`அய்யா நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா..!'- தாம்பரம் காவல் நிலையத்தில் `ஷாக்'கான திருடன் | Police arrested a man in jewel fraud case

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (01/06/2019)

கடைசி தொடர்பு:19:01 (01/06/2019)

`அய்யா நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா..!'- தாம்பரம் காவல் நிலையத்தில் `ஷாக்'கான திருடன்

தாம்பரம் மருத்துவ மாணவியிடம் தங்கச் செயினை அபகரித்தவரிடம் உதவி கமிஷனர் அசோகன் விசாரித்தார். அப்போது, `அய்யா நீங்க இங்கேதான் இருக்கிறீர்களா' என்று செயினை ஏமாற்றியவர் பதறியபடி கூறியுள்ளார். 

தாம்பரம் மருத்துவ மாணவியிடம் செயினை பறித்த திருடன்

தாம்பரம் சித்தமருத்துவமனை அருகே கல்லூரி பஸ்சுக்காக மருத்துவ மாணவி ஒருவர் காத்திருந்தார். அவரிடம் 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேச்சுக் கொடுத்தார். நான் உன்னுடைய அப்பாவின் நண்பர் என்று அறிமுகம் செய்த அந்தநபர், மாணவியிடம் அன்பாகப் பேசினார். அந்த நபரின் பேச்சை முழுமையாக நம்பினார் மாணவி. இந்தச் சமயத்தில் உனக்கு தோஷம் உள்ளது. அதனால் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று மாணவியிடம் அந்த நபர் கூறினார். அதற்கு மாணவியும் சம்மதித்தார். தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள ராமர்கோயிலுக்கு மாணவியை அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மாணவி அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினைக் கழற்றி தரும்படி அந்த நபர் கூறினார். மாணவியும் செயினைக் கழற்றிக் கொடுத்தார். 

இதையடுத்து, கோயிலை மூன்று முறை சுற்றிவரும்படி மாணவியிடம் அந்த நபர் கூறினார். அதன்படி மாணவியும் செய்தார். அப்போதுதான் மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செயினை வாங்கிய நபர் அங்கு இல்லை. அவரை கோயில் முழுவதும் மாணவி தேடினார். ஆனால், அவர் கோயில் மற்றும் அந்தப் பகுதியில் இல்லை. அதன்பிறகே ஏமாற்றப்பட்டதை மாணவி உணர்ந்தார். 

இதையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் அசோகன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சையத், சேகர், கஜபதி, தேவிகா மற்றும் தனிப்படை காவலர் மதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, மாணவியிடம் செயினை ஏமாற்றிய நபரைப் பார்த்ததும் உதவி கமிஷனர் அசோகனுக்கு அடையாளம் தெரிந்தது. 

தாம்பரம் மருத்துவ மாணவியிடம் செயினை பறித்த திருடன்

தமிழகம் முழுவதும் தோஷம் கழிப்பதாகக் கூறி ஏமாற்றும் சுரேஷ்குமார்தான் மாணவியிடமும் அதே ஸ்டைலில் செயினைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சுரேஷ்குமாரை போலீஸார் தேடினர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சுரேஷ்குமார் சிக்கினார். அவரை கைது செய்த போலீஸார் தங்கச் செயினையும் மீட்டனர். 

சுரேஷ்குமாரின் ஃப்ளாஷ்பேக் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``வேலூர், வாணியம்பாடி, ஆம்பூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால், தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றி நகைகளைப் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் சுரேஷ்குமார். இவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

சேலத்தில் நர்ஸ் ஒருவரை தோஷம் கழிப்பதாகக் கூறி தங்கச் செயினை சுரேஷ்குமார் பறித்தார். சேலத்தில் மட்டும் சுரேஷ்குமார் மீது திருட்டு உள்ளிட்ட 8 வழக்குகள் உள்ளன. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தங்கச் செயினை ஏமாற்றி பறித்த வழக்கில் 5 ஆண்டுகள் சுரேஷ்குமாருக்கு தண்டனையும் கிடைத்தது. தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியில் வந்த சுரேஷ்குமார், கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் கேட்டரிங் வேலைக்குச் சென்ற சுரேஷ்குமாருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றி தங்கச் செயினைப் பறிக்கத் தொடங்கியுள்ளார் சுரேஷ்குமார். 

இந்தச் சமயத்தில்தான் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவரின் மகள், தாம்பரம் சித்தா கல்லூரியில் படிக்கும் தகவல் சுரேஷ்குமாருக்குத் தெரியவந்தது. அந்த மாணவியைச் சந்தித்த சுரேஷ்குமார், மாணவியின் குடும்ப விவரத்தைக் கூறியுள்ளார். இதனால் தான் சுரேஷ் குமாரை மாணவி நம்பியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுரேஷ்குமாரை கைதுசெய்துள்ளோம்'' என்றார். 

  தாம்பரம் மருத்துவ மாணவியிடம் செயினை பறித்த திருடன் கைது

சுரேஷ்குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``சிறைக்குச் சென்ற பிறகு திருந்தி வாழ வேண்டும் என்றுதான் முடிவு செய்தேன். இதற்காகப் பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன். ஆனால், குறைவான சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அதிக வேலை வாங்கினர். எனக்குக் குடும்பம் இல்லை. இதனால், என் தேவைகளை மட்டும் சமாளிக்க பந்திபரிமாறும் வேலைக்குச் சென்றேன். அங்கு எனக்கு குறைந்த சம்பளத்தைக் கொடுத்தனர். அதோடு அங்கு நடந்த கசப்பான சம்பவங்களால் வேலையை விட்டு நின்றேன். வழக்கம் போல தோஷம் பரிகாரம் எனக் கூறி பெண்களிடமிருந்து நகைகளைப் பறிக்க ஆரம்பித்தேன். நகைளை விற்று அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் வாழ்ந்தேன். சென்னையில் ஏமாற்றினால் அடுத்த நாளே வேறு எங்காவது சென்றுவிடுவேன். இதனால் என்னை போலீஸார் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மருத்துவ மாணவியிடம் செயினைப்பறித்த வழக்கில் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.


சுரேஷ்குமார் எப்படி ஏமாற்றுவார் என்று போலீஸார் கூறுகையில், ``பார்ப்பதற்கு ஜோதிடர் போல இருக்கும் அவர், யாரைப் பார்த்தாலும் சகஜமாகப் பேசுவார். அப்போது அவர்களின் குடும்பச் சூழல், மன கஷ்டம் போன்றவற்றை தெரிந்து கொள்வார். இதற்காக பஸ் ஏற காத்திருக்கும் பயணிகளைப் போல பஸ் நிறுத்தங்களில்தான் சுரேஷ்குமார் தோஷம், பரிகாரம் கழிக்க ஆள்களை தேர்வு செய்வார். பெரும்பாலும் மருத்துவத் துறையில் பணியாற்றும், படிக்கும் பெண்களுக்குத்தான் வாழ்க்கையில் பல சங்கடங்கள் இருக்கும் எனக் கருதும் சுரேஷ்குமார் அந்தத் துறையைச் சேர்ந்தவர்களை குறி வைத்தே ஏமாற்றிவந்துள்ளார். சுரேஷ்குமார், எங்கு எல்லாம் கைவரிசை காட்டினார் என்று விசாரித்துவருகிறோம்'' என்றனர். 

சுரேஷ்குமாரிடம் உதவி கமிஷனர் அசோகன் விசாரணை நடத்தியபோது, ``அய்யா நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா. தெரிந்திருந்தால் இந்தப் பக்கமே தலைவைத்திருக்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். தாம்பரத்தில் உதவி கமிஷனராகப் பணியாற்றும் அசோகன், சேலத்தில் பணியாற்றியபோதுதான் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனையும் கிடைத்தது. ஆண்டுகள் கடந்தபிறகும் சுரேஷ்குமார் மீண்டும் உதவி கமிஷனர் அசோகனிடம் சிக்கியுள்ளார்.