போலீஸை அலறவிட்ட சைக்கோ கில்லர்! - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் | Will arrest psycho killer within 2 days, says Chennai police

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (07/06/2019)

கடைசி தொடர்பு:18:37 (07/06/2019)

போலீஸை அலறவிட்ட சைக்கோ கில்லர்! - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

 சைக்கோ கில்லர் செய்த கொலை

சென்னை மாதவரத்தில் குடிபோதையில் இருந்த இருவரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான சைக்கோ கில்லரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 

மே 26 அன்று காலையில் மாதவரம் பகுதியில் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். விசாரணையில் ரெட்டேரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா என்று தெரிந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அஸ்லாம், போலீஸாரிடம் தெரிவித்தார். அஸ்லாமின் மனைவி பல்கீஸ் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் ``தன் கணவர், நோன்பு கடைப்பிடிப்பதால் மதுகுடிப்பதில்லை. போலீஸார் தவறான தகவல்களைச் சொல்கின்றனர்'' என்று கூறியிருந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கத்துக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மே 31-ம் தேதி  அஸ்லாம் பாஷா இறந்தார். இதுகுறித்து  மாதவரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே இடத்தில் ஜூன் 3-ம் தேதி காலையில் நாராயணன் என்பவரின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டது. அவரும் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் நாராயணனின் சொந்த ஊர், தென்மாவட்டம் என்று தெரியவந்தது. வில்லிவாக்கத்தில் கூலி வேலை செய்துவருகிறார். திருநங்கைகளைத் தேடிவந்தபோதுதான் நாராயணனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தது.

மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தை ரகசியமாகக் கண்காணித்தனர். அதோடு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமராவில் சில காட்சிகள் பதிவாகியிருந்தன. அதை வைத்து போலீஸார் விசாரித்தபோது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை அடையாளம் கண்டனர். இந்தச் சம்பவத்துக்கும் திருநங்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரை நெருங்கிவிட்டோம். அந்த நபரை இன்று அல்லது நாளைக்குள் பிடித்துவிடுவோம் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``சைக்கோ கில்லரான இந்த நபரின் நடவடிக்கைகள் எல்லாம் வித்தியாசமாக உள்ளது. சமபாலின ஈடுபாட்டாளரான இந்த நபரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரிடம் விசாரித்தால்தான் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். சம்பந்தப்பட்ட நபர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்படும்'' என்றார்.

சென்னை பாடி மேம்பாலம் தொடங்கி மாதவரம் ரெட்டேரி பாலம் வரை சமூக விரோதச் செயல்கள் அதிகளவில் நடந்துவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு போதை பொருள்களும் தங்கு தடையின்றி கிடைத்துவருகிறது. 24 மணி நேரம் மதுபான சப்ளையும் உள்ளது. மாதவரம் பகுதியில் வடமாநிலங்களிலிருந்து ஏராளமான லாரிகள் தினமும் வருவதுண்டு. டிரைவர்களில் சிலர்தான் திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்களைத் தேடி பாலத்துக்கு அருகில் மற்றும் கண்ணகி நகர் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதியில் மறைவான இடத்திற்கு வருவதுண்டு. அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன. எனவே, இந்தப்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியை அதிகரித்தால் சமூகவிரோதக் குற்றங்கள் குறையும் என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.