Published:Updated:

அடிதடியாய் மாறும் அணு உலைப் போராட்டம்!

அடிதடியாய் மாறும் அணு உலைப் போராட்டம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

கூடங்குளம் அணு உலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் சார்பில் அமைக்கப்​பட்ட குழுவும், தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவும் ஜனவரி 31-ம் தேதி நடத்துவதாக இருந்த நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை அமளிதுமளியால் புஸ்ஸாகப் போய்​விட்டது. 

போராட்டக் குழுவினர் மற்றும் அவர்களைப் பாது​காக்க வந்த மகளிர் அணியினர் மீது கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தாக்குதல் நடத்தப்​பட்டது. அதனால், 'உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதால், எங்களால் பேச்சு​வார்த்தையில் பங்கேற்க இயலவில்லை’ என்று போராட்டக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். இந்தத் தாக்குதல் சம்பவம் கூடங்குளத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் பதற்றம் பரவி இருக்கிறது.

அடிதடியாய் மாறும் அணு உலைப் போராட்டம்!

நடந்த சம்பவம் குறித்து புஷ்பராயனிடம் பேசினோம். ''மத்தியக் குழுவுடன் பேசுவதற்கு நான், மை.பா.ஜேசுராஜ், சுப.உதய​குமாரன் ஆகியோர் காரில் கிளம்பிய போதே, எங்கள் மீது தாக்குதல் நடத்த கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கும்பல் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனால், நாங்கள் உஷாராகி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அந்தத் தகவலை தெரிவித்தோம்.

அடிதடியாய் மாறும் அணு உலைப் போராட்டம்!

அவரும் எங்களிடம், 'பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலமாக செஞ்சிருக்கோம். கவலைப்படாமல் வந்து சேருங்கள்’ என கூறினார். தகவல் அறிந்து எங்களின் மகளிர் குழுவினர் எங்களுக்குப் பின்னே வந்தார்கள். நாங்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்ததும் அதற்காகவே காத்திருந்த ஒரு கும்பல் கல் வீச்சில் ஈடுபட்டது. நான் காரைவிட்டு இறங்கியபோது ஒருவர் ஓடிவந்து காரின் கதவில் மிதித்தார். என்னுடைய நெஞ்சில் கார் கதவு பலமாக இடிக்க, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு டிரைவர் ஸீட்டி​லேயே உட்கார்ந்துவிட்டேன். எங்களைப் பாதுகாக்க வந்த பெண்களையும் மனிதாபிமானமே இல்லாமல் அந்தக் கும்பல் அடித்து உதைத்தார்கள். இது காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய சதியின் ஒரு பகுதி.

அடிதடியாய் மாறும் அணு உலைப் போராட்டம்!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, 'பணிகள் நடக்கவில்லை’ என்று சொல்லும் அணுஉலை நிர்வாகம், ரகசியமாக உள்ளே வேலையை நடத்துகிறது. பராமரிப்பு பணிக்கு என்கிற பெயரில் 100 ஆட்கள் உள்ளே சென்றால், வெளியே 20 பேர்தான் வர்றாங்க. மற்றவர்கள் உள்ளேயே தங்கி வேலை செய்றாங்க. சமீபத்தில்கூட வெளியூரில் இருந்து 14 கன்டெய்னர்களில் பொருட்கள் வந்தன. தமிழக அரசை ஏமாற்றும் இத்தகைய செயல்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்'' என்றார் ஆக்ரோஷத்துடன்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் உடையார், இந்து தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரான வெட்டும்​பெருமாள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசும் இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், ''நாங்கள் மத்தியக் குழுவை சந்தித்து, கூடங்குளம் அணு உலையைத் திறக்க வேண்டும் என்று மனு கொடுக்க, முன்கூட்டியே தகவல் தெரிவித்து எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் காத்திருந்தோம். முன்தினம் வரை, பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று பேசிவந்த போராட்டக் குழுவினர், பிரச்னையை உருவாக்குவதற்காகவே பெண்களையும்  அழைத்துக்கொண்டு, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் வந்தார்கள். அந்தப் பெண்கள்தான் எங்களை எதிர்த்து முதலில் கோஷம் போட்டார்கள். நாங்களும் பதில் கோஷம் போட... கைகலப்பில் முடிந்துவிட்டது.

இரண்டு தரப்பிலுமே பலருக்குக் காயம் ஏற்பட்டு உள்ளது. இரண்டு பக்கமும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் தரப்பு  ஆட்களை மட்டும் கைது செய்துள்ள போலீஸ், அவர்கள் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை. 163 வழக்குகள் உள்ள சுப.உதயகுமாரன் சுதந்திரமாகத் திரிகிறார். கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்திக்கிறார். இதுதான் ஜனநாயகமா?'' என்று கொந்தளித்தார்.

கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் முதல்வர் ஜெயலலிதா, தனது நிலைப்பாட்டை உறுதியுடன் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு