`என்னையா ஒதுக்குகிறீர்கள்?!' - சகோதரர், அவரின் 14 மாத மகளுக்கு விஷம் கொடுத்த பல் மருத்துவர் | Gujarat dentist arrested for poisoning brother and his daughter over family dispute

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (09/06/2019)

கடைசி தொடர்பு:11:40 (09/06/2019)

`என்னையா ஒதுக்குகிறீர்கள்?!' - சகோதரர், அவரின் 14 மாத மகளுக்கு விஷம் கொடுத்த பல் மருத்துவர்

குடும்ப உறுப்பினர்கள் தன்னை ஒதுக்குவதாகவும் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று நினைத்து தன் சகோதரர் மற்றும் அவரின் 14 மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த 28 வயதான பெண் பல் மருத்துவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

கைது செய்யப்பட்ட பல் மருத்துவர் கின்னாரி படேல்

Photo Credits: ZEE NEWS

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கின்னாரி படேல். 28 வயதான இவர் பல் மருத்துவம் படித்துவிட்டு வேலை பார்த்து வருகிறார். இவர், தன் சகோதரர் மற்றும் அவரின் மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டதாக அவரின் தந்தை நரேந்திர படேல் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக வழக்கை விசாரித்து வரும் பதான் காவல்நிலைய ஆய்வாளர் ஆர்.ஜி. சௌத்ரி தெரிவித்திருக்கிறார். 

இதுகுறித்து பாதான் போலீஸார் கூறுகையில், ``படேல் குடும்பத்தினர் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர். நரேந்திர படேலின் மூத்த மகனான ஜிகார், கடந்த 6 மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இவர்கள் தங்களின் சொந்த ஊரான பதான் கிராமத்துக்கு கடந்த மே மாதம் 5-ம் தேதி குடும்பத்துடன் சென்றிருக்கின்றனர். அப்போது, ஜிகார் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜிகார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். 

பல் மருத்துவர் கைது

அதேபோல், கடந்த மே மாதம் 30-ம் தேதி நரேந்திர படேலின் சகோதரர் வீட்டுக்கு அவர்கள் குடும்பத்துடன் சென்றிருக்கின்றனர். அப்போது, ஜிகாரின் 14 மாதப் பெண் குழந்தைக்கு உடல்நிலை குன்றியிருக்கிறது. அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது. மேற்கூறிய இரண்டு சம்பவங்கள் நடந்தபோதும் பல் மருத்துவரான கின்னாரி, சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார். சகோதரர் மற்றும் அவரின் 14 வயதுக் குழந்தை இறந்தபோது, எந்தவித சலனமும் இல்லாமல் இருந்திருக்கிறார் கின்னாரி. இதனால், அவர் மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இதுகுறித்து குடும்பத்தினர் கின்னாரியிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர், ஜிகார் மற்றும் அவரின் குழந்தை மஹி ஆகியோருக்கு விஷம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கின்னாரியைக் கைது செய்திருக்கிறோம்'' என்றனர். 

கொலை வழக்கில் பல் மருத்துவர் கைது

கின்னாரியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில்,``குடும்பத்தினர் தன்னை ஒதுக்கியதாகவும், மற்ற உறுப்பினர்கள் தனக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்றும் கின்னாரி நினைத்திருக்கிறார். இதனால், அவருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பழிவாங்கும் நோக்கில் ஜிகார் மற்றும் அவரின் 14 மாதக் குழந்தை மஹி ஆகியோருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்க கின்னாரி திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டபடி, அவர்கள் அருந்தும் குடிநீரில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் விஷம் கலந்து வந்திருக்கிறார். 

கடந்த மே 5-ம் தேதி ஜிகார் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்னர், அவரது வாயில் சயனைடு விஷத்தை கின்னாரி திணித்திருக்கிறார். அதேபோலவே, குழந்தை மஹி விஷயத்திலும் அவர் செய்திருக்கிறார்'' என்று இன்ஸ்பெக்டர் சௌத்ரி தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் விஷம் வைத்ததை கின்னாரி ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்த போலீஸார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.