தண்ணீர் பிடிப்பதில் தகராறு! - தஞ்சையில் சமூக ஆர்வலர் அடித்துக் கொலை | Man beaten to death near tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (06/06/2019)

கடைசி தொடர்பு:20:20 (06/06/2019)

தண்ணீர் பிடிப்பதில் தகராறு! - தஞ்சையில் சமூக ஆர்வலர் அடித்துக் கொலை

தஞ்சையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சமூக ஆர்வலர் ஒருவரை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த்பாபு

தஞ்சாவூர் அடுத்த விளார் வடக்கு காலனியைச் சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயியான இவரின் மகன் ஆனந்த்பாபு. சமூக சேவைகளில் அதிகம் ஈடுபாட்டோடு இருப்பவர் ஆனந்த்பாபு. இவர் வசிக்கும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் குடிநீர் குழாய்க்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஆபரேட்டராகவும் இருந்து வந்தார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததையடுத்து சில தினங்களாகவே அந்தப் பகுதியில் தண்ணீர் வரவில்லை எனத் தெரிகிறது. இதற்காக ஆனந்த் பாபு அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து போராட்டமும் நடத்தியுள்ளார். பிறகு அந்தப் பகுதிக்கு தனியார் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

அப்போது  அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், அதிக குடங்களில் தன் குடும்பத்துக்கு  வேண்டிய தண்ணீரைப் பிடித்துள்ளார். இதை ஆனந்த்பாபு தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பிரச்னை ஏற்படவே குமார் மற்றும் அவரின் மகன்களான கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து ஆனந்த்பாபு மற்றும் அவரின் தந்தை தர்மராஜ் ஆகியோரை உருட்டுக்கட்டை மற்றும் அரிவாள் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆனந்த் பாபு மற்றும் தர்மராஜ் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தர்மராஜ்

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆனந்த்பாபு உயிரிழந்தார். தர்மராஜுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனந்தபாபு மற்றும் அவரின் தந்தை தர்மராஜைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி அவர்களது உறவினர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே  தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீஸார், அடிதடி வழக்கைக் கொலை வழக்காக மாற்றியதோடு ஸ்ரீநாத் என்பவரையும் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் மோதல்கள் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதுமே தண்ணீருக்கு கடும்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் தண்ணீருக்காக பெரும் மோதல் ஏற்பட்டு அது ஒரு கொலையில் முடிந்திருப்பது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க