`மாம்பழத்தைச் சாப்பிட்டதுக்கு தூக்குல தொங்கவிட்டுட்டாங்க!'- பட்டியலின வாலிபருக்கு நிகழ்ந்த சோகம் | Dalit man killed for allegedly stealing mangoes in andhra

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (01/06/2019)

கடைசி தொடர்பு:20:18 (01/06/2019)

`மாம்பழத்தைச் சாப்பிட்டதுக்கு தூக்குல தொங்கவிட்டுட்டாங்க!'- பட்டியலின வாலிபருக்கு நிகழ்ந்த சோகம்

மாம்பழம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞரைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்

ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோலாலா மமிதாடா பகுதியைச் சேர்ந்தவர் பிகி ஸ்ரீனிவாஸ். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கடந்த புதன்கிழமை தன் மனைவி மற்றும் குழந்தைகளை அவரது சொந்த ஊரில் இறக்கிவிட்டுட்டு தனது பைக்கில் மமிதாடா பகுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் சிங்கம்பள்ளி பஞ்சாயத்து ஆபீஸில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். இவரின் இறப்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டார் என ஊர் முக்கிய பிரமுகர்கள் சாட்சியங்கள் அளித்திருந்தாலும், மனைவியை அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பியவர் எப்படித் தூக்கில் தொங்கினார். அதுவும் வேறு ஊரில் உள்ள பஞ்சாயத்து ஆபீஸுக்கு எப்படிச் சென்றார், போதாக்குறைக்கு அவர் உடலில் இருந்த காயங்கள் ஆகியவை சந்தேகங்களை எழுப்ப அவரின் மனைவி போலீஸில் புகார் அளித்தார். அவர் புகாரின் பேரில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். 

கொலை

கூடவே இந்த விவகாரத்தில் மனித உரிமை கமிஷன் உண்மை கண்டறியும் குழுவுடன் விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில் வெளிவந்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி ரகம். உண்மை கண்டறியும் குழுவிடம் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில், ``ஸ்ரீனிவாஸ் தன் மனைவி குழந்தைகளை ஊரில் இறக்கிவிட்ட பிறகு, வீடு திரும்பியுள்ளார். அப்போது சிங்கம்பள்ளி வழியே செல்லும்போது அங்கிருந்த பழத்தோட்டத்தில் இளைப்பாறியவர், அங்கே கீழே கிடந்த சில மாம்பழங்களை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த அங்கிருந்த காவலாளி மாம்பழத்தைத் திருவிட்டார் என அவரைப் பிடித்து வைக்கத் தோட்டத்தின் உரிமையாளர் உட்பட மற்றவர்கள் ஸ்ரீனிவாஸை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைய சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்தக் கொலையை மறைக்க அவர் பஞ்சாயத்து ஆபீஸுக்குக் கொண்டு சென்று அவரைத் தூக்கிலிட்டுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.

கைது

இதில் பஞ்சாயத்து ஊழியர் உட்பட 10 பேர் ஸ்ரீனிவாஸை அடித்தே கொலை செய்துள்ளனர். இதில் இருவர் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளனர். மீதமுள்ளவர்களைக் கைது செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. ``பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை சிங்கம்பள்ளி ஊர்க்காரர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஸ்ரீனிவாஸின் உறவினர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

news and photo credit: thenewsminute

நீங்க எப்படி பீல் பண்றீங்க