`ஒற்றைச் சொல்லுக்காக  85 கொலைகள்!' - ஆயுள் தண்டனையோடு தப்பிய ஜெர்மன் நர்ஸ் | male nurse gets life term for killing 85 patients in german

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:25 (07/06/2019)

`ஒற்றைச் சொல்லுக்காக  85 கொலைகள்!' - ஆயுள் தண்டனையோடு தப்பிய ஜெர்மன் நர்ஸ்

ருணையே நிறைந்தவர்கள் நர்ஸ்கள். கேரளத்தில் கடந்த வருடம் நிபா வைரஸ் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தபோது, நர்ஸ் ஒருவரை நிபா வைரஸ் தாக்கியது. இதில், அந்த நர்ஸ் தன் உயிரையும் இழந்தார். நோயாளிகளுக்காக தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் சேவை செய்யும் செவிலியர்களுக்கு மத்தியில் 85 நோயாளிகளைக் கொடூரமாக கொலை செய்த நர்ஸ் ஒருவரும் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனை. 

ஜெர்மன் நர்ஸ்

ஜெர்மனியின் டெல்மன் ஹார்ட்ஸ் நகரில் நீல்ஸ் கோகல் என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மருத்துவமனையில் டாக்டர்கள் பரிந்துரைக்காத ஊசியை நோயாளியின் உடலில் இவர் செலுத்திக்கொண்டிருக்கையில் சக ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.  போலீஸ் விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. அதாவது, 2001-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நீல்ஸ் கோகல் 2005-ம் ஆண்டு வரை 85 பேருக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றது தெரியவந்தது. இந்தச் சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நர்ஸ் ஒருவரே நோயாளிகளைக் கொன்றதை அறிந்த  உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

விசாரணையின்போது, `பணி போரடித்ததால் இதயத்தைச் செயல் இழக்க வைக்கும் விஷ ஊசிகளை நோயாளிகளுக்குப் போடுவேன் என்றும் பின்னர் காப்பாற்றப் போராடுவேன் என்று சர்வசாதாரணமாக நர்ஸ் நீல்ஸ் பதில் அளித்துள்ளார். அதாவது, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் மருந்தைச் செலுத்திவிடுவார். நோயாளிகள் துடிக்கையில், அவர்களைக் காப்பாற்ற முயல்வார். முடிவில் நோயாளிகள் மரணத்தைத் தழுவுவார்கள். காப்பாற்றப்பட்ட நோயாளிகள் நீல்ஸைப் பார்த்து `கடவுள் ' என்பார்கள். அந்த ஒற்றை சொல்லுக்காக இத்தகைய கொடூரச் செயலில் நீல்ஸ் ஈடுபட்டுள்ளார். 

ஜெர்மன் நர்ஸ் இந்த வழக்கு விசாரணை ஓல்டன்பர்க் நகரில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீல்ஸ் கோகலுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி செபஸ்தியான் பக்மான் தன் தீர்ப்பில்,  `விளையாடுவது போன்று நோயாளிகளைச் சகட்டு மேனிக்குக் கொலை செய்துள்ளார். அவர் மட்டுமே இந்த விளையாட்டில் வெற்றி பெற்றுவிட்டு மற்றவர்களைப் பலி கொண்டுள்ளார் '' என்று குறிப்பிட்டுள்ளார். 

நீல்ஸ் கோகல் 200 பேர் வரை கொலை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிடிபடுவதற்கு முன்னரே 130-க்கு மேற்பட்டவர்கள் உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டதால் உடல் கூறு ஆய்வு செய்ய முடியவில்லை. விசாரணையில் 43 பேரை கொலை செய்ததை மட்டுமே நீல்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மற்ற கொலைகளை மறுத்துள்ளார். 15 விதமான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மனிய சட்டப்படி 15 ஆண்டுகள் சிறையில் இருப்பார். இனிமேல், வாழ்நாளுக்கும் நர்ஸ் தொழிலில் ஈடுபட முடியாது. தன்னால் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் நீல்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். அதேவேளையில், இத்தனை கொடூரக் கொலைகளை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க