`விபத்துக்கு முன்னர் பாலபாஸ்கர் பேசிய போன்கால்!’ - கேரள இசைக்கலைஞர் மரணத்தில் புதிய திருப்பம் | new twist in balabhaskar death

வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (01/06/2019)

கடைசி தொடர்பு:14:27 (01/06/2019)

`விபத்துக்கு முன்னர் பாலபாஸ்கர் பேசிய போன்கால்!’ - கேரள இசைக்கலைஞர் மரணத்தில் புதிய திருப்பம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலினிஸ்டுமான பாலபாஸ்கர். இவர் கடந்த வருடம் அக்டோபர் 25-ம் தேதி திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானது. 

பாலபாஸ்கர்

PhotoCredit : Twitter/@jasminejasabc

இந்த விபத்தில் பாலபாஸ்கருக்குப் பலத்த அடிபட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஒரு வார தீவிர சிகிச்சைக்குப் பிறகு இசையமைப்பாளர் பாலபாஸ்கரும் உயிரிழந்தார். அவரின் மனைவி தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ளார். குழந்தையுடன் பாலபாஸ்கர் இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன. பாலபாஸ்கரின் இறப்பு மொத்த கேரளாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்து நடந்து ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதில் திடீர் திருப்பமாக பாலபாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

கார்டூன்

PhotoCredit : Twitter/@angel172431

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் யாரோ இருவர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 29-ம் தேதி விமானநிலையத்தைச் சுற்றி வளைத்த அதிகாரிகள் ஐ.டி ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கைது செய்யப்பட்டவர் ப்ரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது. இவர்களுடன் சேர்த்து இன்னும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். 

தங்கம் கடத்தல்

ப்ரகாஷன் தம்பியிடம் நடந்த விசாரணையில் அவர் தன் முந்தைய தொழில் பற்றித் தெரிவித்துள்ளார். அப்போது கேரள விபத்தில் இறந்த, வயலின் கலைஞர் பாலபாஸ்கரை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் தான் அவரிடம் மேலாளராக பணியாற்றியுள்ளேன் எனவும் கூறியுள்ளார். இதன் பின்னர் இந்த வழக்கு கேரளா முழுவதும் கவனம் பெற்றது.

தங்கக் கடத்தல் வழக்கில் பாலபாஸ்கர் பெயர் அடிப்பட்டதால் அதற்கு அவரின் மனைவி லக்‌ஷ்மி விளக்கமளித்து பாஸ்கரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், `` தங்கக் கடத்தல் வழக்கில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள ப்ரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் பாலபாஸ்கரின் மேனேஜர்கள் கிடையாது. பாலபாஸ்கரின் ஒருசில இசை நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக வேலை செய்துள்ளனர் அவ்வளவுதான். அதற்காக அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டுவிட்டது. என் கணவருக்கும் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் வேறு எந்த தொடர்பும் கிடையாது. ஒரு இறந்த கலைஞரை தேவையில்லாமல் இந்த வழக்கில் இழுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் இப்படியான விஷயங்களைக் கேட்கும்போது கஷ்டமாக உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.

பாலபாஸ்கர்

ஆனால், இந்த வழக்கில் பாஸ்கரின் தந்தை கூறியுள்ள சில விஷயங்கள் அவரின் இறப்பில் சந்தேகத்தைத் தூண்டும் விதமாக உள்ளது.  ``பாலபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், தற்போது அவனுடன் பணிபுரிந்தவர்கள் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தால் என் மகன் கொலை செய்யப்பட்டானா எனச் சந்தேகம் எழுகிறது. இது தொடர்பாக நான் புகார் அளிக்கவுள்ளேன். 

விபத்துக்குள்ளான கார்

சந்தேகம் வெறும் கைதோடு நிற்கவில்லை. கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக பாலபாஸ்கர் இறுதியாக ப்ரகாஷனுடன்தான் போனில் பேசியுள்ளார். விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தை முதலில் அடைந்தது ப்ரகாஷன் தம்பியும் விஷ்ணுவும்தான். பாஸ்கர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் ப்ரகாஷன் தம்பிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஸ்கர் இறந்த பிறகு அவர்கள் எங்கள் வீட்டில் யாரையும் வந்து சந்திக்கவில்லை. 

இவை அனைத்துமே எனக்குச் சந்தேகத்தை தூண்டுகிறது. பாஸ்கரின் தொழில் மற்றும் பிற பணம் தொடர்பான விஷயங்கள் எங்களை விடவும் விஷ்ணுவுக்கு நன்றாகத் தெரியும். பாஸ்கரும் விஷ்ணுவும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். பாலக்காட்டில் உள்ள ப்ரகாஷனும், விஷ்ணுவும் வெளிநாடுகளில் சில தொழில்கள் செய்து வருகிறார்கள். விஷ்ணு அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருவான். பணத்துக்காக இவர்கள் என் மகனைக் கொலை செய்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது” என்று பாலபாஸ்கரின் தந்தை உன்னி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News Credits : Mathrubhumi