Published:Updated:

முல்லைப் பெரியாறு: மெய்யும் - பொய்யும்!

ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

ம்பம் கே.எம்.அப்பாஸ், பெரியார் திராவிடர் கழகம், தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலகம், 73,1 லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. விலை ரூ.30

முல்லைப் பெரியாறு: மெய்யும் - பொய்யும்!

பிரமாண்டமான ஓர் அணையைப் பற்றி வந்திருக்கும் சிறு புத்தகம்... சிறப்பான புத்தகம். கம்பம் பகுதியைச் சேர்ந்த கே.எம்.அப்பாஸ் எழுதி இருக்கிறார்.

அரசியல் கட்சிகளின் அறிக்கைகளிலும் பொதுமக்களின் போராட்டங்களிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இன்று இருக்கிறது முல்லைப் பெரியாறு. இந்த அணையை இதுவரை இடிக்க விடாமல் காப்பாற்றிய மனிதர்களில் ஒருவர் கே.எம்.அப்பாஸ். முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ்நாட்டுக்குமான உரிமைகளை, அதற்குரிய அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தொடர்ந்து பேசிவந்தவர் இவர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்கள்தான் முல்லைப் பெரியாறு நீரால் பாசன வளம் பெறும் பகுதிகள். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பெரியாறு மற்றும் வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த இவர்தான், அணை தொடர்பாக நடந்த அனைத்து வழக்குகளுக்கும் தமிழக அரசுக்கே ஆவணங்களை வழங்கியவர். 2006-ம் ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த மகத்தான தீர்ப்புக்கு இவரது ஆதாரங்கள்தான் அடிப்படையாக அமைந்தன. இந்த தரவுகளை எளிய தமிழில் கேள்வி - பதில் வடிவத்தில் அப்பாஸ் எழுதி இருக்கிறார்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மை ஆக்க முடியும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறது கேரளா. அணை உடைந்தால் மூன்று மாவட்டங்களுக்குச் சேதம் ஏற்படும், 999 ஆண்டு ஒப்பந்தம் என்பதே போலியானது, நீர்மட்டத்தை உயர்த்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், 136 அடிக்கு மேல் தண்ணீர் மட்டத்தை உயர்த்தினால் வனம் அழிந்து விடும்... என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் அனைத்தையும் ஆழமாக மறுக்கிறார் அப்பாஸ். 'முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், அதனுடைய நீர் நேரடியாக இரண்டு மலை​களுக்கு இடையே சுமார் 48 கி.மீட்டர் தூரம் ஓடி முல்லைப் பெரியாறு அணையைவிட (15 டி.எம்.சி.) பல மடங்கு பெரிய பரப்பளவு உள்ள இடுக்கி அணையில் (70 டி.எம்.சி.) யாருக்கும் ஆபத்து இன்றிக் கலந்து விடும்’ என்று சொல்லி அனைத்து ஆபத்துக்களையும் மறுக்கிறார் அப்பாஸ்.

தமிழகத்தின் நியாயம் பேச மறுக்கும் சிலர், 'இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று அறிவுரை சொல்வதை அப்பாஸ் நிராகரிக்​கிறார். 'கடந்த 27 ஆண்டுகளில் தமிழக அரசு, கேரளாவுக்கு 32 கடிதங்கள் எழுதி விட்டது. தமிழக அமைச்சர்கள் திருவனந்​தபுரத்தில் நான்கு முறை பேசித் தோல்வி அடைந்துவிட்டனர். டெல்லியிலும் போய் பேசிவிட்டோம். 136 அடிக்கு மேல் நிலை​நிறுத்த விட மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள கேரள அரசியல்வாதிகளிடம் பேசி இனி பயன் இல்லை. கேரளாவில் அனைவரும் மலையாளிகளாகப் போராடு​கிறார்கள். நாம் தமிழர்களாக ஒன்றுபட்டுப் போராடினால்தான் அணையின் நீர் மட்டத்தை 152 அடிகளாக நிலைநிறுத்த முடியும்’ என்று தெளிவாய்ச் சொல்கிறார்.

கேரள அரசியல்வாதிகளின் பொய் முகங்களையும் தமிழக விவசாயிகளின் மெய்முகத்தையும் காட்டும் கண்ணாடியாய்

திகழ்கிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு