`நான் உயிரோடுதான் இருக்கேன் சார்; இறப்புச் சான்றிதழ் வாங்கிட்டாங்க!'- கமிஷனர் ஆபீஸுக்கு வந்தபுகார் | The death certificate has been issued to the surviving person

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (07/06/2019)

கடைசி தொடர்பு:13:45 (07/06/2019)

`நான் உயிரோடுதான் இருக்கேன் சார்; இறப்புச் சான்றிதழ் வாங்கிட்டாங்க!'- கமிஷனர் ஆபீஸுக்கு வந்தபுகார்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ரவிக்குமார், ``நான் உயிரோடுதான் இருக்கேன் சார். ஆனால், இறப்புச் சான்றிதழ் கொடுத்திட்டாங்க, அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுங்க'' என்று புகார் தெரிவித்தார்.  

இறப்பு சான்றிதழ்

சென்னை சிட்லபாக்கம், 3-வது தெரு, ஜோதி நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``என் தந்தைக்கு சொந்தமான வீட்டில் என் சகோதரர் குடியிருந்துவருகிறார். கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டு வரி வசூலிக்க நகராட்சி ஊழியர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, என் தந்தையின் பெயரில் உள்ள வீட்டின் வரி ரசீதில் என் சகோதரரின் பெயர் இருந்தது. அதுதொடர்பாக நகராட்சி அலுவலகத்திலும் தாம்பரம் சார்-பதிவாளர் அலுவலகத்திலும் விசாரித்தேன். அப்போது என் சகோதரரின் பெயரில் ஆவணங்கள் மாற்றப்பட்டிருந்தன. மேலும், 2009-ம் ஆண்டு என்னைத் தவிர்த்து மற்ற வாரிசுகள் என் சகோதரருக்கு விடுதலைப் பத்திரமாக எழுதி கொடுத்த தகவல் தெரியவந்தது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் ஒருவரிடமிருந்து நான் இறந்துவிட்டதாக போலியாக இறப்புச் சான்றிதழ் வாங்கியுள்ள தகவலும் எனக்கு தெரிந்தது. நான் உயிரோடு இருக்கும்போதே எனக்கு இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர். நான் இதுவரைக்கும் எந்தவித ஆவண பத்திரத்திலும் கையொப்பமிடவில்லை. என் சகோதரர் என்னை ஏமாற்றியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ரவிக்குமாரிடம் பேசினோம். ``சார், எனக்கு சரியாக காது கேட்காது. நான் உயிரோடு இருக்கும்போதே எனக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்திட்டாங்க" எனக் கண்ணீர்மல்க கூறினார். ரவிக்குமார் கொடுத்த புகார் சொத்து பிரச்னை என்றாலும் அவர் இறந்துவிட்டதாக சமர்பிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.