆணையமும் சம்மதித்து விட்டது...'' என்று பேச, ஆணைய உறுப்பினர் நாகல்சாமி குறுக்கிட்டு, ''கட்டண உயர்வை அப்படியே ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. மின்வாரியம் விண்ணப்பம் செய்திருக்கிறது. அதை அனுமதித்து விசாரிக்கிறோம். அவ்வளவுதான்'' என்றார்.

''மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்குத் தலைவரே இல்லாமல் கருத்துக் கேட்பு நடக்கிறது'' என்று சுப்பிரமணியன் கூற, மீண்டும் எழுந்த நாகல்சாமி, ''கட்டணம் மாற்றி அமைப்பு தொடர்பாக மின்வாரியம் விண்ணப்பம் செய்திருக்கிறது. 120 நாட்களுக்குள் இது பற்றி விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டிய நிலையில் நாங்கள் சட்டப்படித்தான் நடந்துகொள்கிறோம்'' என்றார்.  

சுப்பிரமணியனோ, ''2011 டிசம்பர் 31-ம் தேதியன்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி காலியாகும் என்பது முன்பே அரசுக்குத் தெரியும். வாரியத்துக்கும் தெரியும். அடுத்த தலைவரை நியமிக்காமலேயே, இவ்வளவு அவசர அவசரமாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவேண்டிய அவசியம் என்ன என்றுதான் நாங்கள் கேட்கிறோம்'' என்று தன்னுடைய பிடியை விடாமல் பேச, ஆணையத்தின் மற்றொரு உறுப்பினரான வேணுகோபால் விளக்கம் அளித்தார்.

''எல்லோரையும் பேலன்ஸ் செய்துதான் நாங்கள் செயல்பட முடியும். ஆணையத்தின் தலைவர் இல்லாமல், இரண்டு உறுப்பினர்கள் இருந்தாலும் ஆணையம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடியும். இந்தக் கூட்டத்தை நாடகம்னு சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது'' என்றார் வேணுகோபால்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசும்போது, ''கடந்த 10 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கியதன் மூலம், மின் வாரியத்தை நஷ்டம் அடையச் செய்துவிட்டனர். ஆணையமும் இந்த இழப்பை தடுக்கவில்லை. தவறு செய்த மின்வாரிய அதிகாரிகள், ஆணையத்தின் உறுப்பி னர்களைக் கைதுசெய்ய வேண்டும்'' என்றார்.

உடனே, சூடாகிப்போன உறுப்பினர் வேணுகோபால், ''நாங்கள் முறைப்படி தகுதியுடன்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறோம். இப்போது நினைத்தால்கூட இங்கிருந்து இறங்கிப் போய்விடலாம்'' என்ற தோரணையில் பேச, அதே நேரத்தில் பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர், திருமுருகனுக்கு எதிராக கூச்சலிட, கருத்துக்கேட்புக் கூட்டம் அமளிக் களமானது.

மாலையில் வந்த இயக்குநர் தங்கர்பச்சான், ''திரைப்பட இயக்குநராக அறியப்பட்டாலும், நான் ஒரு விவசாயி. 40 ஏக்கரில் பயிர்செய்து வருபவன். விவசாயத்துக்கு ஆறு மணி நேரம் மின்சாரம் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. எப்போதும் விவசாயத்துக்குத்தான் முதல்இடம் தர வேண்டும். விவசாய மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது'' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு நகர்ந்தார்.

இறுதியில் பேசிய மின்வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன், கட்டண உயர்வுக்கான காரணங்களை நியாயப்படுத்தி, 'ஆண்டுக்கு ஒரு முறை கட்டண உயர்வுக்குத் தயாராக வேண்டும்’ என்று எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு புறப்பட்டார்.

ஆகவே, பொதுஜனங்களே ஷாக்குக்குத் தயா​ராகுங்கள்!

- இரா. தமிழ்க்கனல்

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு