முன் விரோதத்தால் ரவுடி படுகொலை - பட்டப்பகலில் புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம் | rowdy murder near pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (08/06/2019)

கடைசி தொடர்பு:11:47 (08/06/2019)

முன் விரோதத்தால் ரவுடி படுகொலை - பட்டப்பகலில் புதுக்கோட்டையில் நடந்த பயங்கரம்

புதுக்கோட்டையில், ரவுடி ஒருவரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி

புதுக்கோட்டை, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ் (எ) சுரேஷ் பாண்டியன் (32). இவர்மீது புதுக்கோட்டை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் எனப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.பிரபல ரவுடியாகவும் வலம் வந்துள்ளார்.

 வழக்கம் போல், சுரேஷ்பாண்டியன் தனது நண்பர் ஆனந்த்துடன் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது டூவிலரில் வந்த 5 பேர் கும்பல் ஒன்று சுரேஷ் பாண்டியனிடம் தகராறு செய்துள்ளது. இதில், அந்தக் கும்பல் மறைத்துவைத்திருந்த அரிவாள்களை எடுத்து சுரேஷ் பாண்டியனின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளது.தப்பிக்க முயன்ற சுரேஷ் பாண்டியனை,விடாமல் விரட்டிச் சென்று வெட்டிவிட்டு, மர்மக் கும்பல் தப்பி ஓடியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க முயன்ற ஆனந்த்துக்கும் அரிவாளால் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, சுரேஷ் பாண்டியன் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்த ஆனந்த் சிகிச்சைபெற்றுவருகிறார். புதுக்கோட்டை திருவப்பூர் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்த மணி பாரதிக்கும், சுரேஷ்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மணி பாரதி தான் சுரேஷ் பாண்டியனை கூலிப்படை வைத்து திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். புதுக்கோட்டையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.