`கிரிக்கெட்டில் ஜெயித்தவன் காதலில் தோற்றுவிட்டான்!' - இளைஞருக்காக உருகும் நண்பர்கள் | Tanjore youth committed suicide allegedly after love failure

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (07/06/2019)

கடைசி தொடர்பு:13:32 (08/06/2019)

`கிரிக்கெட்டில் ஜெயித்தவன் காதலில் தோற்றுவிட்டான்!' - இளைஞருக்காக உருகும் நண்பர்கள்

தஞ்சாவூரில் கிரிக்கெட்டில் தீவிரமாக காதல் கொண்டு விளையாடி வந்த இளைஞர் ஒருவர், திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரது இழப்பைத் தாங்க முடியாத அவரின் நண்பர்கள் அந்த இளைஞரின் உடலை ஆம்புலன்ஸில் வைத்து அவர் கிரிக்கெட் விளையாடிய மைதானம் முழுவதும் மூன்று ரவுண்ட் அடித்ததோடு மைதானத்துக்கு நடுவே சிறிது நேரம் நிறுத்தி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன் இவருக்கு வயது 27. கிரிக்கெட்டை அதிக அளவில் நேசித்த இவர் கிரிக்கெட் விளையாடுவதிலும் கில்லியாக திகழ்ந்துள்ளார். அரண்மனை அருகே உள்ள பீட்டர் பள்ளி மைதானத்தில் தினம் காலை, மாலை சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது மட்டும் இவருடைய விருப்பமான பொழுதுபோக்கு. மேலும், பல்வேறு ஊர்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவதோடு கோப்பைகளையும் வென்று வருவார். இவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அவர் காதல் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இதையடுத்து அழகப்பன் மனம் வெறுத்த நிலையில் காணப்பட்டிருக்கிறார். அதோடு கடந்த மூன்று  நாள்களுக்கு முன்பு எலி மருந்தை  சாப்பிட்டிருக்கிறார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன்றி  அழகப்பன் இறந்து விட்டார். இதையறிந்த அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் திரண்டதோடு கதறி அழுதனர். உறவினர்களும் கடும் சோகத்தில் காணப்பட்டனர். பின்னர்  உடல்கூறு பரிசோதனை முடிந்து அவரது உடல் ஆம்புலென்ஸ் மூலம்  வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸிற்கு முன்பும் பின்பும் நண்பர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது, அழகப்பனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் முதலில் அவர் கிரிக்கெட் விளையாடும் மைதானத்துக்கு எடுத்துச் சென்றதோடு மைதானம் முழுவதும் மூன்று முறை ரவுண்ட் அடித்தனர். பிறகு, மைதானத்தின் நடுப்பகுதியில் சிறிதுநேரம் வண்டியை நிறுத்தி வைத்து, `உலகத்திலேயே உனக்குப் பிடிச்ச இடம் இந்த கிரவுண்ட்தான்னு சொல்லுவ. எப்போதும் கிரவுண்ட சுத்திச் சுத்தி வருவ. ஆனா, இப்ப இங்கு எந்த அசைவும் இல்லாமல் கிடத்தப்பட்டு இருக்க. எங்களையும் இந்த மண்ணையும் விட்டுட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு. எழுந்திரிடா விளையாடலாம்'' என அழுதபடியே அஞ்சலி செலுத்தினர்  இதைப் பார்த்த அனைவரும் கண் கலங்கி நின்றனர். நண்பர்களின் இந்தச் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பிறகு உடலை ஊர்வலமாக வீட்டுக்குக் கொண்டுசென்று காரியங்களை முடித்த பிறகு தகனம் செய்தனர். இதுகுறித்து அழகப்பன் நண்பர்களிடம் பேசினோம். ``அழகுக்கு பிடிச்சதே கிரிக்கெட்டும் இந்த கிரவுண்டும்தான். எப்போதுமே அவன் ஓப்பன் பேட்ஸ்மேனாகத்தான் களம் இறங்குவான். அவன் களமிறங்கும்போதே எதிர் அணிக்கு கொஞ்சம் நடுக்கம் ஏற்படும். அவன் விளையாடினால் பந்து பறக்கும். கிரிக்கெட்டில் அவனுக்கு ரசிகர்கள் ஏராளாம். எந்த அளவுக்கு கிரிக்கெட்டில் அதிரடியைக் காட்டுவானோ, அதே அளவுக்கு இளகிய மனம் படைத்தவன். எல்லோரையும் அன்பால் கட்டிப் போட்டு வைத்திருப்பான். அவனுடைய முடிவு இப்படி இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. அவன் இல்லாமல் இனி எப்படி கிரிக்கெட் ஆட முடியும். உயிருள்ள இந்த மைதானம் அவன் இல்லாததால் இனி வெறும் கட்டாந்தரையாகவே தெரியும்'' என கண்கலங்கினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க