மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாயல் தத்வி (வயது 23). இவரின் கணவர் சல்மான் தத்வி. கடந்த 2018-ம் ஆண்டு பாயல் தத்விக்கு மும்பையின் புகழ்பெற்ற நாயர் மருத்துவமனையில் முதுகலை மருத்துவப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாயல் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், மனரீதியாக அவரை சீனியர் டாக்டர்கள் துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த 22-ம் தேதி நாயர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹாஸ்டல் ரூமில் பாயல் தத்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், பாயலின் சாதியைச் சொல்லி சீனியர்கள் மன உளைச்சல் கொடுத்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைத் தொடர்ந்து, பாயலைத் துன்புறுத்திய சீனியர் டாக்டர்கள் ஹேமா அகுஜா, பக்தி மகாரே, அங்கீதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். பாயலின் தற்கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று முன்தினம், மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பாயல் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் என பாயல் குடும்பத்தின் ஆலோசகர் கூறியுள்ளார். ``பாயல் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது தற்கொலை இல்லை கொலை. குற்றவாளிகள் மூவரும் பாயலின் உடலை வேறு எங்கோ எடுத்துச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்துக்கு பிறகே மீண்டும் கல்லூரிக்குக் கொண்டு வந்துள்ளனர். பாயலின் உடல் சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கான தடயம் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்த வழக்கைக் கொலை வழக்காகவே விசாரிக்க வேண்டும்” என நிதின் பேசியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் வாதாடிய பாயல் தரப்பு வழக்கறிஞர் ஜெய்சிங் தேசாய், `` குற்றவாளிகளைக் குறைந்தது 14 நாள்கள் காவலில் வைக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் உண்மையைக் கூற பயப்படுகின்றனர். சாட்சி கூறும் அனைவருக்கும் குற்றவாளிகள் மூத்த மருத்துவர்கள் என்பதால் அவர்கள் பேச மறுக்கின்றனர். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தவில்லை என்றால் சமூக ரீதியிலான பிரச்னைகள் ஏற்படும். குற்றவாளிகளின் வாட்ஸ்அப் சாட்டையும் போலீஸார் சோதனை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று மருத்துவர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர், ``பாயல் தற்கொலை செய்துகொண்டபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன் ஆதாரங்கள் அனைத்தும் காவல்துறையினரிடம் உள்ளது. இப்படியிருக்க அவர்கள் எப்படி கொலை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாயல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹேமா அஹுஜா, பக்தி மேஹர் மற்றும் அன்கிதா ஆகிய மூன்று மூத்த மருத்துவர்களையும் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.