Published:Updated:

அரசு பணத்தை அபேஸ் செய்தாரா ஜஸ்ஜித் சிங்?

பர்னாலா மகனைச் சுற்றும் ஊழல் குற்றச்சாட்டு

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அதிகாரமிகு அப்பாவை வீல் சேரில் உட்கார​வைத்துவிட்டு, வாரிசுகள் வாரிச் சுருட்டிய கொடுமை முன்னாள் ஆளுநர் குடும்பத்​திலும் நடந்திருக்கிறது. போலி நிறுவனங்கள், போலி டெண்டர்கள் மூலம் பல்கலைக்கழகங்களின் பணத்தில் பர்னாலாவின் மகன் மஞ்சள் குளித்த​தற்குக் கட்டுக்கட்டாக ஆதாரங்கள் இருக்கின்றன'' - ஆணி அடித்தாற்போல் பேசுகிறார் லோகநாதன். 

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன், மரபணு மாற்றுப் பயிர்​கள், ஆற்று மணல் திருட்டு போன்ற விஷயங்களுக்கு எதிராகச் சட்ட ரீதியில் போராடுபவர். தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் ஜஸ்ஜித் சிங் பர்னாலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். ''தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு முறை கவர்னராகும் வாய்ப்பு கிடைத்த அபூர்வ மனிதர் பர்னாலா. கடந்த 2006-ம் வருடம் தமிழக கவர்னர் பதவியை ஏற்று பஞ்சாபில் இருந்து அவர் சென்னை வந்தபோது, அவருடைய குடும்பமும் சென்னைக்கு ஜாகையை மாற்றியது. பர்னா​லாவின் மகன் ஜஸ்ஜித் சிங் பர்னாலா மேனேஜிங் டைரக்டராக இருந்த நிறுவனமும் சென்னைக்கு மாறியது. சண்டிகரில், 'பர்னாஸ் லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் மருந்துப் பொருட்களைக் கையாளும் நிறுவனம் அது. சென்னைக்கு மாறியதும் இந்த நிறுவனம், 'பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயருக்கு மாறி, கம்ப்யூட்டர் மென்பொருட்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா வியாபாரத்தில் இறங்கியது.

அரசு பணத்தை அபேஸ் செய்தாரா ஜஸ்ஜித் சிங்?

2006-ம் வருடம் வருமானவரித் துறைக்கு சமர்ப்பித்த ஆவணப்படி, பர்னாஸ் கம்பெனியின் அப்போதைய இருப்பு 300 ரூபாய்தான். ஆனால், 2010-ல் இருப்பு 3 கோடியே 76 லட்சம். சண்டிகரில் போணியாகாத இந்த நிறுவனம், சென்னையில் மட்டும் அமோக வளர்ச்சி அடையக் காரணமாக இருந்தவை, நம் பல்கலைக்கழகங்கள்தான். தமிழக கவர்னர் என்ற முறையில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருந்தார் பர்னாலா. அந்த அதிகாரத்தைத்தான் ஜஸ்ஜித் சிங் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார். துணை​வேந்தர்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர் பொருட்களையும் கேமராக்களையும் பர்னாஸ் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கி இருக்​கிறார்கள்.

குறைந்தபட்சம் மூன்று நிறுவனங்​களிடம் இருந்து விலைப் புள்ளிகளை வாங்க வேண்டும் என்று விதிமுறை இருப்பதால், குட் ஐ, சன் கம்ப்யூட்டர்ஸ், சிட்காம் ஸ்மார்ட் சொல்​யூஷன் பிரைவேட் லிட், ரெடீமா, டேட்டா விஷன் 21 லேர்னிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஐந்து நிறுவனங்களிடம் இருந்தே தொடர்ந்து டெண்டர் வாங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இந்த நிறுவனங்களை விட குறைவான விலையையே பர்னாஸ் நிறுவனம் குறிப்பிட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

இது எப்படி சாத்தியம் என்றால், அந்த ஐந்து நிறுவனங்களும் போலி என்று தெரிய வருகிறது.

அரசு பணத்தை அபேஸ் செய்தாரா ஜஸ்ஜித் சிங்?

'குட் ஐ’ என்ற நிறுவனம் சட்டப்​படி பதிவு செய்யப்படவே இல்லை, அந்த நிறுவனத்தின் எழும்பூர் முகவரியே போலியானது. அந்த முகவரியில் பெண்கள், குழந்தை களுக்கான ரெடிமேட் ஷோரூம் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கொட்டேஷன்​களில் உரிமையாளர் என்று சிவாஜிராவ் கையெழுத்து போட்டிருக்கிறார். இந்த சிவாஜி ராவ், பர்னாஸ் நிறுவனத்தின் து¬​ணத் தலைவர். ஆக 'குட் ஐ’ என்பது ஒரு போலியானநிறுவனம்.

சன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனமும் சட்​டப்படி பதிவு செய்யப்​பட​வில்லை, முகவரியும் போலி. அடுத்து, இருக்கிற சிட்காம் ஸ்மார்ட் சொல்​யூஷன் கம்பெனி, சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கம்பெனி ஆனால், அதன் டைரக்டர்களில் ஒருவரான கமாலுதீன், பர்னாஸ் நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அறிவுசெல்வம் என்பவர்தான், 2009-ம் வருடம் பர்னா லாவால் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பி​னராக நியமிக்கப்​பட்டவர். தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவரான டாக்டர் ராமசாமியின் மூத்த மகன். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் என்ற முறையில் அந்தப் பல்கலைக்​கழகங்களுக்குப் பல பொருட்களை வாங்குவதில் பர்னாஸ் நிறுவனத்துக்கு உதவி செய்துள்ளார்.

நான்காவதான ரெடீமா நிறுவனத்திலும் தில்லுமுல்லுதான். அதாவது சி.என்.சி. மெஷினரி வகைகளை உற்பத்தி செய்யும் ரெடீமா என்ற நிறுவனத்தின் பெயரை, பர்னாஸ் டீம் முறைகேடாகப் பயன்படுத்தி டெண்டரில் கலந்து கொள்ள வைத்திருக்கிறார்கள். உண்மையான ரெடீமா லோகாவுக்கும், இவர்கள் கொடுத் திருக்கிற லோகோவுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கடைசியாக இருக்கிற டேட்டாவிஷன் 21 லேர்னிங் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் நஜ்முதீன். இவர்தான் பர்னாஸ் நிறுவனத்தின் டைரக்​டர். பர்னாலா கவர்னராக இருந்த காலத்தில், ராஜ்பவனுக்குள் சகல செல்வாக்குடன் வளைய வந்தவர். ஆக நஜ்முதீனின் நிறுவனமும் கண்​துடைப்புக்காக ஒவ்வொரு டெண்டரிலும் கலந்துகொண்டு, பர்னாஸ் நிறுவனத்தைவிட அதிகத் தொகையைக் கேட்டுள்ளது.

ஜஸ்ஜித் சிங்கின் நிறுவனத்திடம், நெல்லை, கோவை, திருச்சியில் உள்ள அண்ணா தொழில்​நுட்பப் பல்கலைக்​கழகங்களும், கோவை வேளாண்மை, மதுரை காமராஜர், கோவை பாரதி​யார் உள்ளிட்ட 21 பல்கலைக்​கழகங்களும் பொருட்களை வாங்கி இருக்கின்றன. (தகவல் அறியும் உரிமைச் சட்டத்​தின்படி கேட்கப்பட்டதற்கு, பல பல்கலைக்​கழகங்கள் விவரம் தர மறுத்து விட்டதாம். அவையும் கிடைத்தால், தொகையின் மதிப்பு இன்னும் பல லட்சங்கள் அதிகரிக்கும்.) அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்தத் தவறு​களுக்கு உடந்தையாகத்தான் இருந்திருக்​கிறார்கள். இதை எல்லாம் ஜெயலலிதா தலைமையிலான அரசு உடனடி​யாகத் தீவிர விசாரணை செய்துகண்டு​பிடிக்க வேண்டும்'' என்கிறார் லோகநாதன் நெத்தி​யடியாக.

நாம் சென்னை வேப்பேரியில் இருக்கும் பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடர்பு​கொண்டு பேசினோம். தன்னை, மேலாளர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு பேசிய யஷ்வந்த், ''உங்களுக்கு வந்திருக்கிற குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்கத் தவறானது, பொய்யானது. ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுடன் பிசினஸ் செய்யும் பக்காவான கார்ப்பரேட் கம்பெனி இது. எங்கள் தரப்பில் சின்னத் தவறு இருந்தாலும்கூட, இந்த மாதிரியான வெளிநாட்டுக் கம்பெனிகள் பிசினஸ் பண்ண வருவாங்களா? இந்த பொய்ப் புகார்களை எல்லாம் பெருசுபடுத்தாதீங்க...'' என்றார் காரமாக. ஜஸ்ஜித் சிங் மற்றும் நஜ்முதினை நம்மிடம் பேசச் சொல்வதாகச் சொன்னார். ஆனால், இதுவரை அவர்கள் நம்மைத் தொடர்பு கொள்ளவே இல்லை.  

பதிவு செய்யப்படாத 'குட் ஐ’ நிறுவனத்தின் உரிமையாளராகவும், பர்னாஸ் கம்பெனியின் துணைத் தலைவருமாக இருக்கும் சிவாஜி ராவிடம் பேசினோம். ''நான் பர்னாஸ் கம்பெனியைவிட்டு வெளியே வந்து பல மாசங்கள் ஆச்சு. இந்தப் பிரச்னைக்கே நான் வரலை...'' என்று நழுவினார்.

ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தவரின் மகன் மீது விழுந்திருக்கும் மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டு இது. எனவே, ஜஸ்ஜித் சிங் உரிய விளக்கத்தைத் தருவார் என்றே எதிர்பார்க்கிறோம்.

- எஸ்.ஷக்தி, படம்: தி.விஜய் 

இலங்கைக்கு உதவிய பர்னாஸ்!

இலங்கையின் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியையும் எடுத்திருக்கிறது, பர்னாஸ் நிறுவனம். முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தின் அனுமதி மற்றும் ஆசிர்வாதத்துடன்தான் இது நடந்திருக்கிறதாம். உயர்தர கண்காணிப்பு கேமிராக்களை இந்தப் பணியில் பயன்படுத்தி, இலங்கை அரசாங்கத்தை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி ''தன்னுடைய முழு கடலோரப் பரப்பையும் கண்காணிப்பது இலங்கை அரசாங்கத்துக்கு பெரிய சவாலாகவும், சிரமமாகவும் இருக்கவே, கண்காணிப்பு முறைக்கு மாறினார்கள். வழக்கமான கேமிராக்களைப் பயன்படுத்தாமல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தெர்மல்-இமேஜிங் கேமிராக்களையும், மென்பொருளையும் இலங்கை கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்காக பயன்படுத்தினோம். கடலில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொருளையும் துல்லியமாகப் படம் பிடித்துவிடமுடியும்'' என்று சிலாகித்து ஒரு முறை பேட்டி  கொடுத்திருக்கிறார் சிவாஜிராவ்.  கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை மட்டும் இல்லாமல் இலங்கையின் சில சென்சிடிவ் ஏரியாக்களையும் கண்காணிக்க, பர்னாஸ் நிறுவனத்தை இலங்கை பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு