Published:Updated:

ராவணன்!

படம் எடுத்து ஆடிய பத்துத் தலைகள்!

பிரீமியம் ஸ்டோரி

திகாசத்தில் ராவணனுக்கு பத்துத் தலைகள். வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் சிவபெருமானிடம் வரம் வாங்கி இருந்ததாகச் சொல்வார்கள். இந்த ராவணனும் அப்படித்தான் இருந்துள்ளார். 

ராவணனுக்கும் அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்க பக்க​பலமாக இருந்த ஒன்பது தலைகள் என்று போலீஸ் வட்டாரம் வைத்திருக்கும் குறிப்பில் இருக்கும் பெயர்கள் இவைதான்!

ராவணன்!

மோகன்

ராவணனின் உதவியாளராக அறியப்பட்ட மோகனைப் பார்க்காமல், ராவணன் தரிசனம் கிடைக்காது. ராவணனின் ஒவ்வோர் அசைவும் மோகனுக்கு மட்டும்தான் தெரியும். ராவண ராஜ்ஜியத்தில் மோகன் இல்லாமல் ஓர் அணுவும் அசை​யாது.

'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி

ராவணனின் கல்லூரித் தோழர். கல்லூரிக் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்த நட்பினால்தான், எம்.எல்.ஏ., அமைச்சர் என்று இவரது கிராஃப் ஏறிக்கொண்டே போனது. நினைத்த நேரத்தில் ராவணனோடு பேசக்கூடிய​வர்களில் அக்ரியும் ஒருவர்.

ராவணன்!

உடுமலை ராதாகிருஷ்ணன்

உடுமலைப்பேட்டையில் கேபிள் தொழில் செய்து​கொண்டு இருந்த ராதாகிருஷ்ணன், அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்குத் தலைவர் ஆனது, ராவணனால் மட்டுமே நிகழ்த்த முடிந்த மாயாஜாலம். பொறுப்புக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும் ராதாகிருஷ்ணனை அடிக்கடி ராவணன் வீட்டில் பார்க்க முடிந்தது.

கே.வி.ராமலிங்கம்

மோகன் மூலம் ராவ​ணனுக்கு அறிமுகம்செய்து​வைக்கப்பட்டவர் கே.வி.ராம​லிங்கம். அறிமுகமே ஆழமாக ஊடுருவியதால், ராவணன் வீட்டில் சகஜமாக செல்லக்கூடியவராக மாறினார். மோகனைத் தாண்டி ராவணனுடன் நெருக்கமாக இருந்​தாலும், வழிகாட்டிய மோகனை இவர் மறக்க​வே மாட்டார். மோகன் எப்​போது ஈரோடு வந்தாலும், கே.வி.ஆர். வீட்டில் இருந்துதான் அவரை வரவேற்க கார் போகும் அளவுக்கு நட்பு.

ராவணன்!

தமிழ்மணி

இவரும் ராவணனின் கல்லூரி நண்பர். அண்ணா​மலைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய நட்பு அரசியல் வரை வந்தது. தேர்தல் காலங்களில் வெற்றிவாய்ப்பு குறித்து சர்வே எடுப்பதில் ஆரம் பித்து, அமைச்சர்களின் பல்ஸ் பார்ப்பது வரை அத்தனைக்கும் ராவணன், அம்பாகப் பயன்​படுத்தியது இவரைத்தான். ஆனால், கடந்த ஆட்சியின் இறுதியில் ஈகோ பிரச்னை காரணமாக ராவணன் தன்னை ஒதுக்கி ஓரங்கட்டியதாகவும், அவரது சம்பாத்தியம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் சொல்லி அம்மாவிடம் சரண்டர் ஆகியிருக்கிறார் தமிழ்மணி.

எஸ்.பி.வேலுமணி

ஜெயலலிதா வியந்து பாராட்டிய தீவிரக் களப் பணியாளர். ஆனால், ராவணனுடன் நெருக்கம் காட்டியதால் தண்டனைக்கு உள்ளாகி நிற்கிறார். கொங்கு மண்டலத்தில் ராவணனுக்காகப் பல காரியங்களைப் பார்த்த இரண்டு அமைச்சர்களில் வேலுமணியும் ஒருவர்.

கோவையில் சமீப காலத்தில் அதீத வளர்ச்சி அடைந்துள்ள 'பறவை’ பெயருடைய ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையிலும், ஜூவல்லரி ஒன்றின் பங்கு விஷயத்திலும் இவரையும் ராவணனையும் இணைத்து மாஜி அமைச்சர் ஒருவர் அம்மாவுக்கு ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார். இது இவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

கிணத்துக்கடவு தாமோதரன்

##~##

'யூ டூ தாமோதரன்?’ என்று லேட்டஸ்ட்டாக ஜெய​லலிதாவின் அர்ச்சனைக்கு உள்ளாகி இருக்கிறார். 'இவர் அமைச்சரானதே ராவண ராசியால்தான்’ என்று தாமோதரனுக்கும் ராவணனுக்குமான தொடர்புகள் குறித்து உளவுத்துறை முதல்வருக்குக் கொடுத்த ரிப்போர்ட்டின் விளைவுதான் மேறப்டி அதிர்ச்சிக்குக் காரணம். ராவணனின் பிரதிநிதியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர்தான் இப்போது வேளாண்மைத் துறையின் ஆக்டிங் அமைச்சராக இருக்கிறார். பணிநியமனம் தொடங்கி இடமாற்றம் வரை இவர் வைப்பதுதான் வரிசையாம். ராவணனின் பிரதிநிதி என்ற ஒரே காரணத்துக்காக அந்த மனிதரிடம் தாமோதரன் மௌனம் காப்பதே, ராவண விசுவாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது மேலிடத்துக்கு.

புத்திசந்திரன்

நீலகிரி மாவட்டத்தில் கழகத்துக்காக உருகி உருகி உழைத்தவர்கள் ஆயிரம் பேர் இருக்க, அறிமுகமே இல்லாத புத்திசந்திரன் வேட்பாளர் ஆக்கப்பட்டபோதே, இவர் ராவணன் ஆள் என்பது கட்சியினருக்குப் புரிந்துபோனது. எம்.எல்.ஏ. ஆன ஜோரிலேயே சுற்றுலாத்துறை அப்புறம் உணவுத் துறை என்று புத்தியின் கிராஃப் ஜிவ்வென ஏறியதும் ராவணன் ஆசீர்வாதத்தால்தான். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சி விசுவாசிகளை ஒதுக்கிவிட்டு, கசமுசாவென வேட்பாளர்களை புத்தி அறிவிக்கக் காரணமும் ராவண விசுவாசம்தான். ராவணனுக்கு சரிவு தொடங்கும் முன்பே புத்திசந்திரன் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட்டதும்... ராவணனின் கைங்கர்யம்தான். இப்போது, மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோய்விட, 'அம்மா நான் என்றுமே உங்கள் விசுவாசிதான்’ என்று பல்டி அடித்துக்கொண்டு இருக்கிறார் மனிதர்.

பார்த்திபன்

ராவணனின் தெற்கத்தித் தளபதிகளில் முக்கிய​மானவர். தீவிர தி.மு.க. அனுதாபியாக இருந்தவர், ஒரு கட்டத்தில், பழைய பழக்கத்தை விசிட்டிங் கார்டாக்கி ராவணனுடன் நெருக்கமானார். ராவணனின் நண்பர் என்ற முகமூடியை அணிந்ததன் மூலம், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க-வின் பெரும் சக்தியாக உருவெடுத்தார். மாவட்டச் செயலாளரை டம்மியாக்கித் தன் கைக்குள் போட்டுக்கொண்டு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தன் இஷ்டத்துக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்தார் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

''சசிகலாவின் உறவினர்... போயஸ் கார்டனுக்குள் எப்போது வேண்டுமானாலும் போய் வரக்கூடியவர், கொங்கு மண்டல அ.தி.மு.க.வை கவனித்துக்கொள்ளச் சொல்லி அம்மாவால் உத்தரவு போடப்பட்டவர்.... என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ராவணனுடன் பேசினோம். பழகினோம். அவர் சொன்னதை எல்லாம் கேட்டோம். செய்து கொடுத்தோம். அவரை அம்மா நீக்கி விட்டதால், அத்தோடு எங்களது நட்பையும் துண்டித்துக் கொண்டோம்'' என்பது இவர்களது பதிலாக இருக்கிறது!

- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு